பொது கவிதைகள் தொகுப்பு – 9

கவிஞர் கவி தேவிகா அவர்களின் இரு கவிதைகள் “மதுரமோகனன்”, “உண்மையுணர்ந்து உரைத்திடு உயிரே” , கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “கற்பு வனம்” மற்றும் கவிஞர் பூமணி அவர்களின் “அம்மா” – pothu kavithaigal thoguppu 9

pothu kavithaigal thoguppu 9

மதுரமோகனன்

அன்பால் அமுதூற்று பொழியும் அதிரூபனவன்..
ஆசைகளை எனக்குள்ளிருந்து ஆட்சி செய்யும்
ஆணவ கள்வனவன். இளங்காலை
வணக்கமியம்பும் இளங்கவிஞனவன்.
ஈரைந்து மாதங்கள் மட்டும் எனை சுமக்காத ஈசனவன்.
உடலாக்கம் அனைத்திலும் உயிராக உருளும் உன்மத்தனவன்.
ஊஞ்சலாக என்மனமதிலாடும் ஊசற்சீரவன்…
எனை படைத்துக் காக்கும் எகினனவன்.
ஏங்கிதவிக்கும் ஏந்திழையின் ஏக்கம் தீர்க்கும் ஏடனவன்.
ஐந்தெழுத்தை தனதாக்கி ஐயம் தெளிய ஐயுறவகற்றும் ஐம்முகனவன்.
ஒட்டொட்டி போல் என்னகமகலாது நிறைந்திருக்கும்
கைக்கிளையின் ஒள்ளியனவன்.
தடையின்றி என்னுள் நுழைந்து
ஓம்காரன் அவனென்பதை பிரம்ம ஓரையில் ஓதிய
ஓலைநாயகனவன்.
அவ்வபோது என் துயர்நீக்கி
மனமகிழ மார்க்கமருளும்
ஔடதமானவன்.
இஃதுபோல் இவனொருவன்போல் வரமருளும் தயாளனுமுண்டோ??!!!

உண்மையுணர்ந்து உரைத்திடு உயிரே

அன்னைத் தாலாட்டை
அவ்வபோது நியாபகப்படுத்தி
தவழ்ந்து செல்கிறது…….
தலைவருடி ………
தேகம்தீண்டி……
தென்பொதிகை தென்றல்காற்று……..

– கவி தேவிகா


கற்பு வனம்

அரும் பசியில்
உன் நினைவே
எனக்கு அமிர்தம்

நிலைக் கண்ணாடியில்
உனை நிறுத்த முயன்று
தோற்கிறது நினைவுத் தூரிகை

மாயனவள்..
இருந்தும் பொன்மான் பிழம்பில்
துள்ளிக்குதிக்கிறது
நினைவை தாண்டும்
ஆயுள்ரேகை

பிச்சை பாத்திரம் வழி
ஊடுருவும் இராவணன்
கைகளில் ஆயிரம்
பொன் விலங்கு

ஒரு துண்டு இதயத்தை
ஆயுள் ரேகைக்கு
அப்பால் வீசியெறிந்து
அளவோடு பயணிக்க
ஏதுவாகிறது நினைவு

நெருப்பில் மீண்ட
அவளது ஆன்ம வனம்
பொன்விலங்கோடு
அமர்தத்தை நிரப்பிக்கொடுக்கிறது
அசோகவனத்தில்..

– பொய்யாமொழி.பொ, தருமபுரி


அம்மா

இயற்கையின் மறு உருவம் இவள்!
எந்த உறவும் அவளுக்கு இணையாக
மாட்டார்கள் இவ்வுலகில் !
அவளின் நெற்றிக்கு இணையாக
பிறைச்சந்திரன் பொருந்தாமல் பிழையாகி
போவானோ!

அவளின் கருங்கூந்தலுக்கு கார்மேகம்
கூட தயங்கி வர மாட்டானோ!
அவளின் முத்து பற்களுக்கு முன்னால் பவள
முத்துக்கள் ஒளி இழந்து வாடுமோ!
அவளின் கூறிய விழியை கண்டு மின்னல்
ஒளி மங்கி காற்றில் கலந்துவிடும்!

அவளின் முகத்தில் ஒளியைக் கண்டு
சந்திரன் ஓடி ஒளிந்து கொள்வான்!

அவளின் தன்னலமற்ற குணத்தை எண்ணி
அனைத்து தெய்வங்களும் அவள் உள்ளே சென்று
ஒளிந்து விட்டார்களோ
அவளின் உடல் உழைப்பை கண்டு அறிஞர்கள்
வியந்து நிற்பார்களோ! – pothu kavithaigal thoguppu 9

கருணையே வடிவான உன்னை கண்டு வியந்தேன் அம்மா !
வார்த்தையால் சொல்ல முடியாத கவிதை நீ
எல்லைக்கோடே இல்லாத அன்பு அவளிடத்தில்
அவளின் அன்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்
பிறவி போதாது அம்மா உன்னை வர்ணிக்க
தன்னலம் கருதாத உயிரம்மா மட்டுமே இவ்வுலகில்..

– க.பூமணி, செஞ்சி, விழுப்புரம்

You may also like...

4 Responses

  1. ம. சக்தி வேலாயுதம் says:

    கவி தேவிகா அவர்களின் வரிகளில் காற்றாய் அன்னையவள் தவழ்கின்றாள்.
    அருமை…

    அமுதத்தை அசோகவனத்தில் அன்னையவள் நிரப்பி கொடுப்பது நிரம்பக் கொடுப்பது பொய்யாமொழி அவர்களின் உண்மை மொழியாய்…

    தன்னலமில்லா உயிர்மெய்யே அன்னை என எழுதியுள்ள பூமணி அவர்களின் பூவான எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்

    மூன்று கவிதை முத்துக்களும் அருமை

    ம. சக்தி வேலாயுதம்

  2. பொய்யாமொழி says:

    மதுரமோகனன் அழகோடு எடுத்துரைத்து கவிதேவிகா அவர்களுக்கும் பிரபஞ்சத்தின் அன்பின் பிறப்பிடம் அம்மாவை வணங்கிய கவி பூமணி அவர்களுக்கும் மனம்மகிழ் வாழ்த்துகள்.. கவிதைகளை வாசித்து உளம் மகிழும் என்போன்ற வாசகர்களுக்கும் நன்றியும் மகிழ்வும்.

  3. தி.வள்ளி says:

    முக்கனி விருந்து படைத்து விட்டார்கள் மூன்று கவிகளும்… படிக்க படிக்க திகட்டாத அருமையான சொற்சிலம்பம்…மனம் நிறைந்த பாராட்டுக்கள் மூன்று கவிகளுக்கும்..

  4. R. Brinda says:

    மூன்று கவிதைகளும் முக்கனிகளாய் இருக்கின்றன. பாராட்டுக்கள்!