பாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்
நண்பர்களுக்கு வணக்கம் புத்தக அறிமுகம் என்ற இந்தப் பகுதியில் நான் இன்றைக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் “பாரதியின் இறுதிக்காலம், கோயில் யானை சொல்லும் கதை” – bharathiyin iruthi kaalam puthaga vimarsanam
இந்த அறிமுகக் கட்டுரையில் நான் பாரதியைப் பற்றி சொல்லப் போவதில்லை, பாரதியை அவரது கவிதைகளை தமிழ்நாட்டில், தமிழ் பேசும் அனைவரும் தெரிந்திருப்பார்கள். இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை எனில் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது இறுதிக் காலத்தைப் பற்றி பல்வேறு கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து பாரதி இறந்தார் என்றும், யானை தாக்கி 10 முதல் 12 நாட்கள் கழித்து பாரதி இறந்தார் என்றும் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன – bharathiyin iruthi kaalam puthaga vimarsanam.
தினமணி நாளேட்டில் கட்டுரையாக
இந்தக் கதைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரு ய. மணிகண்டன் அவர்கள் பாரதியின் இறுதிக் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து தினமணி நாளேட்டில் கட்டுரையாக 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு, பின்னர் காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக புத்தகமாக வரப்பெற்றுள்ளது.
ய. மணிகண்டன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் ” பாரதியின் இறுதிக்காலம்” மிகவும் கவனம் பெற்றுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் முதல் பாகமாக அவரது கட்டுரையும்,இரண்டாவது பாகமாக பாரதியின் இறுதி படைப்பான “கோவில் யானை” நாடகம் அமைந்துள்ளது.
அவரது ஆய்வுகளின் படி…
பாரதியின் மகள் சகுந்தலா தேவி அவர்கள், பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்களது நினைவுகளிலிருந்து சொல்ல சொல்ல எழுதிய புத்தகத்திலிருந்து …
பாரதி புதுவையில் இருந்து கடையத்திற்கும், சென்னைக்கும் வர மிகவும் ஆசைப்பட்டார், ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்களிடம் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளவும் தயாராக இருந்தார். புதுவையிலிருந்து கடலூர் வந்தபோது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்காக தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்தார். சுதந்திரதாகம் நிறைந்த பாடல்களைப் பாடுவதில்லை என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.
இதனால் தனது தாய்மாமாவிற்கும் அப்பாவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அனைவரும் என் தந்தை பெரிய கவிஞன் என்று புகழும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும், அதே மக்கள் என் தந்தையைப் பைத்தியம் என்று சொல்லும்போது என் மனம் துடித்துப் போகும். சகுந்தலாவின் கூற்றுப்படி, பாரதியின் மனது சிறிது கலங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பா கடையத்தில் இருந்து சென்னை வந்த போது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்குள்ள யானைக்குப் பழம், தேங்காய் தினம்தோறும் கொடுப்பார். சில நாள் கழித்து, ஒரு நாள் அப்பா அங்கு செல்கையில் அந்த யானைக்கு மதம் பிடித்து இருக்கும் போல,.. கம்பி வேலி போட்டு யாரும் உள்ளே போகாதவாறு தடுத்து இருந்தார்கள்.
கூற்று பொய்யாக்கப்படுகிறது
ஆனால் தந்தை அங்கு சென்று யானைக்குப் பழம் கொடுத்திருக்கிறார், யானை துதிக்கையால் இழுத்து அதன் நான்கு கால்களுக்கு நடுவில் கிடத்தியது. கால்களுக்கு நடுவே பாரதி கிடக்கிறார்… மக்கள் அலறுகின்றனர்… எங்கிருந்தோ அப்பாவின் நண்பர் குவளைக்கண்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் உயிரைத் துச்சமாகக் கருதி யானைக்கு இடையில் கிடக்கும் பாரதியைத் தூக்கி தன் தோள்களில் தாங்கி, வண்டியில் கிடத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். கீழே விழுந்தபோது பாறை கற்களால் தரை இருந்ததால் முகத்தில் அடிபட்டு ரத்தம் வடிந்ததாகவும் உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ய. மணிகண்டன் அவர்களது ஆய்வில் பாரதி ஜுன் அல்லது ஜுலை 1920-ல் யானையால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவர் ஒன்பது மாதங்கள் உயிர் வாழ்ந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது, அதற்குச் சான்றாக மணிகண்டன் பலவற்றை இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். இதன் மூலம் யானை தாக்கி தான் பாரதி மறைந்தார் என்ற கூற்று பொய்யாக்கப்படுகிறது.
கோவில் யானை சொல்லும் கதை
இந்நூலிலிருந்து மேலும் சில செய்திகள் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. பாரதிதாசன் பாரதியாரின் சீடர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் மேல் கொண்டப் பற்றால் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுக்க முயற்சித்தார். அதற்கான திரைக்கதையைத் தயார் செய்தார், அப்படி யானை தாக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என்று எழுதியபோது பாரதிதாசன் மயங்கி விழுந்தார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது பாரதிதாசனின் உயிர் பிரிந்ததாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ஒரு குருவுக்கும் அவரது சீடனுக்கும் எத்தகைய புரிதைலைக் கொண்ட பிணைப்பாக அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பாரதிக்கும் வ.உ.சி க்கும் ஒரு சமயத்தில் பிணக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. பாரதியின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த மேலும் சில நிகழ்வுகளும், பாரதியின் கோயில் யானை என்ற நாடகமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
பாரதியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்நூலை வாசித்து பாரதியை தரிசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
– க.ஹேமநாதன்
அருமையான விமர்சனம்…. படிக்கத்தூண்டும் ஆவல்…. தெரியாத கருத்துகளை அறிந்து கொள்ள நல்லதோர் வாய்ப்பு
அறியாத தகவல்கள்..
ரௌத்திரம் பழகு.. அச்சம் தவிர் என்ற பாரதியையும் காலம் தன் கணக்கில் விடவில்லை.. நிபந்தனைக்கு கட்டுப்பட்டார் என்பதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே…
நூல் விமர்சனம் அருமை.. பாரதியின் இறுதி நாட்கள் பற்றி நாம் அதிகம் அறியாதது. திருவல்லிக்கேணி யானை நிகழ்வு மட்டுமே நமக்குத் தெரிந்தது …விமர்சகர் இந்நூலைப் பற்றி .பல விபரங்களை எடுத்துரைத்தது அருமை ….பாராட்டுக்கள்
மிகவும் பயனுள்ள தகவல்
தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்..
எம் முண்டாசுகவிஞன் பற்றி கட்டாயம் வெளிக்கொணர வேண்டிய தகவல்.. நன்றி ஹேமா