கவிதை தொகுப்பு – அம்மாவுக்கு பிறந்தநாள்
நீரோடை மகேஸ் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் எழுதிய கவிதை வரிகள் – kavithai thoguppu 45
அம்மாவுக்கு பிறந்தநாள்
மூன்றெழுத்து கவிதை நீ,
மூவுலக கடவுள்களின் முதன்மை நீ,
உன்னில் உருவகித்தேன்,
உன்னால் ஜனனித்தேன்,
உன் மடியில் வளர்ந்தேன்,
ஏன்,
உன் மடியில் மரணம் என்றாலும் அதுவும் மறுபிறப்பு என்று ஏற்றுக்கொள்வேன்,
உயிரெழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து
வடித்த பொன்னெழுத்துக்கள் “அம்மா”
என்னை இவ்வுலகம் மதிக்கவில்லை,
நீ கொடுத்த இந்த பிறப்பைத்தான் மதிக்கிறது,
கடவுள் என்ற வார்த்தையின் பொருளோவியம் நீ,
கண்ணில் புலப்படா கடவுளைக் காட்டிலும் காலங்கள் ஏற்றுக்கொள்ளும் கவிதையே நீ தான் முதன்மை,
உனைப்பற்றி நிந்தித்து வரிகள் தீட்ட மொழிகள் பத்தாது தாயே…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.
– நீரோடை மகேஸ்
மேலும் ஒரு கவிதை
கரை ஒதுங்கிய
சிப்பிகளின்
உதடு வெடிப்புகளில்
தண்ணீர் காணா
வயலின் பிளவு.
வறுமை ஆதரித்த
குழந்தையின்
உதடுகளிலும்
காலத்தின் கோடுகள்
பல் இளிக்கிறது
தேவையின் பொருட்டு
கடைந்துகொள்ளும்
சாற்றின் மத்து
எதோ ஓர் அன்னையின்
கைப்பிடிக்காய்
ஏக்கத்தோடு திரிகிறது
கார்மேகங்கள். – kavithai thoguppu 45
– பொய்யாமொழி
அம்மா அம்மா
ஆம்.
தியாக
உள்ளங்களில்
முதல் தீக்குச்சி..
தைரிய
தேவதை பொதிந்துவைத்த
வைரச்சுரங்கம்..
உழைப்பை
திருடிக்கொள்வதில் உலகில்
இருவர்க்கு மட்டுமே போட்டி
‘எறும்பும் அம்மாவும்’
கடவுள் சிலைகள்
பல கைகள் இருப்பது
பெண்ணின் ஒற்றை உருவில்
பல்வினை புரிதலின் சாட்சி
அம்மா… அம்மா…
– பொய்யாமொழி