கவிதை தொகுப்பு 53

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு‌.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53

neerodaimahes kavithai

அழகோவியம்

நள்ளிரவில் மலரும்
அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்
உன் செவ்விதழ் புன்னகை
அழகோ அழகு…
மயக்கத்தில் வீழ்ந்த நான்
மையல் கொண்டேனடி
உன்மீது…
அழகோவியமே..
உன்னுள் யாவும் அழகு… – kavithai thoguppu 53

– கவி தேவிகா, தென்காசி


மழை

புழுதிக் காடும் பூத்துக்குலுங்கும் உன்னால்!!
பூக்கும் பூக்களில் உன் முத்தம் பதியும்!!
நீ தான் உயிர் கொடுப்பாய் பசுமை என்னும் சொல்லுக்கு!!
நீரோடையும் மணக்கோலம் பூக்கும் உன்னால்!!
உன் மேனி பட்ட களிப்பால் கல்பாறையும் அருவியாகும்!!
வானில் இருந்து வந்த வைரம்
என்றும் விவசாயிகளின் நண்பன் இந்த”மழை”!!.

– பிரகாசு‌.கி, அவிநாசி


திருக்குறள்

முப்பாலும் உண்டு ஏட்டிலே
முழுவதும் படிக்க வேண்டும்
மன கூட்டிலே வானுக்கும் அப்பாலும்
சரித்திரம் படைக்க வேண்டும் உலகிலே. தம்பி
தமிழ் தாய்ப்பால் வீரமுண்டு உடம்பிலே

தமிழ் சுவை அருந்துகிறேன் பேச்சிலே
தன்னை மறந்தேன் மனம் கூட்டிலே
இவ்வுலகில் உயர்ந்த இடத்திலே
இருள் விலக்கும் இரு விளக்குகள் போலே
பிறருக்கும் ஒளி தருவோம் வாழ்விலே

ஒரு மன நிலமே உயர்ந்தது
ஒழுக்கத்தை விதைப்பது முறையானது
தமிழ் எழுத்துக்கள் எல்லாம் அழகானது
தனக்கு விருந்தாகும் அறிவானது. தம்பி
தாய் தந்தை என உறவானது

தீண்டாமை என்பது ஒருதீ. அந்த
தீயை துணைக்கு வைத்து காண்பதெல்லாம் பொய்
ஞானத்தின் பாதை தான் மெய். தம்பி
நாளைய தலைமுறைக்கு நல்லதை செய்
ஞானம் தரும் பாடங்களை மனதில் வை

– கவி அவினாசி ஆர் சோமு சாவித்திரி


கடல் அன்னை

உயிரினங்கள் தாய்வீடு
மீனவர்கள் புகுந்தவீடு
தீவுகள் கண்களுக்கு இனிமை
பவளப்பாறை இயற்கையின் வளமை

சூரிய சந்திர பிரதிபலிப்பு அழகு
மனதை மயக்கும் நீலநிறம் அழகு
மீண்டும் மீண்டும் வரும் அலைகள் அழகு
மழைநேர வானவில் அழகு

கடலுக்குள் பல மலைகள் உண்டு.
அடங்கி இருக்கும் எரிமலை உண்டு.
காணாமல் போகும் ரகசியம் உண்டு.
புயல் சுனாமி அபாயம் உண்டு.

கிளிஞ்சல்கள் அலங்காரமாகும்
முத்துக்கள் ஆபரணமாகும்
கட்டுமரம் படகு கப்பல் போக்குவரத்து
நீச்சல் பாய்மரத்தில் விளையாட்டு

அளவில்லாத வளங்கள் தரும்
சுவையான உணவு தரும்
மீனவர்கள் தொழில் ஆதாரம்
கடல் அன்னையை வணங்குகிறேன்

– எஸ்.வீ.ராகவன்


இயற்கையை மதித்து வாழ்ந்திடுவோம்

ஆறு குளம் எல்லாம்
அதன் முகவரி தொலைத்து
போனது …

ஆறு குளம் அழிச்ச மக்கள்
அரை சொம்பு தண்ணிக்கு
அலைபாயுது …

கண்டவுடன் கண் மிரட்டும்
காடெல்லாம் கண் உயர்த்தும்
கட்டிடம் ஆகிப்போனது …

காட்ட அழிச்ச மக்கள்
காத்து கிடைக்காம
கண் மூடுது …

மழைத்தண்ணி போன இடம்
எல்லாம் , போக வழியின்றி
மாடி வீடு கட்டிட்டாங்க .. ..

மாடி கட்டி போன மக்கள் எல்லாம்
மழை வந்தால் , மாடியிலேயே
மாட்டி தவிச்சாங்க …

நெகிழி பை கொண்டு
நிலத்தை கெடுத்தாங்க …
நிலத்தை கெடுத்த மக்கள்
நீர் கிடைக்க நெடும் ஆழம்
தோண்டும் படி ஆனாங்க ..

விவசாயம் மறந்து மக்கள்
காட்ட வித்து காசு பணம்
ஆக்கினாங்க …

காடு வித்து காசு சேத்த
மக்கள் எல்லாம் , கண்ட
மருந்து தின்னு காச
தொலைச்சாங்க … – kavithai thoguppu 53

வேகமா போவதற்கு
மோட்டாரு வாகனம் தான்
ஆகுமுன்னு , ஆளுக்கொரு
வண்டி வச்சு ஆளா பறந்தாங்க …

காரு பைக்கின்னு
கரும்புகை வீசி சென்று
காத்த கெடுத்த மக்கள்,
கடமை முடிக்காம விண்ணுலகம்
போனாங்க …

விஞ்ஞானம் வளர்ந்துடுச்சு,
வியாதிகளும் பெருகிடுச்சு,
வீட்டுக்கு வெளிய வந்தா
முகமூடி தான் போட்டுகிச்சு…

விண்ணுக்கு போற அளவு
விஞ்ஞானம் பெருத்திடிச்சி …
விளையாட்டா புள்ள பெத்த
எம் மக்கள் இன்று பெரும்பாடு
படும் படி ஆச்சு …

என்னத்த சொல்ல !!!
என் மக்கள் சீரழிஞ்சு போறதங்க…
எப்ப தான் மாறிடுமோ
என் மக்கள் மனசெல்லாம் …
இல்ல! மாறாது போய்
மறுசென்மம் தான் கொண்டிடுமோ ???…

இயற்கைய மதிச்சாக்க
இன்பமா இருந்திடலாம் …
இல்லாது போனாக்க
இருக்க இடம் தேடி நிலவுக்கு
போகும் படி ஆகும் காலமது
வந்திடலாம்…

ஆக்குறதும் அழிக்கிறதும்
ஆண்டவன் வேலை தான் …
ஆன அற்புதமா வாழுறது
அவரவர் கையில் தான்னு
புரிஞ்சு வாழ்ந்து விட்டு…
வரும் கால சந்ததிக்கும்
விட்டு சென்றிடுவோம் ,வீணா போகாத
நம் மண்ணை …

– மகேஸ்வரன்.கோ ( மகோ ), கோவை

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    கவிதைகள் அனைத்தும் அருமை. நூலில் கோர்த்த முத்துச்சரம் ..