நாலடியார் செய்யுள் விளக்கம் (5 – தூய் தன்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

05. தூய் தன்மை

செய்யுள் – 01

“மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்
தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை – யாக்கைக்கு ஓர்
ஈச் சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவது ஓர் கோல்”

விளக்கம்
மாந்தளிர் போன்ற நிறமும் இளமையும் உடைய பெண்ணே! என்று மாதரை நோக்கி பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இயல்பினை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கைகளை விரட்ட ஒரு கோல் வேண்டும். (இதில் அறிவுடையார் என்பது எள்ளல் குறிப்பு ஆகும்) – naladiyar seiyul vilakkam-5

செய்யுள் – 02

“தோற் போர்வைமேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும்
மீப் போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் – மீப் போர்வை
பொய்ம் மறையா காமம் புகலாது மற்று அதனைப்
பைம் மறியாப் பார்க்கப்படும்”

விளக்கம்
தோலாகிய போர்வையின் மீதும் துளைகள் பலவாக உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வையினால், பெருமை உடையாதாக இருக்கிறது இவ்வுடம்பு! அப்படி அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாலும் அவ்வுடம்பை ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.

செய்யுள் – 03

“தக்கோலம் தின்று தலை நிறையப் பூச் சூடி
பொய்க் கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப் பெரியோர்
கண்டு கைவிட்ட மயல்”

விளக்கம்
எப்போதும் உண்ணும் தொழில், உடம்பின் உள்ளே அழுக்கை மிகுவிக்கும் என்பதை உணர்ந்து பெரியோர் விலக்கி விட்ட, ஆசை என்னும் மயக்கத்தை தரும் உடம்பின் அழுக்கான கெட்ட நாற்றம் வால்மிளகு, வெற்றிலை, பாக்கு போன்ற வாசனைப் பொருள்களை வாயிலிட்டு மென்று தின்று, தலை நிறைய மணமலர்சூடிச் செயற்கையாக அலங்கரித்து கொள்வதால் ஒழியுமா? ஒழியாது.

செய்யுள் – 04

” தெள் நீர்க் குவளை பொரு கயல் வேல் என்று
கண் இல் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன
கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்”

விளக்கம்
உள்ளே இருக்கும் நீரை நீக்கி விட்டால், பனை நுங்கை தோண்டி எடுத்தாற் போல காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து நான், மகளிரின் கண்களை தெளிந்த நீரிலுள்ள குவளை மலர்கள் என்றும் அதில் புரளும் கயல் மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக்கண் இல்லாத அற்ப மனிதர்களால் எனது மனதை துன்புறுத்த விடுவேனோ?

செய்யுள் – 05

“முல்லை முகை முறுவல் முத்து என்று இவை பிதற்றும்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காண புறங்காட்டு உதிர்ந்த உக்க
பல் என்பு கண்டு ஒழுகுவேன்”

விளக்கம்
எல்லோரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக் கிடக்கின்ற பற்களைப் பார்த்து, பற்றற்று ஒழுகும் நான், மகளிரின் பற்களை முல்லை அரும்புகள் என்றும், முத்துகள் என்றும் கூறிப் பிதற்றும் கீழ் மக்கள் எனது உள்ளத்தை துன்புறுத்த விடுவேனோ? விடமாட்டேன்.

செய்யுள் – 06

“குடரும் கொளுவும் குருதியும் என்பும்
தொடரும் நரம்மொடு தோலும் – இடையிடையே
வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள்
எத் திறத்தாள் ஈர்ங் கோதையாள்”

விளக்கம்
குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும், இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் ஆகிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியை சேர்ந்தவள்?

செய்யுள் – 07

“ஊறி உவர்தக்க ஒன்பது வாய்ப் புலனும்
கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னும் மீப் போர்த்த
கருந் தோலால் கண் விளக்கப்பட்டு”

விளக்கம்
அழுக்குகள் ஊறி, வெறுக்கத்தக்க ஒன்பது துளைகளை உடைய புலன்கள் வழியாக அவ்வழுக்கு குழம்பை வெளிப் படுத்தும் உடலாகிய ஒரு குடத்தை பார்த்து அறிவில்லாத ஒருவன், மேலே போர்த்தியிருக்கும் அழகான தோலினால் கண்கள் கவரப்பட்டு, பெருத்த தோளை உடையவளே! வளையல் அணிந்தவளே! என்று பிதற்றுவான்!

செய்யுள் – 08

“பண்டம் அறியார் படு சாந்தும் கோதையும்
கண்டு பாராட்டுவார் கண்டிலர்கொல் – மண்டிப்
பெடைச் சேவல் வன் கழுகு பேர்த்து இட்டுக் குத்தல்
முடை சாகாடு அச்சு இற்றுழி”

விளக்கம்
உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவர்கள், அதன்மேல் பூசப்படும் சந்தனத்தையும், அணியப் பெறும் மலர் மாலையையும் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள் முடை நாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அதன் அச்சாகிய உயிர் முறிந்தபின் பெண்ணும் ஆணுமான வலிமை மிக்க கழுகுகள் நெருங்கிக் கூடிப் புரட்டிப் புரட்டிக் குத்தித் தின்பதை பார்த்ததில்லை போலும்.

செய்யுள் – 09

“கழிந்தார் இடு தலை கண்டார் நெஞ்சு உட்க
குழிந்து ஆழ்ந்த கண்ணாவாய்த் தோன்றி – ஒழிந்தாரை
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று
சாற்றும்கொல் சால சிரித்து”

விளக்கம்
சுடுகாட்டில், இறந்தவர்களுடைய, எரிக்கப் பட்ட தலைகள், பார்த்தவர் மனம் அஞ்சுமாறு, பள்ளமாக ஆழ்ந்திருக்கின்ற கண்களை உடையனவாகத் தோன்றி, இறவாதிருக்கும் மற்றவரைப் பாரத்து சிரித்து, “இவ்வுடம்பு இப்படிப் பட்ட தன்மையது! எனவே அறத்தை போற்றி நன்னெறியில் நில்லுங்கள்” என்று கூறுவது போல இருக்கிறது.

செய்யுள் – 10

“உயிர் போயார் வெண் தலை உட்கச் சிரித்து
செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை – செயிற் தீர்த்தார்
கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர்
பண்டத்துள் வைப்பது இலர்”

விளக்கம்
இறந்தவரது மண்டை ஓடுகள், கண்டார் அஞ்சும்படி நகைத்து, இல்லறத்தில் இறுமாந்து கிடப்பவருடைய குற்ற்றத்தை போக்கும். மயக்கமாகிய அக்குற்றத்திலிருந்து நீங்கியவர்கள் உண்மையை உணர்ந்து, இத்தகையது தான் இவ்வுடம்பின் இயல்பு என்று நினைப்பதால், தமது உடம்பை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

– கோமகன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *