நாலடியார் (15) குடிப்பிறப்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-15

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – அரசியல்

15. குடிப்பிறப்பு

செய்யுள் – 01

“உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்
குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப் புல் கறிக்குமோ மற்று”
விளக்கம்
பசித்துன்பம் மிகுதியாக வந்தபோதும்
சிங்கம் அருகம்புல்லை தின்னுமோ? தின்னாது. அதுபோல உடை கிழிந்து உடல் மெலிந்து வறுமை உற்ற போதும் உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கங்களில் சிறிதும் குறைய மாட்டார்கள்

செய்யுள் – 02

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும்
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது – வான் தோயும்
மை தவழ் வெற்ப படாஅ பெருஞ் செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு”
விளக்கம்
மேகங்கள் தவழும் வானளாவிய மலைகளையுடைய மன்னனே! பெருந்தன்மை, மென்மை, ஒழுக்கத்தை கடைபிடித்தல் என்னும் இவை மூன்றும் உயர்த்த குடியில் பிறந்தவரிடம் அல்லாமல், பெரும் செல்வம் உண்டான காலத்தும் பிறரிடம் உண்டாக மாட்டா.

செய்யுள் – 03

இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன குடி பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற்று அன்று”
விளக்கம்
பெரியோர் வரக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர் சென்று மகிழ்வுடன் வரவேற்றலும், மற்ற உபசாரங்கள் செய்தலும், அவர் பிரியும் போது சறுறு பின் செல்லுதலும், அவர் விடைதர திரும்பி வருதலும் ஆகிய நற்குணங்களை, உயர் குடியில் பிறந்தார் தமது அழியாத ஒழுக்கங்களாக கொண்டுள்ளனர். ஆனால் கீழ் மக்களிடம் இவற்றில் ஒன்றேனும் பொருந்தியிருக்கும் என எண்ணுதல் சரியன்று

செய்யுள் – 04

“நல்லவை செய்யின் இயல்பு ஆகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழி ஆகும் – எல்லாம்
உணரும் குடிப் பிறப்பின் ஊதியம் என்னோ
புணரும் ஒருவர்க்கு எனின்
விளக்கம்
உயர் குடியில் பிறந்தார் நல்ல செயல்கள் செய்தால் அஃது அவருக்கு இயல்பு என கருதப்படும் தீய செயல்களை செய்தால் அது பழிக்க தக்கதாக முடியும். ஆதலால் ஒருவர்க்கு உயர் குடிப் பிறப்பால் பயன் தான் என்ன?

செய்யுள் – 05

“கல்லாமை அச்சம் கயவர் தொழில் அச்சம்
சொல்லாமையுள்ளும் ஒரு சோர்வு அச்சம் – எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் மரத்தார் இம்
மாணாக் குடிப் பிறந்தார்”
விளக்கம்
உயர்குடிப் பிறந்தோர் தாம் கல்லாமைக்கு அஞ்சுவர்; இழிதொழில் செய்ய அஞ்சுவர்; தகாத சொல் பேச அஞ்சுவர்; இரப்பாரக்கு ஒன்றும் தர முடியாமை நேருமோ என அஞ்சுவர்; ஆகையால் இத்தகைய மாண்புகள் அற்ற குடியில் பிறந்தவர்கள் மரம் போல ஆவர்.

செய்யுள் – 06

“இன நன்மை இன்சொல் ஒன்று ஈதல் மற்று ஏனை
மன நன்மை என்று இவை எல்லாம் – கன மணி
முத்தோடு இமைக்கும் முழங்கு உவரித் தண் சேர்ப்ப
இற் பிறந்தார்க்கண்ணே உள”
விளக்கம்
சிறந்த மாணிக்க மணிகள் முத்துகளுடன் ஒளி வீசும் ஒலிக்கும் கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! நல்லோர் தொடர்பு, இன்சொல் கூறுதல், வறியவர்க்கு கொடுத்தல், மற்றும் மனத் தூய்மை என்னும் இப்படிப்பட்ட நற்குணங்கள் எல்லாம் நல்ல குடியில் பிறந்தவர் இடமே பொருந்தியிருக்கும்

செய்யுள் – 07

செய்கை அழிந்து சிதல் மண்டுற்று ஆயினும்
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும்
எவ்வம் உழந்தக் கடைத்தும் குடி பிறந்தார்
செய்வர் செயப்பா லவை”
விளக்கம்
கட்டுக் குலைந்து கறையான் பிடித்திருந்தாலும் பெரிய வீடானது மழை நீர் ஒழுகாத ஒரு பக்குவத்தை பெற்றிருக்கும். அதுபோல எத்தனை வறுமைத் துன்பம் சூழ்ந்திருந்தாலும் நற்குடியில் பிறந்தோர் தம்மால் இயன்றவரை நற்செயல்களை செய்வர்.

செய்யுள் – 08

“ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல்
செல்லாமை செல்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கா குடிப் பிறந்தார்”
விளக்கம்
ஒரு பக்கத்தில் இராகு என்ற பாம்பு பிடித்துக் கொண்டாலும், தனது மற்றொரு பக்கத்தால் அழகிய பெரிய இவ்வுலகத்தினை ஒளி பெறச் செய்யும் திங்களை போன்று உயர் குடியியில் பிறந்தோர் பிறருக்கு உதவி புரிவதில் தளர மாட்டார்கள்.

செய்யுள் – 09

“செல்லா இடத்தும் குடி பிறந்தார் செய்வன
செல் இடத்தும் செய்யார் சிறியார் – புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய் புரிமாபோல்
பொரு முரண் ஆற்றுதல் இன்று”
விளக்கம்
மான், சேணத்தை தரித்திருந்தாலும் குதிரை போல தாக்கிப் போரிட முடியாது. அதுபோல வறுமை காலத்திலும் உயர் குடியில் பிறந்தோர் செய்யும் நல்ல செயல்களை செல்வ காலத்திலும் கீழோர் செய்ய மாட்டார்கள்.

செய்யுள் – 10

“எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடிப் பிறந்தார்
அற்று தற்ச் சேர்ந்தார்க்கு அசைவிடத்து – ஊற்று ஆவார்
அற்றக் கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால்
தெற்றென தெள் நீர் படும்”
விளக்கம்
நீரற்ற அகண்ட ஆறு தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடி பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புறும் தன்னை சார்ந்தோர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர்.

– கோமகன்

You may also like...