பிக்பேக்கெட் (குட்டிக்கதை)
கதை நீரோடை பகுதியில் கதாசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் கருத்துகள் நிறைந்த குறுங்கதை – bickpacket kuttikathai
பி-2-போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது.ஒரே நாளில் நாலு பிக்பாக்கெட் கேஸ்கள்… இன்ஸ்பெக்டர் நடராஜன் சந்தோஷமாக இருந்தார்.சீக்கிரமே இந்த ஏரியாவில் பிக்பேக்கெட்டை ஒழிச்சிடலாம்.எல்லாவற்றிற்கும் காரணம் கான்ஸ்டபிள் கண்ணையா தான்…. தினமும் மப்டியில் பஸ்களில் பீக் அவரில் ஏறி.. பிக்பாக்கெட் ஆசாமிகளை கவனமாக கண்காணித்து…கையும், களவுமாய் பிடிப்பதில் கில்லாடி.’பிக்பாக்கெட் ஸ்பெஷலிஸ்ட்’ என்று ஸ்டேஷனில் அவரை கொண்டாடினார்கள் .
ஸ்டேஷனுக்கு கிளம்பிய கண்ணையா, மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார்..” ஏண்டி! என் பர்ஸ்ல இருந்த பணம் எங்கே?.எத்தன தடவ சொல்றது என் பர்ஸிலிருந்து பணத்தை எடுக்காதேன்னு.அவசர ஆத்திரத்துக்கு வச்சிருந்தா அதையும் எடுத்துடறியே” எரிச்சல் பட்டார் கண்ணையா .
அவர் மனைவி பதிலுக்கு கத்தினாள். “எது காணும்னாலும் உடனே என்ன சொல்லிடுங்க ..நான் ஒன்னும் உங்க பர்ஸிலிருந்து
பணத்தை எடுக்கவே இல்லை .எங்கிட்ட கத்தாதீங்க என்றாள்”
“நீ எடுக்கலைன்னா அந்தப் பணம் எங்கே போயிருக்கும் ?கைகால் முளைச்சா வெளியே ஓடியிருக்கும்?..இரு…இரு.. உன் பையன் ஊர் சுத்துறதுக்கு நேத்திக்கு என்கிட்ட காசு கேட்டான்..நான் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் .அதான் என்கிட்டயே கைவரிசையக் காண்பிச்சுட்டானா? “
“புள்ள தானே எடுத்துட்டு போயிருக்கான். அதுக்காக சண்டையா போட முடியும்? விடுங்க..” என்றாள் அவர் மனைவி எரிச்சலோடு.
‘வெளில புலி…வீட்ல எலியா? ..’தன்கிட்டயே பணத்தை ஆட்டையப் போட்ட தன் மகனை எண்ணி நொந்து கொண்டு கிளம்பினார் ‘பிக்பாக்கெட் ஸ்பெஷலிஸ்ட் ‘ கண்ணையா.. – bickpacket kuttikathai
– தி.வள்ளி, திருநெல்வேலி