என் மின்மினி தொடர்கதை (பாகம் – 73)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-73
En minmini thodar kadhai
அங்கே நடப்பதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் வேகமாக தனது சட்டைப்பையில் இருந்த மொபைலை எடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்…
ஷீலா டீச்சரின் கதறல் சத்தம் கேட்டு மக்கள் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே கூட துவங்கியது.நேரம் செல்ல செல்ல ஆழ்ந்த நிலை மயக்கத்துக்கே சென்றான் பிரஜின்…
சில நிமிட இடைவெளியில் ஆம்புலன்சும் அந்த இடத்துக்கு வந்து நின்றது.போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பாரதியினுடைய உடலோடு,பிரஜினும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றபட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.கூடவே நானும் வருகிறேன் என்று ஷீலா டீச்சரும் அதே வண்டியில் ஏறி கொண்டாள்…
மக்கள் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக கலைய துவங்கி அந்த விபத்து நடந்த அந்த இடம் மீண்டும் மையான அமைதியில் நிறைந்தது.பாரதியின் அந்த மொபைல் மட்டும் கேட்பாரற்று அங்கேயே கிடந்தது…
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாரதியின் உடல் விதிகளுக்கு உட்பட்டு உடல் கூராய்வு செய்யப்பட்டு ஷீலா டீச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.கனத்த இதயத்துடன் அதை பெற்று ஆம்புலன்சில் ஏற்றி பாரதியின் வீட்டுக்கு அவளது உடலை கொண்டு செல்ல முடிவுசெய்தாள் ஷீலா டீச்சர்…
திடீரென ஒரு யோசனை அவளுக்கு…கிளம்புவதற்கு முன்னால் அந்த அடிபட்ட பையனை ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துறுவோம் என்று மனசுக்குள் தோன்ற அவனை சிகிச்சைக்காக வைத்திருந்த அறையை நோக்கி நடந்தாள்…
ஒரு கதவு மட்டும் அடைக்கப்பட்டு மற்றுமொரு கதவு லேசாக திறக்கப்பட்டு இருந்தது.அந்த இடைவெளி வழியாக அவனை பார்த்தாள்.ஒரு கையில் குளுக்கோஸ் போடப்பட்டு அப்போதுதான் மயக்கத்தில் இருந்து மீண்டு படுக்கையில் படுத்திருந்தான் பிரஜின்.
லேசாக திறக்கபட்டிருந்த கதவை முழுவதுமாக திறந்து அறையின் உள்ளே நுழைந்தாள் ஷீலா டீச்சர்…
அவள் வருவதை பார்த்தவுடன் மெதுவாக படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து அமர முயற்சி செய்தான் பிரஜின்…
தம்பி…தம்பி…அதெல்லாம் ஒண்ணும் இல்லை.நீ படுத்துக்கோ.இப்போ கொஞ்சம் உடம்புக்கு ஓகேவா?
நான் பாரதியின் உடலை வாங்கிட்டேன்.அவங்க வீட்டுக்கு தான் கொண்டுபோக போறேன்.போய்ட்டு வரேன் தம்பி என்றபடி கண்களில் கண்ணீர் மல்கியபடி விடை பெற முயற்சித்தாள் ஷீலா டீச்சர்…
டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் ஒரு நிமிசம் டீச்சர் என்று பேச துவங்கினான் பிரஜின்.
ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ரொம்ப நன்றி டீச்சர்.உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்…
பாரதி யாருங்க…அவங்க மொபைலில் மொத்தமே இரண்டு நம்பர் மட்டும் தான் பதிவு செய்திருந்தாங்க.
ஒண்ணு நீங்க,
இன்னொன்னு முகில்ன்னு இருந்துச்சு.முகில் யாரு டீச்சர் என்று ஒரு வித பதட்டத்தில் அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தான் பிரஜின்.
கண்களில் கண்ணீர் வழிந்தாலும் அதை தன்னுள் அடக்க முயற்சி செய்தபடி பதில் சொல்ல ஆரம்பித்தாள் ஷீலா டீச்சர்…
இந்த உலகத்தில் பாரதி தான் பாவப்பட்ட பிறவி என்று இத்தனை நாள் நினைச்சுகிட்டு இருந்தேன்.ஆனா இப்போ முகில் நிலைமை தான் என்னை இன்னும் கண்களில் இரத்தம் வர செய்கிறது என்ற படி தேம்பி அழ ஆரம்பித்தே விட்டாள்…
டீச்சர் எனக்கு ஒண்ணும் புரியவில்லை.கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் என்றான் பிரஜின்…
ம்ம்…விளக்கமாக சொல்ல இனி ஒன்றுமே இல்லை.முதலில் பாரதி அவளோட கணவனை இழந்தாள்.இப்போ அவளோட குழந்தை அவளையே இழந்து அனாதையா நிற்கிறான் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே …
என்ன தம்பி இப்போ கொஞ்சம் உடம்புக்கு பரவாயில்லையா என்று கேட்டவாறே போலீஸ்காரர் ஒருவர் அறையில் நுழைந்தார்…
வாங்க சார்.இப்போ கொஞ்சம் ஓகே என்றபடி எழுந்து மெதுவாக உட்கார்ந்தான் பிரஜின்…
ஒண்ணுமில்லைங்க தம்பி.,ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்ன்னு வந்தேன்.நடந்த விபத்துல பாரதின்னு ஒரு பொண்ணு இறந்து போனது பத்தி தான் என்று போலீஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே…
சார்…நான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறியது உண்மைதான்.ஆனா அவங்க மேலே நான் இடிக்கவே இல்லை.அந்த ஸ்கூல் பஸ்தான் சார் என்று தானாகவே அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான் பிரஜின்…
தம்பி…கொஞ்சம் பொறுமையா இருங்க.நான் சொல்ல வந்ததே அதை தான்.பாரதி இறந்து போனதுக்கும்,உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தம்பி.நாங்க அந்த பள்ளிகூட கேமராவில் சோதனை செய்து பார்த்ததில் முதன்முதலில் சென்றது ஒரு ஸ்கூல்பஸ் தான்.சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிச்சு பார்த்தோம்.அந்த டிரைவர் உண்மையை ஒத்துகிட்டார்.நீங்க இனி பயப்படாம இருங்க.உடம்பை நல்ல பார்த்துக்கோங்க..நான் வரேன் தம்பி என்றபடி அங்கிருந்து கிளம்பினார் அந்த போலீஸ்காரர்.
டீச்சர் நானும் உங்க கூட பாரதி வீட்டுக்கு வரலாமா.எனக்கு மனசு உறுத்தலா இருக்கு.அவங்க இறுதி சடங்கில் நானும் கலந்துக்குறேன் டீச்சர் என்று மனம் விசும்பியபடி கேட்டான் பிரஜின்…
பாகம் 74-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)