ஐங்குறுநூறு பகுதி 3
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 3
மருதத்திணை
03 கள்வன் பத்து
21
“முள்ளி நீடிய முதுநீ ரடைகரைப்
புள்ளிக் கள்வ னாம்ப லறுக்குந்
தண்டுறை யூரன் றெளிப்பவு
முன்கண் பசப்ப தெவன்கொ லன்னாய்”
துறை: புறத்தொழுக்கம் தனக்கு இல்லை என தலைவன் உரைக்க ‘அஃது உளது’ என தலைவி தோழியிடம் சொல்லியது.
விளக்கம்: முள்ளிச் செடி வளர்ந்து நீண்ட முது நீரோடை கரைக்கண் வாழும் நண்டு சென்று ஆம்பலை அறுக்கின்ற ஊரின் கண் வசிக்கின்ற தலைவனால் ஒளி பொருந்திய மை தீட்டிய என் கண்கள் பசப்படைவது என்ன காரணமோ?
22
“அள்ள லாடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேரளைச் செல்லு மூர
னல்ல சொல்லி மணந்தினி
நீயே னென்ற தெவன்கொ லன்னாய்”
துறை: களவு காலத்தில் புணர்ந்து பின்பு மணம் கொள்ளாமல் காலந் தாழ்த்தும் தலைவனின் செயலுக்கு ஆற்றதவளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது.
விளக்கம்: சேற்றில் மூழ்கிய வரிகளை உடைய நண்டானது முள்ளி வேர் செறிந்த பொந்தின் இடத்தே சென்றடைகின்ற ஊரை உடையவன் எமக்கின்பம் பயக்கும் மணம் செய்வேன் என்று சொன்ன சொல் இன்னும் என் முன் நிற்கிறது என்பதை என்னென்று சொல்வேன்.
23
“முள்ளி வேரளைக் கள்வ னாட்டிப்
பூக்குற் றெய்திய புனலணி யூரன்
றேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங் காவ தெவன்கொ லன்னாய்”
துறை: சென்ற பாடலின் துறையே இப்பாடலுக்கும்
விளக்கம்: தன்னூரின்கண் வாழும் விளையாட்டு மகளிர் முள்ளி வேர் அருகில் வளை அமைத்து வாழும் நண்டை அழைத்து விளையாடும் நீரலை நிறைந்த புனல் உடைய ஊரன் என் மனம் தெளியும்படி செய்து என்னை கலந்து இப்பொழுது வருத்துவது பற்றி என்னென்று சொல்வேன் தோழியே!
24
“தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்ளை தின்னு முதலைத் தவனூ
ரெய்தின னாகின்ற கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்ப தெவன்கொ லன்னாய்”
துறை: தலைவன் பரத்தையருள் ஒருத்தியை விட்டு ஒருத்தி என பழகுகிறான் என வாயிலோர் மூலமாக அறிந்த தோழி தலைவிக்கு சொல்லியது.
விளக்கம்: தாய் சாதற்கேதுவாக தோன்றும் நண்டோடு பிள்ளையை தின்னும் முதலையை உடையது அவனது ஊர்; அதைப் போல அவனும் நடத்தையில் கொள்கிறான். மகிழக்கூடிய நல்ல பொன்னிற வளையல்கள் ஒலிக்க பரத்தை மகளிரின் அழகை கவரும் அவன் செயல் என்ன செயலோ தலைவியே, அதனை அறியோமே.
25
“அயல் புறந்தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வ னறுக்குங்
கழனி யூரன் மார்புபலர்க்
கிழைநெகிழ் செல்ல லாகு மன்னாய்”
துறை: இதுவும் சென்ற செய்யுள் துறையே
விளக்கம்: புறத்தே பாதுகாத்த இளமையாகிய வளரும் காய்களையுடைய வயலை, செவ்விய செங்கொடியை நண்டு அறுக்கும் கழனியூரனது மார்பு பரத்தையர் பலருக்கும் இழைந்து நெகிழும்படியாகிய துன்பத்தை உடையதாகும் தலைவியே!
26
“கரந்தையஞ் செறுவிற் றுணைதுறந்து கள்வன்
வள்ளை மென்கா லறுக்கு மூர
னெம்மும் பிறரு மறியா
னின்ன னாவ தெவன்கொ லன்னாய்”
துறை: தலைவியிடம் அவன் உனக்கு பொருத்தமானவன் அல்ல என உரைத்த வாயிலோர் பேச்சுக்கு தோழி அவன் அப்படி பட்டவன் அல்லன் என சொல்லியது.
விளக்கம்: கரத்தை மலர் செறிந்த வயலிலே உள்ள தன் பெண்ணைப் பிரிந்த நண்டானது வள்ளைக் கொடியினது மெல்லிய தண்டை அறுக்கின்ற ஊரன் எம்மையும் பிறரையும் வருத்துகின்றதை அறியான். அவ்வாறானவன் துன்பத்தை செய்பவன் ஆதல் எங்ஙனம் கொல்லோ? தலைவியே!
27
“செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
றண்ணக மண்ணளைச் செல்லுமூரற்
கெல்வளை நெகில சாஅ
யல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய்”
துறை: தலைவன் மனைக்கு வருவதாக சொன்ன காலத்தில் வாராது தாழ்த்த புறத்தொழுக்கம் உண்டாயிற்று என்று வருந்திய தலைவிக்கு தோழி சொல்லியது.
விளக்கம்: செந்நெல்லையுடைய அழகு பொருந்திய வயலில் உள்ள கதிரை கவர்ந்து கொள்ளும் நண்டானது உள்ள இடத்தை உடைய குகையின் கண்ணே செல்லுகின்ற ஊரற்கு புறத்தொழுக்கம் உண்டென நினைத்து ஒளியுடைய வளையல் கழலும்படி மெலிந்து வருத்தமடைவது என்ன காரணமோ?
28
“உண்டுறை யணங்கிவ ளுறைநோ யாயிற்
றண்சேறு கள்வன் வரிக்கு மூரற்
கொண்டோடி நெகிழச் சாஅய்
மென்றோள் பசப்ப தெவன்கொ லன்னாய்”
துறை: சந்திக்க குறித்த இடத்தில் தலைவனை காணாத தலைவி வருத்தமுற்றதனால் உண்டான வேறுபாட்டை கண்டு ‘இது தெய்வத்தால் ஆயிற்று’ என உறவினர் வெறியாட்டு நடத்த கருத அதனை விலக்க தோழி செவிலித்தாயிடம் சொல்லியது.
விளக்கம்: உண்ணப்படும் நீர்துறையில் உறையும் தெய்வத்தினால் நோய் உண்டாக, சேற்றின் கண் நண்டு கோலம் செய்யும் ஊரன் பொருட்டு ஒள்ளிய தொடி கழலும்படி மெல்லிய தோள்கள் பசப்பது காரணமெனவாகும் அன்னையே
29
“மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வெண்முளை கள்வ னறுக்குங்
கழனி யூரன் மார்புற மரீஇத்
திதலை யல்கு னின்மகள்
பசலை கொள்வ தெவன்கொ லன்னாய்”
துறை: தலைவன் மணம் செய்ய மறுப்பானென உறவினர் உரைக்க அதை மறுத்து தோழி செவிலித் தாய்க்கு சொல்லியது
விளக்கம்: மழை மிகுதியாக பெய்யவும், காவலர் விரைந்து செல்லவும், விதைத்த வெண்மையை உடைய நெல் முளைகளை நண்டுகள் அறுக்கும் கழனிகளை உடைய ஊரனது மார்பை பொருந்தியதால் தேமலை உடைய அல்குலை பெற்ற நின் மகள் பசத்தலை அடைந்தாள் என அறிக அன்னையே!
30
“வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்
றண்ணக மண்ணளை நிறைய நெல்லி
னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள்
பெருங்கவி னிழப்பு தெவன்கொ லன்னாய்”
துறை: சென்ற செய்யுளின் துறை செய்தி இதற்கும்.
விளக்கம்: வேம்பின் அரும்பு போல நீண்ட கண்ணையுடைய நண்டினது தண்ணிய மண் அளையின் (பொந்து) கண், நிறைய நெல்லினது பெருமையுடைய பூ உதிரும் ஊரற்கு இவள் பெரிய அழகிழப்பது யாது கொல்லோ? அன்னையே
– மா கோமகன்