அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை
சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam
மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர். இது அவருடைய இரண்டாவது நாவல். முதல் நாவல் ஆற்றுவெள்ளம் கண்மணி மாத நாவல் போட்டியில் முதல் பரிசு 30,000 ரூபாய் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது மிகச்சிறிய வயதினரான இவரை ஒரு புத்தக கண்காட்சியில் சந்தித்தபோது இவரது தமிழ் ஆர்வம் கண்டு வியந்து போனேன்.இவருடைய அப்பா கவிஞர் கலாப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது
இவருடைய நாவல் கதைக்கருவும் சரி, எழுதிய பாணியும் சரி மற்ற இதுவரை படித்த நாவல்களில் இருந்து சற்று வித்தியாசமாக தோன்றியது , கல்கி, சாண்டில்யன் போன்ற சரித்திர கதாசிரியர்கள்… இந்துமதி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்கள் என எல்லா கதாசிரியர்களுக்கும் அவரவர்களுக்கென தனி பாணி உண்டு. .
தூய தமிழ், சற்று ஆங்கில சொற்கள் கலந்த தமிழ் என சில வகைகளை அவற்றில் காணலாம் . அகிலாண்ட பாரதியின் பாணியோ முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. கதையில் ஆங்கிலச் சொற்களை தமிழ் படுத்துவதற்கு பதில், ஆங்கில வரிகளை அப்படியே உபயோகப்படுத்தி இருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.இவருடைய கதைக்களம் மருத்துவமனையும், கதாபாத்திரங்கள் மருத்துவர்களாக இருப்பதும் அதற்கு இயல்பாக பொருந்துகிறது.இனி எதிர்காலத்தில் இத்தகைய பாணியே இளம் எழுத்தாளர்களால் கையாளபடலாம் எனவும் தோன்றியது.
கதை என்று பார்த்தால் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ‘அறம் வளர்ப்போம்’ என்ற இயக்கத்தை நடத்துகிறார்கள். தங்களால் இயலக் கூடிய அளவில் நற்பணிகள் பல செய்கிறார்கள். முதியோர் இல்லம், அன்னதானம், பள்ளிகளுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்த இயக்கத்தை வளரவிடாமல் தடுக்க மாநில கட்சி ஒன்றின் வட்டச்செயலாளர் முற்படுகிறார்.அவர் சதிகளை முறியடித்து.இவ்விளைஞர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை கதை அழகாக சொல்கிறது – aram valarpom puthaga vimarsanam.
ஆக்க்ஷன்,சென்டிமென்ட் ,நகைச்சுவை, த்ரில்லர் என அனைத்தும் கலந்த ஒரு மசாலா படம் பார்க்கும் அனுபவம். கதையில் நகைச்சுவை இழையோடுவது மேலும் அழகு சேர்க்கிறது. அம்னீஷியா என்ற நோயால் பாதிக்கப்படும் கதை நாயகி. ஒரு பக்கம் வில்லனை சமாளித்துக்கொண்டு நாயகியை பாதுகாக்கப் போராடும் நாயகனும், மற்ற நண்பர்களும்..
நகைச்சுவை இழையோடும் சம்பவங்களின் திருப்பங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. மருத்துவத்துறை சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களுடன் விறுவிறுப்பாக செல்கிறது கதை
மருத்துவமனை வாசனை சற்று அதிகமான அடித்தாலும் படிப்பதற்கு மிகவும் எளிதான, மனம் லேசாக்கிய ஒரு நாவல். பயணங்களில் படிப்பதற்கு தகுந்த ஒரு அருமையான நாவல் .முதல் நாவலிலேயே தன் தடம் பதித்திருக்கிறார் இம்மருத்துவ கதாசிரியர் …ஆம் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
– தி.வள்ளி, திருநெல்வேலி