மின்னிதழ் டிசம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh december 2022

சமீபத்தில் வெளியான நீரோடை மகேசின் கவிதை நூல் “மௌனம் திறந்த நாற்காலி” மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

நவம்பர் மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள்..
தாரா
குறிப்பு: சென்ற மாத வெற்றியாளர்கள் இன்னமும் முகவரி அனுப்பவில்லை

வெற்றியாளர்கள் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.


ஆரோக்கிய சமையல் – பூண்டு சுண்டாங்கி

தேவையான பொருட்கள்

பூண்டு – இரண்டு கட்டை
மிளகாய் – 2
மிளகு – 5
உப்பு – சிறிது
நல்லெண்ணைய் – 1 குழிகரண்டி
கடுகு – தாளிக்க
கறிவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை

பூண்டு தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின் அதனுடன் மிளகாய்,மிளகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை போடவும். பின் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை போட்டு எண்ணெய் பிரியும் வரை மிதமான சூட்டில் வைத்து அடி பிடிக்காமல் கிளறவும். இப்போது மன மணக்கும் பூண்டு சுண்டாங்கி தயார்.
சுடச்சுட இட்லி, சூடான சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு: சளி, இருமலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்

– சூலூர் ஆனந்தி


கவிதை தொகுப்பு

இந்த மாத மின்னிதழில் கவிஞர் மனோஜ் குமார் அவர்களை அறிமுகம் செய்வதோடு அவர்களின் கவிதைகளை வெளியிடுகிறோம்.
“கற்க கசடற”

மணலை தோண்ட தோண்ட தண்ணீர் வரும்
புத்தகங்களை படிக்க படிக்க கல்வியறிவு வளரும்;
அந்த கல்வியறிவால் புகழும், பெருமையும் தேடி வரும்;
இப்பிறவி மட்டும் அல்ல ஏழேழு பிறவிக்கும் பாராட்டு தேடி வரும்

கணக்கும் இலக்கியமும் இரண்டு கண்கள் சொன்னார் வள்ளுவர்;
இவை இரண்டுமே எண் மற்றும் எழுத்து என்று விளக்கமாக சொன்னார் அவர்;
இவ்விரண்டும் இல்லையெனில் சிறுவர்களும் ஏமாற்றுவர்;
படிக்காதவரும் நம்மை விழுங்கி விடுவர்

திறமைசாலிகளை உலகம் விரும்பும்
அவர்களை பிரிந்தால் துன்பத்தில் தேம்பும்;
பேச்சு இனிக்க இனிக்க பேசினால் மயங்கும்;
இதுவே புலவர்களின் சிறப்பு குணமாகும்

கல்வி கற்றல் பெரிதல்ல; கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும்;
இல்லையென்றால் அவமானத்தை சந்திக்க வேண்டும்;
கற்ற கல்வி அனைவருக்கும் பயன்தர வேண்டும்;
இல்லையென்றால் மிருகத்தை போல் சுற்றி திரிய வேண்டும்

உதவியின்றி தவிப்பவர்க்கு உதவி செய்ய படி!
உணவு இன்றி தவிப்பவர்க்கு உணவு போட படி!
அழுபவனின் கண்ணீரை துடைக்க படி!
ஊர் பிரச்சனைகளை தீர்த்துவைக்க படி!

படித்தவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
படிப்பறிவு இல்லாதவரை பார்த்தால் எல்லோருக்கும் வரும் வெறுப்பு ;
உலகத்தில் கல்வி தான் அழிக்கமுடியாத, நிலையான சொத்து;
மற்றவையெல்லாம் நிலையில்லாத, எளிதாக அழியக்கூடிய சொத்து


மௌனம் திறந்த நாற்காலி நூல் விமர்சனம்

நீரோடை மகேஸின் “மௌனம் திறந்த நாற்காலி” கவிதைத்தொகுப்பு அறிமுகம்… – maatha ithazh december 2022

சந்தியா பதிப்பகம்: பக்கங்கள் 80 | விலை 100/-

எளிய தமிழில் எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பு…

முதல் கவிதையே
“என் முண்டாசுக் கவிஞருக்கு”
என்று பாரதியை
வாழ்த்தி வணங்கியிருப்பது
பெருமகிழ்வு..
இன்னும் எத்தனை காலங்கள் கடந்தாலும்
கவிஞர்களால் கொண்டாடப்படுவார் எங்கள் பாரதி….

ஆசிரியர்தினம்
என்ற தலைப்பில்
ஆசிரியர்களை நினைவில் வைத்து குருவணக்கம்
செய்திருப்பது
பாராட்டுதலுக்குரியது. நல்ல பண்பின் அடையாளம்…

இந்த இரவை கடந்துவிட்டால்
மனதை தொட்டது..

தம் கவிதைகளில் உழவர்களுக்கு
ஓரிடம் ஒதுக்கி
நன்றிசெலுத்தியிருப்பது ஆகச்சிறந்த செயல்..

“வீட்டைச் சுற்றி வாழும் சிட்டுக்குருவியையும்,
வீட்டினுள் வாழும் சிட்டுக்குருவி மனதையும் கண்டுகொள்ள யாருமில்லை”
தற்காலத்திற்கு பொருத்தமான சிறந்த வரிகள்..

சகுனம் இன்னும்
ஒழியவில்லை,
வறுமை,
முகவரி தொலைத்த முகில் கூட்டம்,
இளையசமுதாய பறவைகளே
போன்ற
கவிதைகளில்
சமுதாயத்தின் மீது
தனக்கிருக்கும்
அக்கறையை
வெளிப்படுத்தியிருக்கிறார் கவிஞர்…

நண்பனை
பார்த்த கணம்
கவிதை நல்நட்பினை
விவரிக்கின்றது..

“சொல்லெடுத்து அவன் நின்றால்
சோகங்கள் மரணிக்கும்”

நட்பினை பற்றிய நிதர்சன வரிகள்…

வரிகளை வாசிக்கும் போதே கண்ணில் வந்து போகின்றது
அன்பு நட்பின் முகங்கள்…

திருநங்கைகளுக்கான
“இடஒதுக்கீடு” கவிதை மனம் கணக்கச் செய்தது…

“ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்”
தலைப்பிற்காகவே
பாராட்டுகள்…

காதல் பற்றிய பல கவிதைகள் மென்தாலாட்டாய்
மனதை வருடுகின்றன….

“வாயில் கடிக்கும் போது காரம் என விழுங்கிவிட்டேன்
வயிற்றில் தீப்பிழம்பாய்
காதல் என்றார்கள்…..”
பலமுறை படிக்கவைத்தது.

கவிஞரில் தொடங்கி “நிபந்தனையற்ற
அன்பில்” முடிகின்றது
புத்தகம்…

அலங்கார வார்த்தைகளின்றி
எல்லோருக்கும் புரியும் எளிய வார்த்தைகளுக்காகவே பலமுறை பாராட்டலாம்…

ஒரு மாலைப்பொழுதை
இனிமையாககும்
சிறிய புத்தகம்..
அனைவரும் வாசிக்கலாம்.

இன்னும் பல படைப்புகளை வெளியிட மனமார்ந்த வாழ்த்துக்கள்..
– அ.சுசீலா, அவிநாசி.


சிறுகதை – காதலிக்க நேரமில்லை!

அந்த ஐடி நிறுவனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மதிய உணவு இடைவேளை நேரம் …சஞ்சனா சுறுசுறுப்பாக வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னப்பா மணி ஒன் தர்ட்டி..பசி உயிர எடுக்குது! கேன்டீன் போகலாமா தர்ஷினி கேட்க…”

” 10 நிமிட வேலைதான்.. இந்த மெயிலை அனுப்பிட்டு வந்துடறேன்” சஞ்சனா கூறினாள். அரை மனதாய் தர்ஷினி கிளம்பினாள்…

“தர்ஷினி கேண்டீன்ல வெயிட் பண்ணுங்க! சாப்பிட்டு முடிச்சிடாதீங்க.. அம்மா வத்த குழம்பும், எண்ணெய் கத்திரிக்காயும் கொடுத்து விட்டிருக்காங்க ..”

“ஹாய்! சூப்பர்!! அப்ப வெளியில காரிடார்ல வெயிட் பண்றோம்.”என்றவரே தர்ஷினியும் மற்ற நண்பர்களும் நகர்ந்தனர் .

‘அம்மாவால எப்படித்தான் இப்படி இருக்க முடியுதோ? மகளோட கூட சாப்பிடும் நண்பர்களுக்கும் சேர்த்து அதிகமாய் சமைத்து கொடுத்து விடும் மனசு அவளுக்குத்தான் வரும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்த்துப் பார்த்து பண்ணுவாள்…’ நினைப்பை உதறி விட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

அவள் முடித்து விட்டு வெளியே வரும்போது சஜன், கார்த்தி, தனுஷ், விஜய், கோகுல் எல்லோரும் வர..ஒன்றாக கேண்டீனுக்கு கிளம்பினர். அடுத்த ஒரு மணிநேரம் அரட்டையில் கேண்டீன் ரெண்டு பட்டுப் போனது.

சாப்பிட்டு விட்டு அவரவர் இடத்திற்கு திரும்ப, சஞ்சனாவுக்கு சோம்பலாக இருந்தது. எப்போதும் லஞ்ச் வரை மடமடவென வேலை பார்ப்பவள், சாப்பிட்ட பிறகு சோம்பலாக வேகம் குறைவது, எப்போது நடக்கும் ஒன்றுதான். ‘திரும்ப சூடுபிடிக்க இன்னும் ஒரு அரை மணி நேரமாவது ஆகும்’ என்று நினைத்தவாறே சிஸ்டத்தைத் திறந்தாள். தற்செயலாக திரும்பியவள் அவள் சீட்டுக்கு நான்கு சீட்டுகள் தள்ளி உட்கார்ந்திருந்த தனுஷ் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது .அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

தனுஷ் மதுரையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவன். சாதாரண குடும்பம் .அவனுடைய அப்பா கட்டட தொழிலாளி. தனுஷ் நன்றாக படித்ததால், அவன் அப்பா சிரமங்களை பொருட்படுத்தாது, அவனை படிக்க வைத்தார். நல்ல மார்க் எடுத்ததால், அருகில் இருக்கும் எஞ்சினியரிங் காலேஜில் சீட் கிடைத்தது. படித்து முடித்ததும்,இந்த பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது.

கல்லூரியில் அதிகம் தோன்றாத வித்தியாசம், வேலைக்குச் சேர்ந்ததுமே உணரத் துவங்கினான் தனுஷ். நகரத்து வாழ்க்கை… நாகரீகமான சக நண்பர்கள்…நுனி நாக்கு ஆங்கிலம்… எல்லாம் சேர்ந்து ஒரு தாழ்வு மனப்பான்மையை அவனுள் உருவாக்கியது. எவ்வளவுதான் நெருங்கி பழகினாலும், அவனால் நண்பர்களுடன் ஒட்ட முடியவில்லை. நண்பர்கள் கூட்டத்தில் சஞ்சனா மட்டுமே தனியாக தெரிந்தாள். மற்றவர்கள் கேலியாக பேசினாலும், அதை கட் பண்ணி சப்போர்ட் பண்ணுவாள். அவனை எப்போதும் என்கரேஜ் பண்ணுவாள். அதனாலேயே சஞ்சனாவிடம் தனிப் பிரியம் ஏற்பட்டது.

சஞ்சனா என்ன பெண் இவள்… எவ்வளவு அழகாக இருக்கிறாள். அழகு இருக்கும் இடத்தில் திமிர் இருக்கும் என்பார்களே, ஆனால் இவள் எவ்வளவு இனிமையாக பழகுகிறாள். யாரையும் புண்படுத்தாமல் இவளால் மட்டுமே பேச முடிகிறது நினைத்துப் பார்க்கையில் சஞ்சனா பேரிலுள்ள மரியாதையாக இன்னும் கூடியது.

மாலை கேப் வர தாமதமானது.. டிரைவர் போன் பண்ணி சொல்ல.. சஞ்சனாவும், தர்ஷினியும் லாபியில் அமர்ந்தனர்.

“இன்னைக்கு வீட்டுக்கு போறதுக்குள்ள ஒன் அவராவது லேட் ஆயிடும்” என்றாள் சஞ்சனா சலிப்பாக…

” சஞ்சு.. தனுஷை கவனிச்சியா அவன் உன்னையே உத்து உத்துப் பார்க்கிறான்… உன்ன பத்தியேதான் பேசுறான். எனக்கென்னவோ சரியா படல …ஏதோ நெருடுதுப்பா..”

“போப்பா எனக்கு எதை எடுத்தாலும் சந்தேகம் தான் .அவன் கிராமத்தில் படித்து வளர்ந்த பையன். கூச்ச சுபாவமா இருக்கிறான். தாழ்வு மனப்பான்மை ரொம்ப இருக்கு. நம்ம பசங்க ஏதாவது கிண்டலடிக்கிறாங்க.. பாவம் சுருங்கி போயிடுறான். ஸ்டப் நிறைய இருக்கு. அதனால தான் நான் அவனை என்கரேஜ் பண்றேன்.”

“சரி தான் சஞ்சு… இருந்தாலும் கேர்ஃபுல்லா இரு. எந்த புற்றில எந்த பாம்பு இருக்குன்னு சொல்ல முடியாது… திடீர்னு ப்ரொபோஸ் பண்ணிடப் போறான்.. ஜாக்கிரதை” என்றாள் கிண்டலாக. விளையாட்டாக தர்ஷினி சொன்னாலும், சஞ்சனாவுக்கு அவள் கூறுவது உண்மையாக இருக்குமோ என்ற நெருடல் ஏற்பட்டது. எது எப்படி இருந்தாலும் இதை வளர விட கூடாது என்று நினைத்துக்கொண்டாள்.

கேப் வந்துவிட்டதால் இருவரும் கிளம்பினர். வீட்டிற்கு வந்தபோது அப்பா வாசலிலேயே நின்றிருந்தார். தன்னை காணோம் என்று தவித்துப் போயிருப்பார் என்று தோன்றியது. தனுஷ் விஷயத்தில் மைண்ட் டிஸ்டர்ப் ஆனதில் வீட்டிற்கு வர தாமதமாகும் என்று சொல்ல மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அழுத்தியது.

” சாரிப்பா ” என்றவளை பேசவிடாமல்….

” போம்மா போய் கைகால் கழுவிட்டு… டிரஸ் மாத்திட்டு வா… அம்மா உனக்கு பிடிச்ச ஆப்பமும், தேங்காய் பாலும், காரச் சட்னியும் பண்ணியிருக்கா… அப்பாவும் இன்னும் சாப்பிடலை… பசி வயிற்றை கிள்ளுது.. சீக்கிரம் வா “என்று சகஜமாக பேச…

“இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்…” என்றவாறு குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.

‘ எவ்வளவு பிரியமான அப்பா. எவ்வளவு தூரம் என்னை புரிந்து வைத்திருக்கிறார். எதற்கும், என்றைக்கும், சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை .என் பேரில் அவ்வளவு நம்பிக்கை. அப்பாவை நினைத்த போது மனது பெருமையில் பொங்கியது .

அதே நேரம் தன் ரூமில் தனுஷ் குழம்பிக் கொண்டிருந்தான். ‘சஞ்சனாவிடம் தன் காதலை எப்படி சொல்வது? தன் மனதில் உள்ளதை லெட்டரில் எழுதிக் கொடுத்து விடுவோம். சே.. அது பழைய டெக்னிக். தன் மனதை பிரதிபலிப்பதைப் போல நல்ல கார்டு செலக்ட் பண்ணி, வாங்கி, கையில் கொடுத்து விட வேண்டியதுதான்’ என்று முடிவு பண்ணிக் கொண்டான்.

மறுநாள் வழக்கம்போல லஞ்ச் முடித்து, சீட்டுக்கு திரும்பிய சஞ்சனா தனுசை அழைத்தாள்..

” தனுஷ் ஈவினிங் ஆபீஸ் முடிந்ததும் கேன்டீன் போவோமா? உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றாள்.

தனுஷ்க்கு அதற்குப் பிறகு வேலை ஓடவில்லை. ‘சஞ்சனாவும் என்னை விரும்புகிறாளோ? என்ன சொல்ல போகிறாள்?’ என்று யோசித்து, குழம்பி, தவித்துப் போனான். ‘எது எப்படி இருந்தாலும், கிடைக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடகூடாது..’ என்று முடிவு பண்ணி கொண்டான்.

சஞ்சனா 5 மணி ஆனதும் நினைவாக அப்பாவுக்கு போன் பண்ணி,’ சாயங்காலம் வர சற்று நேரம் ஆகும்’ என்று தெரிவித்தாள். அவள் மனது தெளிவாக இருந்தது. தனுஷ் வர, இருவருக்கும் காபியும் பர்கரும் ஆர்டர் செய்தாள். மௌனமாக தலைகுனிந்து அமர்ந்திருந்த தனுஷை பார்த்து ..

“என்னப்பா… பேசாமல் இருக்க?” ..தனுஷ் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்க… சஞ்சனாவே தொடர்ந்தாள். “சஞ்சனா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. நான் உன்னை காதலிக்கிறேன். உன்னையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். நீ கண்டிப்பா என் காதலை ஏத்துக்கணும். இதைத்தானே சொல்ல நினைக்கிறே தனுஷ்…”சஞ்சனா முடிக்க, தனுஷ் அவளை ஏறிட்டுப் பார்த்தான்…

“என் உணர்வுகள் உனக்கு புரியல சஞ்சனா! ஏன் எனக்கு உன்னை காதலிக்க தகுதி இல்லையா? நீ என்னை பார்த்து கேலி பண்றியா?”

“நிச்சயமா இல்லை தனுஷ்! நீதான் என்னை புரிஞ்சுக்கணும்.. இந்த காதல், கத்திரிக்காய், இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை! நான் கேரியர்ல நிறைய சாதிக்கணும்னு துடிக்கிறேன் “

“சஞ்சனா உன் நினைப்பு புரியுது.. நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அழகிலும், அந்தஸ்திலும் உனக்கு சமமானவன் கிடையாது. அதனால தான என்ன வேணாங்கற”

“கண்டிப்பா கிடையாது தனுஷ்! நானும் உன்னை மாதிரி சாதாரண குடும்பத்து பொண்ணுதான். கஷ்டப்பட்டு படிக்க வச்சுத்தான் எங்கப்பா என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காரு! எங்க அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு….

ஒரு மகன் இருந்திருந்தா ,படிச்சு, நல்ல வேலை பார்த்து, அவருடைய அந்தஸ்தை நிச்சயமா உசத்தி இருப்பான். இப்போ அந்த இடத்தில் நான் இருக்கேன். என்னால எங்க அப்பா நிச்சயம் உயரனும்.. பணம் அந்தஸ்து பெருமை எல்லாத்திலேயும் உயரனும்… நான் அதில் ரொம்ப உறுதியா இருக்கேன். கடுமையா உழைச்சு கேரியரில் மேல வருவேன்..

என் குடும்பத்திற்கு பெருமை தேடித் தருவேன். காதல்ல சிக்கிக்கிட்டு என் லட்சியத்தை இழக்க நான் தயாராக இல்லை. கஷ்டப்பட்டு நம்மள மேல கொண்டுவந்த பெற்றோரை மனக் கஷ்டத்திற்கு ஆளாக வேண்டாம்னு நினைக்கிறேன். நீ என்னைக்குமே என்னுடைய நல்ல நண்பன் “

“கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்து, உன் படிப்பினால் முன்னேறி, இந்த இடத்தில நிக்கிற .அதனாலேயே எனக்கு உன் மீது தனி அன்பு, மரியாதை. அதை கெடுத்துக்க வேணாமே…ஆயுள் பூரா நல்ல நண்பனா இரு. நீ யோசிச்சு பாரு… என் வார்த்தையில் உள்ள நியாயம் உனக்கும் புரியும். நான் வர்றேன்…” கம்பீரமாக நடந்தாள் சஞ்சனா.

தனுஷ் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்தான். ஒரு பெண் தன் குடும்பத்திற்காக இவ்வளவு தூரம் யோசிக்கும்போது, ஒரு ஆண்மகனாக தான் தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமை புரிந்தது. குழம்பி இருந்த மனதில் தெளிவு பிறந்தது.இனி சஞ்சனாவிற்காக ஒரு கார்டு வாங்க வேண்டுமென்று தீர்மானித்தான். அது அவனை அவனுக்கே புரிய வைத்த அன்பு சிநேகிதிக்கு ஒரு நல்ல நண்பன் கொடுக்கும் நட்பின் கரமாக இருக்கும்.

தெளிந்த மனதுடன் நடந்தான் தனுஷ்…

– தி.வள்ளி, திருநெல்வேலி


செப்டம்பர் மாத ராசி பலன்கள்

மேசம்
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். மேலும் இந்த மாதத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். சில நேரங்களில் மனதில் சலிப்புகள் வரலாம். பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பணியாளர்கள்  வெற்றி காண்பார்கள். வியாபாரம் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் கூடுதல் வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றியடைவார்கள். விவசாயம் சுமாராகவே அமையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.

ரிசபம்
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையை செய்வார். வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருக்காது. கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். மற்றவர்களை அனுசரித்து போகவும், சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும்.  முடிவுகள் எடுக்க தாமதம் ஆகலாம். பணியாளர்கள் பணியில் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம். கலைஞர்கள் தேவை பூர்த்தியடையும். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் உச்சம் அடையும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்
இந்த மாதம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வரலாம். வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் மனக்குழப்பம் அடைவார்கள். வியாபாரத்தில் பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

கடகம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். பழைய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் நெருக்கம் காட்டுவார்கள். பயணத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புகள் உள்ளன. யாரிடமும் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியில் சிரமப்பட நேரிடும். வியாபாரம் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். புதிய நம்பிக்கை பிறக்கும். பிற சமயங்களில் எதற்கும் கோபப்பட வேண்டாம். வீட்டில் சுப காரியம் ஒன்று நடக்க வாய்ப்புகள் உள்ளன. மற்றவர் பேச்சை நம்ப ஏமாற வேண்டாம். வீட்டில் பெண்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கலாம். கலைஞர்களுக்கு அரசாங்க ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

கன்னி
இந்த மாதம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். தங்களுக்கு பணவரவு நன்றாக அமையும். இந்த மாதம் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. வெளிவட்டத்தில் உங்கள் மதிப்பு உயரம். எதை செய்தாலும் அதிக முயற்சி தேவைப்படும், சில சமயங்களில் திடீர் செலவுகள் வர வாய்ப்புள்ளது. பணியாளர்கள் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் அதிக நன்மை அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.

துலாம்
இந்த மாதம் ராகு பகவான் நன்மையை செய்வார். பிறரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும், ஆனால் வீண் குழப்பங்கள் வரும். எதிரிகள் தங்கள் வசம் சரண் அடைவார்கள். பணியாளர்கள் முன்கூட்டியே பணிகளை முடிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும். 
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் நன்மை தரும்.

விருச்சிகம்
இந்த மாதம் புதன் பகவான் நன்மையை செய்வார். வெளிவட்டத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வீட்டில் ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. பயணத்தின் போது கவனமாக செயல்படவும். உடல் நலம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் அதிக நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளன. விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.

தனுசு
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் நலம் சீராக இருக்கும். வரவு செலவு சிக்கல்கள் வரலாம். வெளியூர் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. புதிய யோசனைகளை கைவிடவும். பணியாளர்கள் காரிய வெற்றி அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நன்மதிப்பு அடைவார்கள். மாணவர்கள் புதிய வழி பின்பற்றுவார்கள். விவசாயிகளுக்கு புதிய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.

மகரம்
இந்த மாதம் சனி பகவான் நன்னையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. சுப நிகழ்வுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். அண்டை வீட்டார்கள் சலசலப்பை உருவாக்க வாய்ப்பு உள்ளது, தேவையான பணவரவு அமையும். பணியாளர்கள் திறமையுடன் செயல்படுவார்கள். வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்
இந்த மாதம் குருபகவான் நன்மையே செய்வார். தங்களுக்கு எதையும் தாங்கும் துணிவு பிறக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து விழா செல்ல வாய்ப்புகள் உள்ளன. பண வரவு நன்றாகவே அமையும். பணியாளர்கள் பணியில் நன்கு கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வருவாய் இழப்பு அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் குறைந்த லாபமே கிடைக்கும்.
பரிகாரம்: பிரதோச பகவான் வழிபாடு செய்து வரவும்.

மீனம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். வெளிவட்டத்தில் சில உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முக்கிய நபர்கள் சந்திப்பு நிகழும். எந்த பிரச்சினையிலும் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் பணி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் திட்டமிட்டு செயல்படுவார்கள். விவசாயத்தில் சுமாரான லாபமே கிடைக்கலாம். 
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும் – maatha ithazh december 2022.

– முத்துசாமி அஞ்சல் துறை ஓய்வு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *