தன்வந்தரி சித்தர்

சித்தர் தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் 18 சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார் – dhanvantari siddhar

dhanvantari siddhar

மருத்துவத்தில் முக்கிய சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு ஆகியவை குறிப்பிடத்தக்கது.

தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

தோற்றம்

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வ் வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்

மருத்துவம்

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான்.

பிரம்ம வைவர்த்த புராணம்

இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார். சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.

தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள்.

சிறந்த மருத்துவர்

சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.

புராண கருத்து

சமகால சித்தர்கள் கூற்றுப்படி தன்வந்திரி பூமியில்‌ விஷ்ணு குலத்தில்‌ மானிடராய்‌ பிறந்தவர்‌. இவரை மகாவிஷ்ணுவின்‌ அவதாரம்‌ என்றும்‌ கூறுவார்கள்‌. இவர்‌ மண்ணுலக மக்கள்‌ நன்மைக்காக முப்பத்திரண்டு தலைமுறைகளில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மனிதனாகப்‌ பிறந்து ஆயுர்வேதம்‌ என்ற மருத்துவ நூலைத்‌ தொகுத்து அளித்துள்ளார்‌.

மேலும் அகத்தியர்‌ 12000 என்ற நூலின்படி மகாவிஷ்ணுவே தன்வந்திரி பகவான்‌ என்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ நோயற்ற நல்வாழ்வை இன்புற்று வாழ வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ தமிழகத்தில்‌ மானிடராய்ப்‌ பிறந்து ஆயுர்வேத வைத்திய சித்தாந்தங்களை யெல்லாம்‌ தமிழ்க் கவிதை வடிவில் தொகுத்துத் தந்துள்ளார்‌ என்றும்‌ தெரியவருகிறது.

ஜீவ சமாதி

நாகை மாவட்டம்‌ வைத்தீஸ்வரன்‌ கோவில்‌ என்ற திருத்தலத்தில்‌ ஜீவ சமாதி பூண்டு இன்றும்‌ வைத்திய நாத சுவாமியாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌. இத்தலம்‌ நவக்கிரக தோஷப்‌ பரிகாரத் தலங்களுள்‌ செவ்வாய்‌ தோஷப்‌ பரிகாரத்‌ தலமாக விளங்கிவருகிறது – dhanvantari siddhar

You may also like...