என் மின்மினி தொடர்கதை (பாகம் – 74)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-74
En minmini thodar kadhai
ஒரு வினாடி அமைதிக்கு பிறகு ம்ம்…வாங்க தம்பி போகலாம் என்றபடி ஷீலா டீச்சர் ஆம்புலன்சில் முதலில் ஏறி கொள்ள ஆஸ்பத்திரியில் உள்ள உதவியாளர்கள் உதவியுடன் பாரதியின் உடலும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பயணம் தொடங்கியது…ஆம்புலன்ஸ் வேகமாக செல்லும் சத்தம் தவிர பிரஜினுக்கு வேற எதுவும் மனசில் பெரிதாக நிற்கவில்லை.
பாரதியின் உடல் முழுவதுமாக வெள்ளைத்துணியால் பொதியப்பட்டு படுக்கவைக்க பட்டு இருப்பதையும்,ஷீலா டீச்சரையும் மாறி மாறி பார்த்து கொண்டே மனதுக்குள் எதையோ நினைத்தபடி கண்களை மூடினான்.கண்களின் ஓரத்தின் வழியாக கண்ணீர் துளிகள் மெதுவாக விடைபெற்று அவனது கைகளில் விழ கண்களை மெதுவாக திறந்து டீச்சர்……என்றான் பிரஜின்….
எதுவும் பேசாமல் பாரதியின் உடலையே பார்த்து கொண்டிருந்த ஷீலா டீச்சர்.,சொல்லுங்க தம்பி என்ன ஆச்சு என்றாள்…
ஒண்ணும் இல்லைங்க டீச்சர்.இப்போ நாம போறது பாரதியோட வீடுதானா…அவங்களுக்கு அவங்க பையனை தவிர அங்கே வேற யாரு இருக்காங்க.அந்த பையனுக்கு இவங்களை தவிர உறவினர்கள் யாரு இருக்காங்க என்றபடி அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினான்…
ம்ம்.பாரதியோட வீடுதான் தம்பி. ஆனா எனக்கு தெரிஞ்சு அவங்களுக்குன்னு யாரும் இருந்த மாறி தெரியல.முகிலுக்கு அப்பா இறந்த பிறகு பாரதிக்கு முகில்,அவனுக்கு பாரதி அப்படின்னு மட்டும் தான் இருந்தாங்க…அதான் உடம்பை கொண்டு போயி இறுதி சடங்குக்கு என்ன பண்ண போறேன்,யாருக்கு எல்லாம் தகவல் சொல்லணும்,என்னென்ன செய்யணும் கூட தெரியல…
அதுக்கு அப்பறம் முகில்.,அவன் நிலைமை இன்னும் எனக்கு இரத்தகண்ணீரையே வர வைத்து விடும் போல என்று அவள் மனசுக்குள்ளே இருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்தாள் ஷீலா டீச்சர்…
அனைத்தையும் கேட்டபடியே.,வாழ்க்கை போகுற போக்கை பார்த்தால் நிலைமை மிகவும் கடினமாக தான் இருக்கும் என்று தோணுது.இருந்தாலும் நாம எதையாச்சும் ஒண்ணு செய்து தானே ஆகணும் என்று டீச்சரை சமாதானம் செய்ய முயற்சித்தான் பிரஜின்…
மீண்டும் இருவரும் அமைதியாக பாரதியின் உடலையே பார்க்க தொடங்கினர்.ஆம்புலன்ஸ் அதே வேகத்தில் சென்று கொண்டே இருக்க அப்படியே கொஞ்சம் நேரத்தில் சாளரம் வழியே வரும் காற்றில் இருவரும் லேசாக கண் அயர்ந்தனர்…
சரியாக நாற்பது நிமிட பயணத்துக்கு பிறகு மெதுவாக கண்களை கசக்கியபடியே,இந்த தெரு தான் அண்ணே…இங்கேயே வண்டியை நிறுத்துங்க என்று டிரைவரை பார்த்து கொஞ்சம் சத்தமாக சொன்னாள் ஷீலா டீச்சர்…
அவளது குரலைக்கேட்டு கண் அயர்ந்து இருந்த பிரஜினும் கண்களை திறந்து பார்த்து,டீச்சர் வந்துட்டோமா…இதுதான் அவங்க குடியிருந்த வீடா என்று கேட்க நினைக்க,அதற்குள் ஆம்புலன்ஸ் பாரதியின் வீட்டு வாசலில் வந்து நின்றது…
ம்ம் வாங்க தம்பி.ஆக வேண்டிய வேலையை பார்ப்போம் என்றபடி கதவை திறந்தபடி கீழே இறங்கினாள் ஷீலா டீச்சர்…அவளை தொடர்ந்து பிரஜினும் கீழே இறங்கினான்…
ஆம்புலன்ஸ் வருவதை பார்த்த அந்த கிராம மக்களும் பாரதியின் வீட்டு வாசலில் ஒன்றாக கூடினர்…
தனது அம்மா இறந்து போயி உடல் ஆம்புலன்சில் வந்தது கூட தெரியாமல் கையில் ஒரு கிளி பொம்மையை வைத்து விளையாடியபடியே வெளியே வந்து டீச்சர்,என்னை தேடி நீங்களே இங்கே வந்துட்டீங்களா என்று குரல் கொடுத்தவாறு சிரித்துக்கொண்டே டீச்சரை பார்த்து ஓடி வந்தான் பாரதியின் மகன் முகில்…
என்னவென்று சொல்வது உன்னுடைய உலகின் மிகப்பெரிய பேரழகி இனி உன்னுடன் இல்லை என்று சொல்வதா…(இல்லை)
இனி உனக்கு யாரும் இல்லை,நீ அனாதை ஆகி விட்டாய் என்று சொல்வதா…
என்ன நான் சொல்லுவேன் என்று மனசுக்குள்ளே புழுங்கியபடி அவளை நோக்கி ஓடிவரும் முகிலை வாரியணைத்து கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்த படி கண்களில் கண்ணீரை வழியவிட்டு வேறு வழியின்றி நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள் டீச்சர்…
ஆனாலும் அவன் வயதுக்கு தன் அம்மா நம்ம கூட இல்லை. சாமிகிட்ட போயிட்டாங்க என்று மட்டும் தான் புரிந்தது…எனக்கு அம்மாகிட்டே போகணும்,எங்க அம்மாவை என்னை பார்க்க சொல்லுங்க என்று அடம் பிடித்து அழுது புரண்டான் முகில்…
அத்தனையும் பார்த்து கொண்டிருந்த ஊர் மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்து சொல்ல வார்த்தைகள் எதுவும் இன்றி கண்ணீர் மல்க அழுது புலம்பியபடியே அந்த குழந்தையை எடுத்து சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர்…
பிரஜனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.மாறாக கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க தன்னை தானே நொந்தபடி ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தான்…
நேரம் செல்ல செல்ல….ஆம்புலன்ஸ் டிரைவர் குரல் கொடுக்க ஆரம்பித்தார்…எம்மா உடலை வண்டியில் இருந்து இறக்குங்க…நான் ஆஸ்பத்திரிக்கு அடுத்த வேலையா போக வேணும் இல்லையா….தப்பா நினைக்காமல் கொஞ்சம் இறக்கி விடுங்கம்மா என்றார்…
அதுவரை அமைதியாக நின்று கொன்டிருந்த பிரஜின்.,வேகவேகமாக விரைந்து கிராம மக்கள் சிலரின் உதவியுடன் பாரதியின் உடலை வண்டியில் இருந்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு சென்றான்…
தனது அம்மா தன்னுடன் இல்லை என்பதை எப்படி வெளிப்படுத்துவது என்று கூட தெரியாமல் அம்மாகிட்டே போகணும் என்று மட்டும் சொல்லியபடி அழுதுகொண்டே இருந்தான் அந்த குழந்தை…
நிகழ்ந்த அனைத்தும் பிரஜினுக்கு நெஞ்சை பிழிவது போல இருந்தது…அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்தான் அவன்…
பாகம் 75-ல் தொடரும்…
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)
மீண்டும் தொடர்ந்து வெளியிடத் துவங்கியது வாழ்த்துக்கள்.
கதை சுவாரஸ்யம் குறையவில்லை.
முந்தைய சில பதிவுகளை வாசித்தேன் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடிகிறது வாழ்த்துக்கள்