ஏழு தலைமுறைகள் புத்தக அறிமுகம்
இந்த பதிவின் வாயிலாக திண்டுக்கல் அம்பாத்துரையை சேர்ந்த ரெ. பாலமுருகன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம்செய்கிறோம். நூல் அறிமுகம் என்னும் இந்தப் பகுதியில் ஏழுதலைமுறைகள் என்னும் புத்தகத்தைப் பற்றி எழுதிய வளரும் வாசகர், படைப்பாளிக்கு நீரோடையின் வாழ்த்துக்கள் – ezhu thalaimuraigal book review.
ஏழுதலைமுறைகள் என்னும் இந்த நாவல் 1976 ஆம் ஆண்டு அலேக்ஸ் ஹாலி என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 2001 ஆம் ஆண்டு திரு. எத்திராஜலு அவர்களால் தமிழில் வேர்கள் (Roots) என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் சுருக்கப்பட்ட பதிப்பே ஏழுதலைமுறைகள் என்னும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவின் மைந்தர்களான கறுப்பினத்தவர்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதை தெளிவாக இப்புத்தகம் விளக்குகிறது. அமெரிக்காவில் வெள்ளையர்கள் உயர்ந்தவர்களாகவும் கறுப்பர்கள் தாழ்ந்தவர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டு மனித மனங்களை நிறவெறி ஆட்டிப்படைத்த காலகட்டத்தினை இந்த நூல் விவரிக்கின்றது.
பொக்கிஷமாகக் கருதினர்
இந்தப் புத்தகம் வெளியானபோது உலகெங்கிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கறுப்பர்கள் இந்தப் புத்தகத்தை தங்களது பொக்கிஷமாகக் கருதினர். இந்த நூலானது பல தலைமுறைகளாக தாங்கள் அனுபவித்த வேதனையும் மனக்குமுறல்களையும் வலிகளையும் உலகிற்கு எடுத்துரைப்பதாகக் கருதினர்.
அடிமைப்பட்ட ஒவ்வொருவரும் இந்த நாவலில் வரும் கதை தன்னுடைய சொந்த வாழ்வின் கதையாகவே கருதினர். இந்த நாவலின் கதை ஆப்ரிக்காவில் விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட ஒரு கிராமத்தில் தொடங்குகிறது – ezhu thalaimuraigal book review.
அந்தக் கிராமத்தில் வாழ்ந்த ஒரு தம்பதியின் மகனாகப் பிறந்தவர் குண்டட்டா கின்டே. பதின் வயதை அடைந்த இளைஞர்களுக்குத் தனியாக முகாம் அமைத்து கடுமையான தற்காப்புப் பயிற்சி அளிப்பது அந்த ஊரின் வழக்கம். குண்டட்டாவும் அந்தப் பயிற்சியை சிறப்பாக முடித்தான்.
அந்த ஊரின் வழக்கப்படி, பயிற்சி முடிந்து வரும் இளைஞர்கள் தன் குடும்பத்தினருடன் ஒரே குடிசையில் வசிக்கக் கூடாது. அதனால், குண்டட்டா தான் தங்குவதற்கான குடிசையை அமைப்பதற்காகக் மூங்கில்களைச் சேகரிக்கக் காட்டுக்குள் சென்றான். அந்த நேரம் வெள்ளையர்கள் சிலர் குண்டட்டாவை பலமாகத் தாக்கி கடத்த முயற்சித்தனர். தான் பெற்ற பயிற்சியெல்லாம் பிரயோகப்படுத்திய குண்டட்டா, வெள்ளையர்களைச் சமாளிக்க முடியாமல் மயங்கி விழுந்தான்.
துக்கம் அதிகமாகியது
அவன் கண் விழித்தபோது இருள் மற்றும் அதனுடன் சேர்ந்து அலைகளின் இரைச்சலும் அவனை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. தான் கப்பலில் இருப்பதை உணர்ந்தான். அவன் கப்பலின் மேல்தளத்தை அடைந்த போது, தான் மட்டும் இந்தக் கப்பலில் கடத்திவரப்படவில்லை, தன்னை போன்று பலர் கடத்திவரப்பட்டத்தைத் தெரிந்து கொள்கிறான்.
தங்களை எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை அறியாமல் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். இவர்கள் யார்? ஊரில் என்னைப் பிரிந்த தாய் தந்தையர் என்ன துயரத்தை அடைந்து கொண்டிருப்பர்? என்பதை என்னும் போது அவனுக்குத் துக்கம் இன்னும் அதிகமாகியது.
14 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரை அமெரிக்காவில் அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. ஒருகட்டத்தில் ஆப்ரிக்காவில் இருந்து கடத்திவரப்பட்ட அடிமைகள் யாருடைய அடிமைகள் என்பதை அறிந்து கொள்வதில் முதலாளிகள் குழப்பம் கொண்டனர். இந்தக் குழப்பங்களை எப்படி கையாளுவது என முதலாளிகள் யோசிக்கையில் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த முடிவால் பாதிக்கப்பட்டது என்னவோ அடிமையாக்கப்பட்டவர்கள் தான்.
அடையாளம் பிரிப்பதற்காக அவர்கள் முதுகில் முதலாளியின் பெயர் தீயினால் பொறிக்கப்பட்டது. இதனால் அவர்கள் எங்கும் தப்பிக்கவும் முடியாது, முதலாளிகள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டனர்.
கப்பல் பயணத்தில் போதையில் மிதந்த வெள்ளையர்கள் அடிமைகள் அனைவரையும் கப்பலின் மேல் தளத்திற்கு அழைத்துவந்து நிர்வாணமாக ஆட சொல்வது வழக்கம். இந்த செயலால் குண்டட்டா வெட்கி தலைகுனிந்தான். கோபம், இயலாமை எல்லாம் சேர்த்து அவனை நிலை குலையச் செய்தது. ஒரு கட்டத்தில், அவன் மற்றவர்களோடு சேர்ந்து இந்த வெள்ளைப் பூச்சாண்டிகளை கொன்றுவிட்டு தப்பித்து விடலாம் என்று திட்டம் தீட்டுகிறான். ஆனால், சிறு தவறினால் அந்தத் திட்டம் முறியடிக்கப்படுகிறது – ezhu thalaimuraigal book review.
உண்மைச் சம்பவங்கள்
இந்தச் செயலுக்காக தண்டிக்கப்பட்ட குண்டட்டா ஒரு மிகச்சிறிய இருட்டு கட்டடியில் நாள் கணக்கில் சிறைவைக்கப்படுகிறான். சிறுநீரும் மலமும் சேர்ந்து அந்த கட்டடியில் துர்நாற்றம் வரத் தொடங்கியது. வாழக் காத்திருக்கும் ஒரு இளைஞன் அமெரிக்க முதலாளிகளின் நிலங்களில் உழைப்பதற்காகக் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி நரக வேதனையில் கப்பலில் பயணிக்கிறான்.
இது எதோ ஒரு நாவலுக்காக கற்பனையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இதனை வாசித்து கொண்டிருப்பவர்கள் எண்ணி விட வேண்டாம். இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்கள்.
இதுபோல ஆப்ரிக்கர்களுக்கு மட்டும் தான் நடந்ததா..? ஆப்ரஹாம் லிங்கன் 1865ல் அடிமை முறையை ஒழித்த பிறகு அனைத்தும் மாறி விட்டதா? என்றால் அதுவும் இல்லை. பணம், அதிகாரம், முதலாளித்துவம் கொண்டவர்கள் இன்றும் சக மனிதர்களை அடிமையாக நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம் கண்முன்னே நம் சகோதரர்கள் இதே போன்று இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆம் நண்பர்களே…
சோளகர் தொட்டி
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நம்முடைய காவல் துறையே நம் மக்களை மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தி உள்ளனர். திரு. பாலமுருகன் எனும் சமூக செயற்பாட்டாளர் சோளகர் தொட்டி என்னும் புத்தகத்தின் மூலம் அந்த இன்னல்களைப் பதிவு செய்துள்ளார். குண்டட்டாவிற்கு நடந்ததைப் போல பலமடங்கு இன்னல்களுக்கு நம்மவர்கள் ஆளாக்கப்பட்டனர். அரசியல் அதிகாரத்தினாலும், பணபலத்தினாலும் ஊடகங்களால் மறைக்கப்பட்டு வெளிஉலகத்திற்கு தெரியப்படுத்தாமலும் அவர்களது இன்னல்களுக்கு நீதி கிடைக்காமலுமே மண்ணில் புதைந்தனர்.
நீண்ட கடல் பயணத்திற்குப் பிறகு கப்பல் அமெரிக்காவைச் சென்றடைகிறது. அங்கு குண்டட்டா ஒரு முதலாளிக்கு விற்கப்படுகிறான். முதலாளியின் நிலத்தில் குண்டட்டா வேலை செய்யத் தொடங்குகிறான். அப்போது அங்கு வேலை செய்பவர்கள் அனைவரின் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் எங்கும் தப்பித்துச் செல்லாதவாறு கண்காணிக்கப்படுவதைப் பார்த்தான். இதனால் அங்கிருந்து தப்பித்துச் செல்லும் தன் எண்ணத்தை சிறிது நாள் கழித்து செயல்படுத்தலாம் என மனதிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
அங்கு இருக்கும் அனைவரிடமும் அன்பாகப் பழகினான். முதலாளியிடம் விசுவாசமாகவும் இருந்தான். தப்பிக்கும் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய நாளும் வந்தது. முதலாளியின் வேட்டை நாய் அவனைத் துறத்தி காயப்படுத்தியது. குண்டட்டா தன் முதலாளியிடம் மாட்டிக் கொண்டான். கோபமுற்ற முதலாளி குண்டட்டாவின் கால்களைத் தாக்கி சேதப்படுத்தினான்.
சமையல் வேலை செய்யும் பெண்
காயங்களுடன் தன் அறையில் முடங்கிக்கிடந்த குண்டட்டாவிற்கு, முதலாளிக்கு சமையல் வேலை செய்யும் பெல் என்ற பெண் முதலாளிக்குத் தெரியாமல் உதவிகள் செய்தாள். நாளடைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கிஜ்ஜி (தங்களை மீட்க வந்தவள்) என்னும் பொருளில் பெயர் வைத்தனர். அந்தக் குழந்தையும் அவர்களோடு அடிமையாக வேலை செய்தது.
நாட்கள் நகர்ந்தன. முதலாளிக்குப் பணத்தேவை இருந்ததால் சில அடிமைகளை விற்க முடிவு செய்தான். அதில் குண்டட்டாவின் மகள் கிஜ்ஜியும் ஒருத்தி. குண்டட்டா முதலாளியிடம் எவ்வளவு கெஞ்சியும் கண்ணீர் வடித்தும் எந்தப் பயனும் இல்லை. ஒரு சோகமான நாளில் கொடூரமான இன்னொரு முதலாளி கிஜ்ஜியை வாங்கிச் செல்கிறான்.
இரண்டாவது தலைமுறை
ஒருவன் தன் வாழ்வில் எத்தனை இன்னல்களைத் தாங்கிக் கொள்ள முடியும். வாழ்க்கை ஆரம்பிக்க இருக்கும் போது தன் பெற்றோரை இழந்தான். வாழ்க்கை ஓட்டத்தில் சிறு வசந்தம் ஏற்படும் போது அதுவும் கலைந்தது. இந்தக் கணத்திலிருந்து கிஜ்ஜியின் வாழ்க்கை தொடங்குகிறது. இது இரண்டாவது தலைமுறை. கிஜ்ஜியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இப்படி அடிமை வாழ்விலேயே ஐந்து தலைமுறை வந்துவிடுகிறது. ஒவ்வொரு தலைமுறையினரும் அவர்களது குடும்பக் கதையை அடுத்தத் தலைமுறைக்குக் கதைகள் மூலம் கடத்திக் கொண்டே வருகிறார்கள்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடிமை முறை ஓழிக்கப்பட்ட பிறகு, நிலங்களை வாங்கி பயிர் செய்து தனது ஏழாவது தலைமுறையில் சுதந்திரத்துடன் வாழத்தொடங்கினர். இந்த நாவலை எழுதிய அலேக்ஸ் ஹாலி இந்தக் குடும்பத்தில் வந்த ஏழாவது தலைமுறையைச் சார்ந்தவர். இந்த நாவல் The Roots என்னும் பெயரில் திரைப்படமாக வெளி வந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 1% இருக்கும் பெரும் பணக்காரர்களும், வியாபார முதலைகளும், அரசியல் வியாதிகளும் அவர்களது சுய நலத்திற்காகவும் லாபத்திற்காகவும் ஒட்டு மொத்த மக்களின் உழைப்பையும் அறிவையும் விழுங்கிக் கொண்டேதான் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நாமும் இன்னொரு முறை யாருக்கும் அடிமையாகாமல் சுய சார்போடு தன்னையும் நாட்டையும் உயர்த்துவோம்.
– ரெ. பாலமுருகன், அம்பாத்துரை
அருமையான விமர்சனம்
விமர்சனம் மிக அருமை… இளம் விமர்சகருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்…கதை படிக்கும் போது வர வேண்டிய உணர்வு.. விமர்சனம் படிக்கும்போதே வந்தது, அதுவே அவருடைய வெற்றிக்கு முதல் படி.. வாழ்த்துக்கள்
இளம் விமர்சகருக்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல பிரிவுகளில் எழுத வாழ்த்துக்கள்
அருமை, மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இருபது ஆண்டுகளும் முன்னதாகவே, இந்த புதினத்தை,வெகு ஆவலுடன் அனுபவித்து படித்துள்ளேன். நமது முன்னோர்களைத் தேடுவோம்,என முயன்று மூன்று தலைமுறைக்கு மேல் எம்ப முடியவில்லை. காரணம் கல்வியறிவின்மை. என் தந்தை ஆறாம் நிலை,பாட்டனார், அதற்கு முந்தியோர் அனைவரும் கைநாட்டு. எங்களின் முதுநிலைக் கல்வி எதிர்வரும் தலைமுறைக்கு வேண்டுமானால்,கதை சொல்லும். பெரிய வட்டத்திற்குள் நுழைந்தேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், சநாதன,சாதி,மற்றும்,அரச மிருக அடக்குமுறை ஆளுமையாலும்,,, உழைக்கும் வர்க்கம், சுரண்டப்படுவது தெளிவாகியது. உடல் உழைப்பையே அறியாதவனிடம், நில உடைமை. நம்நாட்டில் நடக்கும் கொடுமை.திண்டுக்கல் தம்பி பால முருகனுக்கு வாழ்த்துகள்.