கருவேப்பிலை குழம்பு
Karuveppilai Kuzhambu
கருவை காப்பதால் தான் “கருவேப்பிலை” என்ற பெயர் வந்ததாக கூறுவர் .உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. தாளிதம் செய்வதையும் தூக்கி தூர எரிந்து விடுவார்கள், ஆனால் கருவேப்பிலையில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளது. அதனால் இதையே ஒரு உணவாக உட்கொண்டால் சத்துகள் அனைத்தும் அப்படியே கிடைத்து உடலுக்கு வலு சேர்க்கும் Latest health tips, Health tips tamil, Karuveppilai kuzhambu.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
கருவேப்பிலை – 2 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 15 பற்கள்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கருவேப்பிலையை சேர்த்து 5-10 நிமிடம் வறுத்து, அத்துடன் பாதி பூண்டை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும். இறுதியில் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், கருவேப்பிலை குழம்பு தயார்.