குறுந்தொகை பகுதி 4

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 4

kurunthogai paadal vilakkam

செய்யுள் விளக்கம்

  1. அவனே என் காதலன்

பாடியவர்: ஆதிமந்தியார்
துறை: தன் காதலன் அல்லாத அயலார் தன்னை மணக்க விரும்பி வந்தனர். அதை கண்ட தலைவி தன் தோழியிடம் தான் முன்பே ஒருவனிடம் காதல் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லிய மருதத்திணை பாடல்

“மள்ளர் குழீஇய விழ வினானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்டக் கோனை
யானும்ஓர் ஆடுகள மகளே! என்கைக்
கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே”

விளக்கம்: வீரர்கள் கூடியிருக்கின்ற திருவிழா விளையாட்டில் ஆயினும், பெண்கள் கூடித் தழுவிக் கொண்டு விளையாடுகின்ற துணங்கை கூத்தாடும் இடங்களாயினும், வேறு எந்த இடங்களிலும், என்னை மணப்பதற்கு ஏற்ற சிறந்த குணமும், தகுதியும் உள்ள அவனை காணேன். நானும் ஒரு விளையாடுகின்ற களத்திற்குரிய பெண் தான். என் கையிலே அணிந்த சங்கை அறுத்து செய்த வேலைப்பாடு உடைய வளையலை கழலும்படி செய்த பெருமை நிறைந்த தலைவனும் ஒரு சிறந்த ஆடுகள மகன்தான்.
கருத்து: என்னோடு சேர்ந்து துணங்கைக் கூத்தாடிய தலைவன் ஒருவன் உண்டு அவன் தான் என் உள்ளம் கவர்ந்த காதலன்.


  1. காதலின் பண்பு

பாடியவர்: அன்னூர் நன்முல்லையார்
துறை: தலைவன் தோழியிடம் தலைவியின் மீதான தனது ஆழமான காதலைச் சொல்லுகிற குறிஞ்சித்திணை பாடல்

“காலையும் பகலும் கையது மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்
பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே,
வாழ்த்தலும் பழியே பிரிவுதலை வரினே”

விளக்கம்: காலைப் பொழுதும், உச்சி பகல் காலமும், பிரிவு ஏற்பட்டால் வருந்துவதற்குரிய மாலைப் பொழுதும், ஊரார் உறங்குகின்ற நள்ளிரவும், விடியற்காலையும் என பொழுதுகளின் வேற்றுமை தோற்றுமாயின் காதல் பொய்யாகும். தலைவியை பிரிந்திருக்கும் நிலைமை ஏற்படுமாயின் மடலேறி தலைவியை ஊர் தூற்றும்படி செய்வதும் பழிக்க தக்கதாகும். அவளை பிரிந்து வாழ்வதும் என் உயிர்க்கு பழி விளைப்பதாகும்.
கருத்து: தலைவியை மணந்தால் தான் நான் உயிர் வாழ்வேன்; இன்றேல் இறப்பேன்.


  1. பேச்சுக்குப்பரிசு

பாடியவர்: படுமரத்து மோசிக்கீரனார்
துறை: பிரிந்த தலைவன் அனுப்பிய தூதுவனான பாணன் தலைவன் வருகையை கூற தலைவி பாடிய மருதத்திணைப் பாடல்:

“அன்னாய்! இவன்ஓர் இளம் மாணாக்கன்
தன்ஊர் மன்றத்து என்னன் கொல்லோ
இரந்த ஊண்நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே”

விளக்கம்: தோழியே! இந்த பாணன் ஒரு இளம் மாணாக்கன். நம்மிடம் இவ்வளவு நன்றாய் பேசும் இவன் தன்னுடைய ஊர் பொது மன்றத்திலே எத்தகைய சொல்வன்மை உள்ளவனாக விளங்குவானோ. இரந்து பெறுகின்ற உணவினால் நன்றாக வளர்ச்சி அடையாத உடம்புடன் புதிதாக கிடைக்கக் கூடிய நல்ல விருந்தினை நாடி செல்லுகின்ற பெரிய தலைமையை உடையவன் இவன்.
கருத்து: சொல்வன்மை உள்ள இவன் நம்மிடம் நல்ல விருந்து உண்ணுதற்கு ஏற்றவன்; ஆதலால் நல்ல விருந்தினை பெறுவானாக.


34.துன்பம் தொலைந்தது

பாடியவர்: கொல்லிக் கண்ணன்
துறை: தலைவியை இப்போது மணம் புரிந்து கொள்ள வந்திருப்பவன் அவளால் விரும்பப்பட்ட தலைவன். இனி இவ்வூரார் துன்பமடைய தேவையில்லை. தலைவியும் பழிச் சொல்லுக்கு ஆளாக மாட்டாள் என தோழி சொல்லும் மருதத் திணைப்பாடல்:

“ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே
முனாஅது யானை அம்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசைவெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்னஎம்
குழலுவிளங்கு ஆய்நுதல் கிழவனும் அவனே”

விளக்கம்: முன்னிடத்தில் இருக்கின்ற அழகிய கடற்கரைச் சோலையிலே உள்ள யானைக் குரலை உடைய பறவைகளின் அழகிய பெரும் கும்பல் போர் செய்து வெற்றி பெற்ற வீரர்களின் ஆரவாரமான ஓசையை கேட்டு அஞ்சுகிற சேரனுடைய மரந்தைப் போன்ற எமது விளங்குகின்ற குழல் வடிவிலே முடிந்த கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடைய இவளுக்கு உரியவனும், இவளை மணக்க முடிவு செய்திருக்கும் அவனே தான்.
கருத்து: தலைவன் விரைவில் இவளை மணம் புரிந்து கொள்வான்; இனி ஊரார் பழிப்புக்கு ஆளாக மாட்டாள்.


  1. வெட்கங் கெட்ட கண்கள்

பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றி
துறை: தலைவன் பிரிவை நினைத்து அழுத தலைவி தன் தோழியினிடத்து அதற்கான காரணத்தை கூறுவதாக அமைந்த மருதத்திணைப் பாடல்

“நாண்இல மன்றஎம் கண்ணே, நாள்நேர்பு
சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ்
நுண்உரை அழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே”

விளக்கம்: தோழியே! தலைவர் பிரிந்து போனபோது அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு, கரு கொண்ட பச்சைப் பாம்பின் கர்ப்பத்தின் நிறைவைப் போல திரண்ட கரும்பின் கவிந்திருக்கின்ற அரும்புகள் மலரும்படி சிறந்த மழை பொழிந்து அழிகின்ற துளிகளும், குளிர்ச்சி தருகின்ற வாடைக்காற்றும் இச்சமயத்தில் நம்மை விட்டு பிரிந்திருக்கும் தலைவரை நினைத்து அழுவதைச் செய்வதால் எம் கண்கள் நிச்சயமாக வெட்கங் கெட்டவை.
கருத்து: அவர் பிரியும் போது தடுக்காத கண்கள் இப்போது அழுவது நாணமற்ற செயல்.


  1. நீ ஏன் வருந்துகின்றாய்?

பாடியவர்: பரணர்
துறை: தலைவியை மணந்து கொள்ளும் பொருட்டு பொருள் தேடப் பிரிந்து சென்றான் தலைவன். அவன் பிரிவால் தலைவி வருந்துகிறாள். அதனால் கவலைப்பட்டாள் தோழி; அத்தோழிக்கு தலைவி சொல்லிய குறிஞ்சித் திணைப் பாடல் இது:

“துறுகல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளிறு இவரும், குன்ற நாடன்;
நெஞ்சு களன்ஆக நீஅலன் யான்என
நற்றோள் மணந்த ஞான்றை, மற்றவன்
தாவா வஞ்சினம் உரைத்தது,
நோயோ தோழி நின் வயினானே”

விளக்கம்: தோழியே! உருண்டைக் கற்களின் பக்கத்திலே உள்ளதாகிய மாணை என்னும் பெரிய கொடி அதன் பக்கத்திலே படுத்துறங்கும் யானை மீது படரும் குன்றுகளை உடைய நாட்டின் தலைவன், உன் நெஞ்சையே இடமாக கொண்டிருந்து, உன்னை விட்டு பிரியாமல் நான் இருப்பேன் என்று என் தோளைத் தழுவிய காலத்தில் அவன் சூளுரைத்த செய்தி எனக்குத்தான் இன்று துன்பம் தரும். உனக்கும் அது துன்பம் தருகிறதோ?
கருத்து: தலைவன் உறுதிமொழியை நினைத்து நான் அவன் பிரிவால் வருந்திக் கொண்டிருக்கும் போது நீயும் ஏன் வருந்துகிறாய்.

அருஞ்சொற்கள்: துறுகல் – குண்டுக்கல்; களன் – இடம்; ஞான்று – நாள்; வஞ்சினம் – சூளுரை, உறுதிமொழி


  1. வருவார் வருந்தாதே

பாடியவர்: பாலை பாடிய பெருங் கடுங்கோ
துறை: தலைவன் பிரிவால் வருந்திய தலைவிக்கு தோழி சொல்லியதாக அமைந்த பாலைத் திணைப் பாடல்:

“நசைபெரிது உடையர், நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின்; தோழி அவர் சென்ற ஆறே”

விளக்கம்: தலைவர் உன்னிடம் காதல் மிகுதியும் கொண்டவர் ஆதலால் விரைவில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கொடுப்பர். பெண் யானை பசியை போக்கும் பொருட்டு நீண்ட கையினை உடைய ஆண் யானையானது மெல்லிய கிளையை உடைய யாம் என்னும் மரத்தின் பட்டையை உரித்து அதில் உள்ள நீரை அருந்த செய்யும் அன்பை வெளிப் படுத்தும் இடமாக உள்ளது அவர் சென்ற பாலைவன வழி.
கருத்து: அவர் சென்ற வழியில் உள்ள காட்சியைக் கண்டு உன்னிடம் விரைவில் திரும்புவார் ஆதலால் கவலைப்படாதே

அருஞ்சொற்கள்: நசை – அன்பு, காதல்; பிடி – பெண் யானை; வேழம் – ஆண் யானை; பொளிக்கும் – உரிக்கும்;


  1. அந்த வலிமை எனக்கில்லை

பாடியவர்: கபிலர்
துறை: பொருள் தேட சென்றான் தலைவன். தலைவி அவன் பிரிவுக்காக வருந்துகிறாள். தோழி அவள் வருத்தத்திற்கு காரணம் என்ன என கேட்க, தலைவி தோழிக்கு உரைத்த குறிஞ்சித் திணை பாடல்:

“கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன்! வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்கு தணப்ப
உள்ளாது ஆற்ளல் வல்லு வோர்க்கே”

விளக்கம்: வாழ்க தோழியே! காட்டில் உள்ள மயில் கற்பாறைகளில் ஈன்ற முட்டையை வெயிலிலே விளையாடிக் கொண்டிருக்கும் குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடி கொண்டிருக்கின்ற மலை நாட்டினை உடைய தலைவனது நட்பானது, அவன் பிரிந்ததானால் உண்டான துன்பத்தை மையுண்ட கண்களிலிருந்து ஒழுகும் நீருடன் ஒரேயடியாக நினைக்காமல் பொறுத்துக் கொண்டிருக்கும் வல்லமை உள்ளவர்களுக்கு என்றும் நன்மையாக இருக்கக் கூடும்.
கருத்து: தலைவன் பிரிவை பொறுத்திருக்கும் தன்மை சிலருக்குத் தான் உண்டு. அவன் பிரிவை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அருஞ்சொற்கள்: மஞ்ஞை – மயில்; முசு – ஒருவகை குரங்கு; குருளை – குட்டி;


  1. நெஞ்சம் பொறுக்கவில்லை

பாடியவர்: ஔவையார்
துறை: தலைவன் பிரிவினால் வருந்தினால் தலைவி. அவளை வருந்தாதே என வற்புறுத்தினால் தோழி. அதற்கு தலைவி உரைத்த மொழியை கூறும் பாலைத்திணைப் பாடல்:

“வெம்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலைஉடை அரும்சுரம் என்ப, நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே”

விளக்கம்: எனது மார்பின் இடையிலே உறங்கி இன்பம் நுகர்தலை வெறுத்தவர் பிரிந்து போயிருக்கும் வழியானது, வெப்பமுடன் விரைந்து வீசும் காற்று, மரக்கிளைகளில் வந்து தாக்குவதால் வாகை மரத்திலே நெற்றாக முற்றியிருக்கின்ற காய்ந்த வற்றல்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஒலிக்கின்ற மலைகளுடைய நடப்பதற்கு அரிய வழி என்று கூறுவர்.
கருத்து: நான் எனக்காக வருந்தவில்லை தலைவர் சென்ற வழியை நினைத்து வருந்துகிறேன்.

அருஞ்சொற்கள்: திறல் – வலிமை; கடுவை – விரைவு; வளி – காற்று; சுரம் – வழி


  1. என்றும் இணைபிரியோம்

பாடியவர்: செம்புலப் பெயல் நீரார்
திணை: தலைவன் நம்மை பிரிவானோ என எண்ணிய தலைவிக்கு தலைவன் உரைத்ததான குறிஞ்சித் திணைப் பாடல் இது:

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

விளக்கம்: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எவ்வகையிலே உறவினர் ஆவர். என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர். இப்போது ஒன்று சேர்ந்திருக்கும் நானும் நீயும் இதற்கு முன் எந்த இடத்திலே பார்த்து பழகி அறிந்திருக்கிறோம்? செந்நிலத்திலே பெய்த மழை நீரைப் போல அன்புள்ள நமது உள்ளம் தாமாக ஒன்றாக கலந்து விட்டன.
கருத்து: நமது அன்பு – இயற்கை; காதல் – தெய்வீகம்; ஆதலால் இனி நாம் பிரிய மாட்டோம்.

செஞ்சொற்கள்: யாய் – என் தாய், ஞாய் – உன் தாய்; செம்புலம் – செம்மண் பூமி; பெயல் – மழை

– மா கோமகன்

komagan rajkumar

You may also like...