அப்பாச்சி | மணம் மாறா பூக்கள்
நெல்லை வள்ளி அவர்களின் உறவின் பெருமை உணர்த்தும் மணம் மாறா பூக்கள் சிறுகதை – manam maara pookkal
“ஏல கிட்டு!” அண்ணாமலை கிட்ட சொல்லிட்டியால….. தட்டடில கீத்து பந்தல் போடச்சொல்லி மூன்று நாள் ஆச்சு…இன்னும் வந்து போடல…வெளிநாட்டிலிருந்து துறை குடும்பத்தோடு வாரான். குளிர்ச்சியான தேசத்தில இருந்திட்டு.. வெக்கைல இருக்க முடியுமால? அதான் தட்டி பந்தல் போட்டா மொட்டை மாடி வெக்கை கீழே இறங்காது. வீடு குளிர்ச்சியா இருக்கும்ன்னு சொல்லிவிட்டால்… ஆளையே காணும்!” காந்திமதி ஆச்சி குரல் ஓங்கி ஒலித்தது.
“ஆச்சி! இன்னைக்கு கண்டிப்பா போட்டுடுவான். கீத்த வண்டியில ஏத்திகிட்டு இருக்கான். பார்த்திட்டு தான் வாரேன்.” என்றான் கிட்டு. கிட்டு சின்னப் பிள்ளையிலிருந்தே ஆச்சியிடம்தான் வளர்கிறான்.
“கிட்டு! துறையாச்சும் பரவாயில்லை… இங்கிட்டு வளர்ந்த பிள்ளை. என் பேரன் ராசா அங்கியே பிறந்து வளர்ந்த பிள்ளை… பத்து வருஷம் கழிச்சு இப்பதான் கிராமத்துக்கு வர்றாக… இடையில ரெண்டு தரம்வந்தாலும் குழந்தைக்கு கிராமம் பிடிக்காதுன்னு, பட்டணத்துல இருந்தாப்படியே போயிட்டாங்க. நாங்க தான் பட்டணம் போய் பிள்ளையப் பார்த்துட்டு வந்தோம். என் பேரப்புள்ள இப்ப விவரம் தெரிஞ்ச வயசு. பத்துநாள் தங்குறாக.. நல்லபடியாக கவனிச்சு அனுப்பணும் டா!” என்றாள் ஆச்சி.
எல்லாவற்றையும் கேட்டபடியே திண்ணையில் அமர்ந்திருந்தார் சண்முகம்பிள்ளை. ஆச்சி அவரிடம் காப்பியை நீட்டியபடியே,” ஏங்க! ஒரு நடை தின்னவேலி போயிட்டு வந்துருவோம். பேரனுக்கு ரெண்டு பவுன் சங்கிலி டவுன் சோமசுந்தரம் செட்டியார் கடையில வாங்கிடுவோம். சந்தர் பிரண்ட் மணி ஏதோ சாமான்கள் எழுதிக் கொடுத்தானே.. அதையும் வாங்கிட்டு வந்துடுவோங்க” என்றாள்.
பலமான ஏற்பாடுகள் ;
மடமடவென்று வேலைகள் நடந்தன .அண்ணாமலை மொட்டை மாடியில் தட்டி பந்தல் போட்டு விட்டு போனான். ஆச்சி கிட்டுவை உட்கார விடவில்லை. இளநீ குலைபறிச்சு பின் கட்டில் போடச் சொன்னாள். அப்படியே திருநெல்வேலிக்குப் போய் பேரனுக்கு ரெண்டு பவுன் சங்கிலி ,மருமகள்,மகன், பேரன் எல்லாரும் துணிமணி வாங்கி வந்தாள். மணி கொடுத்த லிஸ்ட்படி, விதவிதமாக ஜாம்,…சாஸ்..கார்ன்பிளேக்ஸ்.. சாக்லேட்… பிஸ்கட்… உலர் பழங்கள்… என எல்லாவற்றையும் மறக்காமல் வாங்கினாள்.
பேரன் வரும் ஜோரில் புது ஏர்கூலர், பிரிட்ஜ் கூட வாங்க ஆச்சி மறுப்பு சொல்லவில்லை.பேரன் ஐஸ் வாட்டர் கேட்டால் என்ன செய்வது என்ற கவலை ஆச்சிக்கு. மண்பானை தண்ணீரை பின்கட்டில் வைத்துவிட்டு..மினரல் வாட்டர் கேனை ஹாலில் வைக்க சொன்னாள். பேரன் வரும் சாக்கில சண்முகம் பிள்ளை கூட தன் நெடு நாள் ஆசையான பெரிய சைஸ் டிவியும் வாங்கி ஹாலில் மாட்டினார். பழமையில் இருந்த வீடு திடுதிப்பென புதுமை கோலம் பூண்டது. கிட்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனான். ஆச்சிதான் பேரனுக்காக எவ்வளவு மெனக்கெடுகிறாள் என்று எண்ணியபோது அவன் மனம் நெகிழ்ந்தது.
சந்தர் சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைகுளத்திற்கு விமானத்தில் வர அவர்களை வரவேற்க காரில் கிளம்பினார் சண்முகம் பிள்ளை.விமானம் தரையிறங்க .சந்தர், விமலா,, சிறுவன் சபரிஷ் மூவரும் வெளியே வந்தனர். அவர்களை வரவேற்று அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
பேரன் வந்துவிட்டான் ;
“அப்பாச்சி!” என்று ஓடி வந்த சபரிஷ் ஆசையாய் ஆச்சியைக் கட்டிக் கொண்டான்.
“ராசா!” என்று கட்டி யணைத்து பேரனை உச்சிமுகர்ந்தாள் ஆச்சி.
“ஹவ் ஆர் யூ அப்பாச்சி?” பேரன் கேட்க உச்சி குளிர்ந்து போனாள் ஆச்சி.
பத்து நாட்களும் ஒரே கோலாகலம் தான். ஆச்சிக்கு நிமிஷ நேர ஓய்வில்லை. அவர்களைப் பார்க்க வருவோர், போவோர் என வீடு ஜெ ஜெவென இருந்தது. பத்து நாளும் பேரன் கூடவே கழித்தாள். விதவிதமாக சமைத்து போட்டாள். அவள் சமையல் ருசியில் மயங்கி கார்ன்பிளேக்ஸ்ஸை கையால் கூடத் தொடவில்லை சபரீஷ்.
பேரனுடன், தாயத்தும், பாம்பு கட்டமும் விளையாடினாள். கோவிலுக்கு கூட்டி போய் ஒவ்வொரு சாமிக்கும் ஒரு கதை சொன்னாள். சபரி ஷ்க்கு ஆச்சியின் பேச்சு புரியவில்லையென்றாலும் அவளது ஒவ்வொரு அசைவும் அளவற்ற அன்பை வெளிப்படுத்தியது.
வெளிநாட்டில் பரபரப்பை பார்த்து வளர்ந்தவன், அந்த கிராமத்தின் அமைதியும், கிராமத்து மக்கள் காட்டிய உறவும், அன்பும், அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. கிட்டுவின் பாசம் அவனை புதிய நண்பனாக ஏற்றுக் கொள்ள வைத்தது. ஆடு, மாடு, கோழி,., குடும்பத்தில் ஒரு அங்கமாகிப் போனது., அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆச்சி தனக்காக மெனக்கெடுவது, கள்ளம் கபடம் இல்லாத அந்த அதிகப்படியான அவனை ஏதோ செய்தது. பத்து நாட்கள் 10 நிமிடமாக கரைய., இதோ நாளை சென்னைக்கு கிளம்ப வேண்டும்
வெளியே திண்ணையில் அமர்ந்திருந்த அப்பா சந்தரிடம் வந்தான் சபரிஷ்…
சிறுவனின் ஏக்கம்
“டாடி! ஹவ் நைஸ் திஸ் பிளேஸ் ஸ் ?” (அப்பா இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது) என்றவன்., ஆங்கிலத்தில் தொடர்ந்தான்.
“நாம பிறந்த ஊர் இது தானே? நாம ஏன் இங்கே இல்லாமல் வெளிநாட்டில இருக்கோம்? அட்லீஸ்ட் இந்தியாவில் எங்கேயாவது இருந்தா கூட இவங்கள அடிக்கடி பார்த்துகலாம். நாம எவ்வளவு விஷயத்தை மிஸ் பண்ணுறோம். இந்த அன்பு, பாசம், நமக்கு அமெரிக்காவில் கிடைக்குமா? ஏன் டாடி நம்ம அங்க இருக்கணும்? இங்கு உள்ள லைப் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டாடி! எல்லாரும் ஒண்ணா சாப்பிடுறாங்க .ஒண்ணா தூங்குறாங்க. நம்மளை பார்க்கவே எவ்வளவு பேர் வர்றாங்க .எனக்கு இந்த லைஃப் தான் புடிச்சிருக்கு டாட். நாம இவங்களையெல்லாம் பிரிஞ்சு அமெரிக்காவில் இருக்கணுமா சொல்லுங்க? ஏன் நம்ம அமெரிக்கா போகணும்?” என்று கூறி கண்ணீர் விட்டான்.
மூன்றெழுத்து மந்திரம்
மகனை அணைத்துக் கொண்ட சந்தர். மகன் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்று எண்ணியது மனம்.தன் கையாலாகாதனத்தை நினைத்து வருந்தினான். உறவுகளையெல்லாம் தூரமாக்கி வைத்திருப்பது, ‘பணம்’ என்ற மூன்றெழுத்து மந்திரம் என்று எப்படி சொல்லுவான் சந்தர் தன் மகனுக்கு .கண்களில் கண்ணீர் துளிர்க்க மகனை இறுகத் தழுவிக் கொண்டான் சந்தர்.
– தி.வள்ளி, திருநெல்வேலி.
பணம் என்ற 3எழுத்துமந்திரம் என்பது எவ்வளவு பெரிய உண்மை
நிறைவு பகுதி வாழ்வின் நிதர்சனத்தின் பலரின் உண்மை நிலை…!
இன்றைய யதார்த்த நிலைமையை அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் திருநெல்வேலி தி. வள்ளி அவர்கள். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!
சபரிஷ் உடன் சேர்ந்து ஆச்சியின் அன்பை நம்மாலும் உணர முடிகிறது. எளிமையான கதை, அருமையான நடை.
Practical ah story sollirukkeenga madam. Superb
அமையான வட்டார வழக்கு. நல்ல கரு.வாழ்த்துக்கள் அம்மா
தங்கள் பின்னூட்டம் ஊக்கமளிக்கிறது..நன்றி நண்பர்களே! 😌