மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்
சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review
தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர். சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் பல கவிதைத் தொகுப்பு நூல்கள் இவருடைய படைப்புகள்.
அவள் விகடனில் இத்தொடர் வந்தபோது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘மயிலிறகு மனசு’ என்ற தலைப்பிற்கு ஏற்றபடி மெல்லிய சாரல் போல இவருடைய எழுத்து நம்மை குளிர வைக்கிறது. தான் சந்தித்த, தன் மனம் கவர்ந்த பெண்களை, அவர்கள் இயல்புகளை, அழகான தமிழில் விவரிக்கிறார். இவர் அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடமும் எளிமை, நேர்மை, எதார்த்தம் என தமிழச்சியின் பிரதிபலிப்புகளை பார்க்க முடிகிறது.நடிகை ரோகிணி… வேலைக்காரப் பெண் பாண்டியம்மா… பூக்கார பெண்.. தன் மகள்… தன் தாய்… என அனைவரைப் பற்றியும் அவருடைய பாகுபாடில்லாத… பாசம் பாராட்டும் பக்குவம் மற்றும் நட்பின் நிறைவும் மிக அலாதியானவை .
ராதிகாவின் கால்கொலுசு
முதல் இறகாக படர்வது ‘ராதிகாவின் கொலுசும் ரம்யமான மனசும்.. ‘ பொதுவாக பாதசாரிகளை பாதங்களை கூர்ந்து கவனிக்கும் பழக்கம் தனக்குண்டு என்கிறார் தமிழச்சி. அவ்வாறு கவனிக்கப்பட்ட பாதம் சுத்தமான விரல்கள்…நகங்கள் வெட்டப்பட்டு.. நகப்பூச்சு பூசி.. பராமரிக்கப்பட்ட பாதம் அல்ல. கறுத்து , அழுக்குப் படிந்திருந்த அந்த பாதம் தன்னை கவர்வதற்கு காரணம், அவள் அணிந்திருந்த கொலுசுகள் என்கிறார். முக்கால் பாவாடையும் தாவணியும் அணிந்த தெருவினை பெரிய துடைப்பம் கொண்டு சுத்தம் செய்யும் ராதிகாவின் கால்கொலுசு மிகவும் வித்தியாசமானது .. பச்சையும், சிவப்புமாக சிறிய பாசிமணிகளால் மிகவும் நெருக்கமாக, மூன்று அடுக்குகளில், கோர்க்கப்பட்டிருந்த பட்டை கொலுசுகள். கால்களின் புழுதியும் மீறி பளிச்சென சிரித்தது .. அதை தமிழச்சி சிலாகித்த போது, ராதிகாவின் முகத்தில் தெரிந்த வெட்கம்.. “உங்களுக்கு இதுபோல ஒன்னு வேணுமா…?” கூச்சத்துடன் தலையசைத்த தமிழச்சி “கொஞ்சம் பணம் கொடுங்க” என்று வாங்கி போனவளை மறந்தே போனார் .. அடுத்த சில நாட்களில் அவள் நீட்டிய கசங்கிய காகிதம் பொட்டலத்தில் அழகிய 2 பாசி கொலுசுகள்… அரக்கு, வெள்ளை, சிவப்பு, பச்சை, வெளிர் நீலத்தில்… இன்றும் அப்பெண்ணின் அன்புக்கும், அவளுடைய சிரித்த முகத்திற்கும், அவளுடைய அழகான கலை நேர்த்திக்கும், பெருமை சேர்க்கும் விதமாக தன் மரப்பெட்டியில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார் தமிழச்சி.
ரோகிணியின் அறிமுகம்
அடுத்த கட்டுரையில் என தான் “ரோ” என செல்லமாக கூப்பிடும் நடிகை ரோகிணியின் அறிமுகம் ஒரு மாலையில் கிடைக்க… விரைவில் தனக்கு நெருக்கமான தோழியானாள் என்கிறார். ரோகிணியின் நடிப்பை கண்டு தான் பிரம்மித்தது மட்டுமல்லாமல்.. தன் மகன் ரிஷிக்கு ஒரு நல்ல தாயாகவும், தந்தையாகவும் இருக்கும் ரோகிணி, வலிமிகுந்த சுமையை எந்தவித புகார்களும் இல்லாமல் ஏற்றுக்கொண்டவர். சிங்கிள் பேரண்ட்டாக தன் மகனை வளர்த்து வருபவர். சமூக நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து, தன் கவலையையும், கருத்துக்களையும், அவ்வப்போது பதிவு செய்பவர். பி.டி. கத்திரிக்காயை… இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்ற விஷயத்தை மிகவும் ஈடுபாட்டோடு செயல்பட்டவர் .. என தன் தோழியை பற்றி பெருமிதம் கொள்ளும் இவர் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு இழையோடும் ஆத்மார்த்தமான நட்பு இருவருக்குள்ளும் என்கிறார்.
சேவகி அல்ல சினேகிதி
சேவகியாக பாண்டியம்மா வீட்டு வேலை பார்த்தாலும், தனக்கு நெருக்கமான மனம் கவர்ந்த தோழி என்கிறார்… கூட்டுவது கீழே முதல் குப்பை கொட்டுவது வரை வேலைகளை தீவிர முனைப்புடன் செய்யும்போது வியர்வையின் பேரழகை அவர் முகத்தில் தரிசித்ததாக கூறுகிறார் தமிழச்சி . தந்தையின் நினைவில் தான் மூழ்கியிருக்கும்போது அதை பகிர்ந்துகொள்ளும் தோழியாக இருப்பவர் . அவருடன் தனக்கான பந்தம்… அந்த அன்புச் சங்கிலி அவருடன் அறுந்துவிடலாம் .. எனினும் அவள் சேவகி அல்ல சினேகிதி என்கிறார்.
வனப்பேச்சி
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் . தோழி அருள் மொழியை பற்றி நினைவுகூர்கையில்…இவரை சந்தித்து பேசுவது என்பது ‘தன்னம்பிக்கை என்னும் ஒரு குவளைத் தேனீரை சிறுக சிறுக ரசித்து பருகுவது போல’ என்கிறார் . தன்னை கைதூக்கி விட்ட பெருமைக்குச் சொந்தக்காரி.. தன் கவிதை தொகுப்பு புத்தகமான ‘வனப்பேச்சி’ வெளியீட்டு விழாவின் போது ஒரு சாதாரண தோழியாக இருந்து, மிகப் பெரிய ரசிகையாக, தொகுப்பாளினியாக உடன் இருந்ததை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறார் .
அடுத்து தன் தாயைப் பற்றி பேசும்போது ..’சூழலைப் பகிர்ந்தபடி ஓடும் பெருநதி’யாக அவரைப் பார்க்கிறார். அம்மாவின் அகராதியின் எல்லா பக்கங்களிலும் அன்பு, தியாகம் என்பவையால் நிரப்பப்பட்டிருக்கும் … அப்பாவையும் சேர்த்து மூன்று குழந்தைகளை அவள் பூஜித்து, ஆரோக்கியமாக வைத்திருந்தாள்…. தனிப்பட்ட உழைப்பாலும், தியாகத்தாலும் குருவிக்கூடென இருந்த இல்லத்தை ஒளிரச் செய்தவள் என்கிறார்…
இனிமையாக பாடும் தன் தாயின் பாடல்கள்தான் தூங்கும் தங்கள் இரவின் நட்சத்திரங்கள் என்கிறார் .தன் வாழ்நாளில் எந்த ஒரு மேடையும் ஏறியறியாத தாய் தன் புத்தக வெளியீட்டு விழாவில் அதைப் பெற்றுக் கொள்ளவும் தனக்கு விருது வழங்கப்பட்ட போது அதை வாங்கிக் கொள்ளவும், இருமுறை மட்டுமே மேடையேறியதாக கூறுகிறார்.
அடுக்குமல்லி பூவாய்
அடுத்து தன் மகளைப் பற்றி பேசும்போது ‘அடுக்குமல்லி பூவாய்’ மலர்ந்த தன் மகளை … மனம் முழுக்க மணம் வீசும் மலரை…உலகத்தின் மிக உன்னதமான ‘அம்மா’ என்ற சொல்லை தனக்கு பரிசளித்தவள் ….சிரித்தும், சிணுங்கியும், அன்பை பகிர்ந்தபடி பயணிக்கிற அவளுக்கு’ சரயு’ என்கிற பொருத்தமான நதியின் பெயரை தன் தந்தை சூட்டினார் என்கிறார். 2007 ல் மிகப்பெரிய விபத்தொன்றை அவள் சந்தித்தபோது (நகரின் மிகப் பிரபலமான தீம் பார்க் ஒன்றின் ராட்சச ராட்டினத்திலிருந்து கீழே விழுந்து விட்டார் ..) மூன்று மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டும் என்றவுடன் அதிர்ந்து தான் மனமுடைந்து போன போது தன்னை தேற்றிய தன்னம்பிக்கை பெண் .. சொன்ன வார்த்தை “கூல் மா” என்பதுதான். தளராத தன்னம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு… நன்றாக படித்து…பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்று… எந்த பரிந்துரையும் இல்லாமல் மதிப்பெண் தரவரிசையிலேயே பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததை பெருமையுடன் நினைக்கிறார். தனது பூங்கொத்துகளை பகிர்ந்து கொண்டு. ..கல்லெறிகளை புரிந்து கொண்டு ..தன் வாழ்வின் அகலை தூண்டிவிடும் சுட்டுவிரல் அவள் என்கிறார்.
தமிழச்சி த. சுமதி
இன்னும் குழந்தை மனம் கொண்ட நிர்மலா . மெய்காப்பாளி மலர்மாலா …வெள்ளந்தி இளம்பிறை ..மலர்ந்து சிரிக்கும் கோவிந்தம்மா.. என பட்டியல் நீள்கிறது -mayiliragu manasu book review .
நூலின் பெயரை போலவே மென்மையான நடையில், தனது உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறார் ‘தமிழச்சி’ என்று அழைக்கப்படும் த. சுமதி. இவருடைய எழுத்துக்கள் உணர்வுப்பூர்வமாக ..உண்மையானதாக ..உள்ளத்தை வருடும் மயிலிறகுகளாக விளங்குவதால் இதை படித்து முடிக்கும் போது சாத்வீகமானதொரு உணர்வு மனதை நிறைக்கிறது.
– தி.வள்ளி, திருநெல்வேலி