புன்னகை பூக்கள் …(சிறுகதை)
எழுத்தாளர், கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனம் தொடும் உணர்வுகள் நிறைந்த சிறுகதை – morel tamil story
அரக்கப் பரக்க கிளம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி. காலை 7:30 மணி முகூர்த்தம் .ஒரு மணி நேரம் முன்னதாகவாவது மண்டபத்தில் இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் நடராஜன் மாமா டென்ஷனாகி விடுவார் .இப்போதே 5:45 ஆகிவிட்டது பரபரத்தாள் .
அப்போது அங்கே வந்த அம்மா” ஏண்டி நந்தினி! சின்னது இரண்டுக்கும் ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்.. அண்ணாச்சி மளிகை கடைக்கு பாக்கி கொடுக்கணும். கொஞ்சம் பணம் வேணும் .”
“பேங்க் அக்கவுண்ட்ல 10 லட்சம் போட்டு வச்சிருக்கேன் வரும் போது ஏ.டி.எம்ல எடுத்துட்டு வரேன்” என்றாள் நக்கலாக.
“ஏண்டி இப்படி பேசுற.. நான் உன்கிட்ட கேக்காம, வேற யார்கிட்ட கேட்க முடியும்?”
” ஆமாம்மா இந்த இளிச்சவாய விட்டா யார் இருக்கா? நீ எவனை நம்பி 5 பிள்ளைகளை பெத்து போட்டியோ, அவன்கிட்ட கேட்க வேண்டியதானே? இதோ இதே ஊர்ல இன்னொருத்தி கூட குடும்பம் நடத்திகிட்டு இருக்கான். அவன் சட்டையை பிடிச்சு நாலு வார்த்தை கேட்க துப்பில்லை. அவன் சுமக்க வேண்டிய குடும்ப சுமையை நான் சுமக்கிறேன். 18 வயசுல படிப்பை விட்டுட்டு மாடு மாதிரி உழைக்கிறேன் “
கண்களில் மளமளவென கண்ணீர் எட்டிப்பார்க்க… அவசரமாக துடைத்துக் கொண்டாள். அம்மா பரிதாபமாய் அவளைப் பார்க்க, மனதில் ஒரு சின்ன இரக்கம் எட்டிப்பார்த்தது..’பாவம் இவள் தான் என்ன பண்ணுவாள்’ என்ற எண்ணம் வர…”சரிமா ஏற்பாடு பண்றேன்” என்றவள் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அப்பா இன்னொருத்தியை சேர்த்துக்கொண்டு ஓடிவிட, தனக்குப்பின் பிறந்த 2 தங்கைகள் இரண்டு தம்பிகளை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு நந்தினி தலையில் விழுந்தது. 16 வயதில், பக்கத்து அம்மன் கோவிலில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த நந்தினியின் சுறுசுறுப்பு ‘நடராஜ் கேட்டரிங்’ நடராஜனின் மனைவி பார்வதி அம்மாள் கண்ணில் பட, தன் கணவரிடம் சொல்லி தங்கள் கேட்டரிங் சர்வீசில் வேலைக்கு சேர்த்துக் கொண்டாள்.
ஏனோ நடராஜன்- பார்வதி தம்பதிக்கு நந்தினியின் கனிவான பேச்சு, சுறுசுறுப்பு ,கெட்டிக்காரத்தனம், நேர்மையான உழைப்பு, எல்லாம் பிடித்துப்போக ,அவர்களின் பிரியத்திற்குரியவளாக மாறிப்போனாள்.
‘நட்ராஜ் கேட்டரிங் சர்வீஸ்’ நகரின் மிகப் பிரபலமான திருமண காண்ட்ராக்ட் சர்வீஸ் ஆக விளங்கியது. கோலம் போடுவது முதல் வாசலில் நின்று உபசரிப்பது, பந்தி விசாரிப்பது, திருமணத்திற்கு நடுவே காபி, ஜூஸ் பானங்களை கொடுப்பது .மறுவீடு பலகாரங்களை பண்ணிக் கொடுப்பது. தாம்பூல பை போடுவது, என சகலமும் அவர்களை பொறுப்பாக செய்து கொடுத்துவிடுவார்கள்.
அதுபோக ஒவ்வொரு வேளையும் புதுப்புது ஐட்டங்கள் சமையல் மெனுவில் சேர்த்துக்கொள்வது அவர்கள் தனித்திறமை. எனவே ஓய்வில்லாமல் நடராஜ் கேட்டரிங் இயங்கிவந்தது . திருமணம் மட்டுமில்லாமல் மற்ற விசேஷங்களுக்கும் கேடரிங் நல்ல முறையில் செய்து கொடுத்தனர். அந்த குழுவில் உள்ள பர்மனெண்ட் ஊழியர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளம் கண்டிப்பாக கிடைத்துவிடும். அதுபோக அதிகப்படி உழைப்பிற்கு போனஸ் உண்டு.
நந்தினி கோலம் போடுவது, தண்ணீரில் பூக்களால் அலங்காரம் செய்வது, என சிறு சிறு வேலைகளை ஆரம்பத்தில் செய்து வந்தாள். இப்பொழுது மூணு ஆண்டுகளாக திருமண மண்டபத்தின் வாசலில் நின்று புன்னகையுடன் கைகூப்பி சந்தனம், குங்குமம், கற்கண்டு, கொடுத்து வரும் விருந்தினர்களை’ வாங்க ‘என்று வரவேற்கும் வேலை.
கேட்டரிங் சர்வீஸ் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சேலை . ஆண் பணியாளர்களுக்கு அதே போல ஒரே மாதிரியான உடை. வாசலில் வரவேற்பில் நிற்பதால் நந்தினி நீட்டாக எளிய அலங்காரம் ,கொண்டை போட்டு,பூ வைத்து எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருக்க வேண்டும்.
கல்யாணம் இல்லாத நாட்களில் பார்வதி அம்மாள் அவளை தன் வீட்டுக்கு வரச் சொல்லி விடுவாள். அங்கு பார்வதி அம்மாளுக்கு உதவியாக வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், மேலும் எந்த வேலை இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள் .பார்வதி அம்மாளும் அவள் குடும்ப நிலைமையை உணர்ந்து பல உதவிகளை செய்து வந்தாள்.
நந்தினியின் அம்மாவும் தன் பங்கிற்கு ஓரிரு வீடுகளில் சமையல் வேலை செய்து வந்தாள். நந்தினிக்கு தையல் தெரியும் என்பதால் ஒரு மெஷின் வாங்கி போட்டுக் கொண்டாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்கம்பக்கத்தார்க்கு துணி தைத்துக் கொடுப்பாள். மொத்தத்தில் வரும் வருமானம் கைக்கும், வாய்க்கும் ஓடிக்கொண்டிருந்தது. தம்பி, தங்கைகளை ஒழுங்காக பீஸ் கட்டி படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
முன்பெல்லாம் ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் வரவேற்பில் நிற்கும்போது அந்த கல்யாணத்தின் மணப்பெண்ணாக தன்னை கற்பனை பண்ணிக் கொள்வாள். ‘ தனக்கு இது போல இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது கல்யாணம் நடக்கும். அப்போது யார் வாசலில் நின்று எல்லோரையும் வரவேற்பார்கள்.. தன் கூட நிற்கும் தோழிகள் மீனுவும் கல்பனாவும் செய்வார்கள். நடராஜன் மாமா கூட தன் அசிஸ்டண்ட் யாரையாவது சமைத்துக் கொடுக்கச் சொல்லுவார். அதுவே பிரமாதமாக இருக்கும்.’
பார்வதி மாமி “நந்தினி உன் கல்யாணத்துக்கு ஒரு ஜோடி தங்க வளையல் போடுறேன்” என்று அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. ‘ஒரு ஜோடி வளையல் இருந்தால் போதும்… கூட தங்க கலர் கண்ணாடி வளையல்களை போட்டுக் கொள்ளலாம். என்ன நல்ல புடவை நாலு கிடையாது. கல்யாணத்துக்கு கிப்ட் என்ன வேண்டும் என்று யாராவது கேட்டால் நல்ல புடவையாக கிப்ட் பண்ணிடுங்கன்னு சொல்லிடலாம்.’ இப்படி இனிமையான கனவுகளில் மிதந்து கொண்டிருப்பாள்…
கனவு கொடுக்கும் உற்சாகத்தில் சந்தோஷமாக வேலையை பார்ப்பாள். இந்த கனவெல்லாம் ஒரு வயது வரைதான்.. பின் யதார்த்தம் புரிய, பொறுப்புகள் அழுத்த, அடுத்து வந்த காலங்களில் கல்யாண கனவுகளை மறந்து போனாள். இப்போதெல்லாம் மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வெறுமை… உதட்டில் செயற்கை புன்னகை…
ஆனால் அன்று அம்மாவிடம் கோபப்பட்டு விட்டு வந்ததிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை. ‘பாவம் அம்மா அவளிடம் போய் இவ்வளவு கடுமையாக பேசிவிட்டேன். என்ன வந்தது எனக்கு? இதுவரை மனம் அலைபாய்ந்தது இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கணேஷை பார்க்கும்போது.. அவன் ஆறுதலாய் அவள் நிலை உணர்ந்து பேசும்போது.. மனசு சஞ்சலப்படுகிறதா? அதன் விளைவுதான் அம்மாவிடம் கடுமையாக பேசிவிட்டேனா?’
இதுவரை சுமையாக தெரியாத குடும்பம் இப்போது ஏன் சுமையாகத் தெரிகிறது? அப்பா நல்லபடியாக குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தால், அம்மா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருப்பாள்.கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
தலையை வேகமாக ஆட்டி கொண்டாள் இல்லாததை நினைத்து ஏங்குவதில் அர்த்தமில்லை. யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என் தம்பி தங்கைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.அதுவரை நான் சஞ்சல படக்கூடாது. என் கடமையிலிருந்து விலகக்கூடாது. மனதில் தெளிவு பிறந்தது.
மண்டபத்தை அடைந்தவள், நடராஜனை மாமாவை பார்த்து கொஞ்சம் பணம் கடனாக வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டாள். அப்படியே கீழே போய் ஒரு சூடான காப்பி குடித்து விட்டு மேலே வந்தாள்.
“நந்தினி கெஸ்ட் வர ஆரம்பிச்சிட்டாங்க… ரிசப்ஷன் டேபிளுக்கு போகலாம்” என்று மீனா அழைத்தாள்.
மனதில் இருந்த எரிச்சல், சஞ்சலம், எல்லாவற்றையும் உதறிவிட்டு, உதடுகளில் செயற்கை புன்னகையுடன், கண்கள் விரிய, முகம் மலர, கைகூப்பி,” வாங்க” என விருந்தினர்களை வரவேற்க ஆரம்பித்தாள்.
” நாய் வேடம் போட்டால் குரைக்கத் தானே வேண்டும்” என்று தோன்றியது .அக்கற்பனையே அவளுக்கு சிரிப்பை வரவழைக்க.. முகத்தில் பொய் புன்னகையின் ஊடே உண்மையான ஒரு புன்னகையும் மலர்ந்தது.
– தி.வள்ளி, திருநெல்வேலி