நாலடியார் செய்யுள் விளக்கம் (2 – இளமை நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-2

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

02. இளமை நிலையாமை

செய்யுள் – 01

“நரை வரும் என்று எண்டி அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார் புரை தீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்”

விளக்கம்
நல்லறிவாளர் மூப்பு நிச்சயம் எனக் கருதி இளமையில் துறவு பூணுவர். நிலையற்ற இளமையில் மகிழ்ந்து வாழ்பவர் முதுமையில் கோல் ஊன்றி வருத்தத்துடன் வாழ்வர்.


செய்யுள் – 02

“நட்பு நார் அற்றன லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன உள் காணாய்
வாழ்தலின் ஊதியம் என் ஊண்டாம் வந்ததே
ஆழ் கலத்து அன்ன கலுழ்”

விளக்கம்
நட்பாகிய கயிறு அற்றுப் போயின; பெண்களும் அன்பைக் குறைத்தனர்; சுற்றத்தாரின் அன்புக் கயிறும் அவிழ்ந்தன; மனதில் யோசித்துப் பார்! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போருக்கு நேர்ந்த துன்பம் போல ‘முதுமை’ வந்தது. இனி உயிரோடு இருப்பதில் பயனேதும் இல்லை.


செய்யுள் – 03

“சொல் தளர்த்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய்
பல் கழன்று பண்டம் பழிகாறும் – இல் செறிந்து
காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறி படரும் ஆறு”

விளக்கம்
பேச முடியாது சொல் தடுமாறி, கோல் கொண்டு நடப்பவராகி, பற்களும் வீழ்ந்து பட, பிறர் எள்ளி நகையாடுமாறு சிற்றின்ப ஆசையில் மூழ்கி இருப்போருக்கு பேரின்ப நெறி பெறும் வாய்ப்பில்லை.


செய்யுள் – 04

“தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா
வீழா விறக்கும் இவள்மாட்டும் – கால் இழா
மம்மர் கொல் மாந்தர்க்கு அணங்கு ஆங்கு தன் கைக் கோள்
அம்மனைக் கோல் ஆகிய ஞான்று”

விளக்கம்
முதுகு வளைத்து கூனாகி, உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி தள்ளாடி, வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவள் கையில் உள்ள கோல், இவள் இளமையாயிருந்த போது இவள் தாய் உபயோகப்படுத்தியதை உணர்வீர்.


செய்யுள் – 05

“எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு
தனக்குத் தாய் நீனியே சென்றாள் – தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால் தாய்த் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து இவ் உலகு”

விளக்கம்
எனக்கு தாயாக இருந்தவள் இறந்து தனக்கு ஒரு தாயை தேடி சென்றாள் அவளது தாய் இறந்து அவளுக்கொரு தாயை தேடி சென்றது போலவே. இவ்வாறே இவ்வுலகு ஒருதாய் மற்றொரு தாயை தேடிச் செல்லும் இயல்புடையது.


செய்யுள் – 06

“வெறி அயர் வெங் களத்து வேல்மகன் பாணி
முறி ஆர் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க
மறி குளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடையாளர்கண் இல்”

விளக்கம்
வெறியாட்டும் பலிக்களத்தில் பூசாரியின் கையிலுள்ள தளிர் சேர்த்து கட்டிய பூமாலையின் தளிரை உண்ணும் பலியாடு போன்றது இளமை என அறிவுடையோர் அறிவார்கள்.


செய்யுள் – 07

பனி படு சோலை பயன் படு மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை – நனி பெரிதும்
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்
கோள் கண்ணள் ஆகும் குனிந்து”

விளக்கம்
இளமைப்பருவமானது, குளிர் மிக்க சோலையில் மரங்களெல்லாம் பழங்களை உதிர்ந்த நிலையில் விருப்ப்படாதது போல, இப் பெண் அழகுமிக்க வேல் போன்ற கண்ணுடையவள் என இளமையில் எண்ணியிருக்க அவள் முதுமையில் கோல் ஊன்றி, உடல் தளர்ந்து, கூன் விழுந்து நடப்பவளையும் இந்த உலகம் விரும்பாது.


செய்யுள் – 08

“பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை
இரு சிகையும் உண்டீரோ என்று – வரிசையால்
உள் நாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கை கோல்
எண்ணார் அறிவுடையார்”

விளக்கம்
வயது என்ன? பல்லின் நிலைமை என்ன? ஆடாது இருக்குறதா? இரு புறங்களிலும் மென்று உண்ண முடிகிறதா? என வயதானவரை கேட்டறியும் அறிவுடையார் இளமையில் உடல் வலிமை நிலையானது எனக் கருதமாட்டார்.


செய்யுள் – 09

“மற்று அறிவாம் நல்வுனை யாம் இளையம் என்னாது
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால்
நல்காய் உதிர்த்தலும் உண்டு”

விளக்கம்
நல்லறங்களை பின்னர் செய்வோம் இப்போது இளமையாய் இருக்கிறோம் என எண்ணாமல் அறங்கள் செய்க. கடுங்காற்று வீசும் போது மரங்களில் பழுத்திருக்கும் பழங்கள் உதிராமல், காய் உதிர்வது போல வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் இவ்வுலக இயற்கை.


செய்யுள் – 10

“ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டு உய்ம்மின் – பீள் பிதுக்கி
பிள்ளையைத் தாய் அலறக் கோடலால் மற்று அதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று”

விளக்கம்
ஆயுள் முடியும் ஆளைத் தேடிக் கொண்டிருக்கும் அருள் இல்லாத எமன் ஒருவன் இருப்பதால், வழிப் பயணத்திற்கு தோளில் சுமக்க வேண்டிய கட்டுச் சாதத்தை (புண்ணியத்தை) சேர்த்துக் கொள்ளுங்கள்.வயிற்றிலிருந்து கரு வெளி வரும்போதே, தாய் அலறி நிற்க, பிள்ளையை கொண்டு போகும் வஞ்சனை உடையவன் எமன் என அறிந்து நல்வினை செய்யுங்கள்.

– கோமகன்

You may also like...