பசி வயிற்றுப் பாச்சோறு! – நூல் திறனாய்வு
நாம் வாசிக்கும் எண்ணற்ற நூல்களில் சில நூல்களே நம் மனதில் மற்றும் நமது வாசிப்பின் பாதையில் கால்பதித்து நிலையானதொரு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும். அத்தகைய நூல்களில் ஒன்று தான் “பசி வயிற்றுப் பாச்சோறு” – நீரோடை மகேஷ் – pasi vayitru paachoru nool vimarsanam
பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவர். பல்வேறு பரிசுகளும், பாராட்டும் மரபுக்கவிதை-களுக்காகப் பெற்றவர். உலக அளவில் நடந்த கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவனார் நடத்திய மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்றவர். இந்நூலிற்கு கலைமாமணி ஏர்வாடியார் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.
அன்னை தமிழ்தாம்
பசிவயிற்றுப் பாச்சோறு என்று வித்தியாசமான பெயர் சூட்டி பாச்சோறு அல்ல பா விருந்து வைத்துள்ளார். பழஞ்சோறு, கூட்டாஞ் சோறு, பால்சோறு, வெண்சோறு என நான்கு பகுதிகளாகப் பிரித்து மரபுக்கவிமாலை தொடுத்துள்ளார்.
மூச்செனக் காப்போம் நமது மொழி! என்ற பாடலில்
“அன்னை தமிழ்தாம் அடையாளம்
அருமை மொழிதாம் கடிவாளம்
என்றும் இனத்தை உலகிற்கே
எடுத்துக் காட்டும் பிடிமானம்!”
உலகின் முதல்மொழியாம் தமிழ்மொழியின் அருமை பெருமை எடுத்து இயம்பிக் காக்க வேண்டிய அவசிய அவசரத்தை வலியுறுத்தி தமிழர்களுக்குத் தமிழே அடையாளம், முகவரி என்பதைக் கவிதைகளின் மூலம் நன்கு
வலியுறுத்தி உள்ளார். பாராட்டுக்கள். மரபுக்கவிதை படிப்பதே மனத்திற்குச் சுகமான அனுபவம் தான். இருமொழிக் கொள்கையே தொடரட்டும், மும்மொழிக் கொள்கை தமிழ்மொழிக்குக் கேடு தரும் என்பதைக் கவிதைகளில் சிறப்பாக எடுத்து இயம்பி உள்ளார்.
வரலாற்றை மாற்றிய கீழடி! என்ற கவிதையில்
“நதிக்கரையில் பிறப்பதுதான் நாக ரீகம்
நம்முடைய வைகைநதிக் கரையி லின்று
புதியதொரு வரலாற்றை எழுது தற்குப்
புதையலெனக் கிடைத்ததுதான் கீழடிச் சான்று.”
தாய்மொழிக் கல்வியே
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நாகரிகத்திற்கும் முந்தைய நாகரிகம் கீழடி நாகரிகம் எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன் என்பதை உலகிற்கு பறைசாற்றும் கீழடி பற்றிய கவிதை நனி நன்று. கல்வியினைச் செந்தமிழில் காண்! என்ற கவிதையில்
“கல்விதன்னைத் தாய்மொழியில் கற்றிட்ட நாட்டோரே
பல்பலவாய்ச் சாதனைகள் பார்படைத்தா ர் – தொல்தமிழால்
வெல்வதற்கு வேற்று மொழியுதவா முன்னோர்போல்
கல்வியினைச் செந்தமிழில் காண்!”
தேசப்பிதா காந்தியடிகள் தொடங்கி நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர் வரை அனைத்து அறிஞர்களும் வலியுறுத்துவது தாய்மொழிக் கல்வியே!
இது அறியாமல் தமிழ்நாட்டு தமிழர் ஆங்கில மோகம் கொண்டு அலைந்து ஆங்கிலவழிக் கல்வியில் குழந்தைகளைப் படிக்க வைத்து, சுயசிந்தனை இல்லாத குழந்தைகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். ஆரம்பக்கல்வி தமிழ்வழியிலேயே இருக்க வேண்டும் என்பதை விதைகளின்
மூலம் நன்கு வலியுறுத்தி உள்ளார்.
நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் தலைமையாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றப்பின்னர் மரபுக்கவிதை எழுதுவதையே முழுநேரப்பணியாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகின்றார். பல்வேறு கவிதைப் போட்டிகளில் வென்ற கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி வருகின்றார். விழவில்லை வீரம் ! என்ற கவிதையில
“பாய்ந்துவந்த காவிரியைத் தடுத்த போது
படையெடுத்தே சோழனன்று மீட்டு வந்து (2 )
காய்ந்திடாமல் தஞ்சையினைச் செழிக்க வைத்துக்
காத்திட்ட வீரமின்று வீழ்ந்த தென்று
நாய்வாலாய் எடுத்துரைத்தும் மீண்டும் மீண்டும்
நடுவிலே அணை கட்ட முயலு வோரே
பாய்புலியை இடறாதீர் வீழ வில்லை
பழம்வீரம் என்றெழுந்தால் அணைகள் தூளாம்!”
வறட்சியின் போதெல்லாம் காவிரியை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு சீண்டிப்பார்ப்பதும், திரும்பத் திரும்ப புதிய அணை கட்டுவோம் என்று மிரட்டல் விடுக்கும் கருனாடகத்து மக்களுக்குக் கவிதையின் மூலம் எச்சரிக்கை விடுத்தது சிறப்பு. பாராட்டுகள். மதுரை! தலைப்பில் அமைந்த கவிதையில்
“தூங்காத நகரமெனும் மதுரைத் தொன்மை
துலங்குகின்ற கூடலெனப் போற்றும் ஊராம்
தாங்கி நின்று தாயாகத் தமிழ்வ ளர்க்கத்
தகுசங்கம் நான்கிருந்த தமிழின் ஊராம்!”
ஆறாயிரம் ஆண்டுகளாக இயங்கி வரும் மதுரை, சிலப்பதிககரம் காலம் தொடங்கி இன்றுவரை தூங்காத நகரமாக எப்போதும் இயங்கிவரும் மதுரை நகருக்கு மரபுக்கவிதையின் மூலம் மகுடம் சூட்டி உள்ளார். நன்று.
முயற்சியே திருவினையாக்கும்
“முயலாமல் முடியாது!
முயலாமல் என்றைக்கும்
முன்னேற்றம் வாராது
புயத்தாலே உழைக்காமல்
புகழ்வெற்றி நிலைக்காது!”
முயற்சியே திருவினையாக்கும், முயல வேண்டும், உழைக்க வேண்டும், விதைக்க வேண்டும் என்று தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் அறநெறிப்பாடல்கள் எழுதி உள்ளார். யார் மனிதன்? என்று
மரபால் விளக்கம் தந்துள்ளார்.
மனித உயிர்களைக் கொல்லும் கொலைகார ‘இசுடெர்லெட் சாம்பலாகும்’ என்ற கவிதையின் மூலம் தீங்கை, தீமையை நன்கு சுட்டி உள்ளார். காதல் கவிதைகளும் நூலில் உள்ளன. படிக்கும் வாசகர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள். சுற்றுலா! பற்றிய கவிதையில் – pasi vayitru paachoru nool vimarsanam
கொடிய கொரோனா
“உள்நாடு வெளிநாடு என்றே நாமும்
ஊர்மாறி சுற்றுலாதான் செல்லும் போதோ
உள்ளத்தான் விரிவடையும் அங்குள் ளோரின்
உண்மைவாழ்வு நாகரிகம் அறியும் போது
வெள்ளம்போல் புதுவறிவு நம்முள் பாயும்
வேற்றுமைகள் மறைந்துமன நேயம் தோன்றும்
கள்ளமில்லா நட்புவரும் உறவு சேரும்
காண்கின்ற காட்சியெல்லாம் பாடம் சொல்லும்.”
கொடிய கொரோனா நோயின் காரணமாக, ஊரடங்கு காரணமாக எல்லாவிதமான துறைகளும் பாதிக்கப்பட்டாலும் சுற்றுலாத்துறையை முற்றிலும் சுருட்டி விட்டது. மிகப்பெரிய இழப்பையும் பாதிப்பையும் சுற்றுலாவிற்கு விளைவித்தது. சுற்றுலாவிற்கு புத்துணர்வு தரும் வண்ணம் சுற்றுலா பற்றிய கவிதை வடித்தது நன்று. மொத்தத்தில் மரபுக்கவிதைகளின் மூலம் பல்சுவை விருந்து வைத்துள்ளார், பாராட்டுகள்.
நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன்
நூல் திறனாய்வு : கவிஞர் இரா. இரவி
நூல் வெளியீடு : வசந்தா பதிப்பகம் 9443458550
பக்கங்கள் : 160, விலை : ரூ.150
ஐயா வணக்கம். என்னுடைய நூலுக்கு திறனாய்வு வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.