பொன் தெறித்த மேற்கு – நூல் அறிமுகம்
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி எனும் தனது சொந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ் பணியாற்றும் கணித ஆசிரியர் இரா.செல்வமணியின் (பாப்பாக்குடிஇராசெல்வமணி) நான்காம் படைப்பு இது – pon theritha merku puthaga vimarsanam
தனது அன்பு மகன் அற்புதானந்தம் – சேதுலட்சுமி அவர்களின் திருமண தாம்பூலமாக இந்த புத்தகத்தை நமக்கு தந்திருக்கின்றார். ஏற்கனவே தூங்கா விழிகள் என்னும் நூலின் மூலம் திருக்குறளை கவிதை வடிவில் நமக்குத் தந்தவர்.
அதனின்று சற்று முன்னோக்கி நகர்ந்து வேறு ஒரு பயணத்தில் திருக்குறளை நமக்கு இப்புத்தகத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அறம், பொருள், இன்பம் இம்மூன்றும் கொண்ட முப்பால் நூல், உலகப் பொதுமறை என்றெல்லாம் போற்றப்படும் திருக்குறளுக்கு தம்மாலான தமிழ் நன்றியை தெரிவிப்பதில் செல்வமணி உயர்ந்து நிற்கிறார்.
மனப்பாடபகுதியாகவே படித்த திருக்குறளை இப்படியெல்லாம் கதை வடிவில் படிக்கலாம் என்று அவருடைய ஆசான் கலைஞர் அவர்கள் நமக்கு குறளோவியமாக தந்திருப்பார். அதற்கு சற்றும் குறையாத சீடனாக இவர் குறள்களுக்கு புதுக்கவிதை மூலம் விளக்கம் தந்து அந்த குறள்களைக் காட்சிமைப்படுத்தி நம் மனக்கண் முன்னே ஓட விடுகின்றார். படித்ததை விட பார்ப்பதில் நாம் எளிதில் கிரகித்துக் கொள்வோம். அதனை சாத்தியப்படுத்திய செல்வமணி அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
pon theritha merku puthaga vimarsanam
தூங்கா விழிகளில் 55 குறள்களுக்கு விளக்கம் சொன்னவர்,இதில் 78 குறள்களுக்கு விளக்கம் தந்திருக்கின்றார். ஆக, மொத்தம் 133. இன்னும் அந்த எண்ணிக்கையின் பத்தின் மடங்காம் 1330யும் இதே போன்று காட்சி வடிவமாய் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். எல்லாக் கவிதைகளையும் இங்கு சொன்னால் புத்தகத்தை வாசிக்கும் ஆர்வம் குறைந்துவிடும்.
வாசிக்கத் தூண்டிட அவர் எழுதிய 78 கவிதைகளில் அறத்துப்பாலுக்கொன்று, பொருட்பாலுக்கொன்று, இன்பத்துப்பாலுக்கொன்று குறள்களை உங்கள் முன் காட்சிமைப்படுத்தி இந்த நூலை வாசிக்க தூண்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
வான்கொடை
என்ன வேலப்பா
கண்ணைக் கசக்கிற?
வேண்டும்
வாழ்விற்கு உதவி
வள்ளல் பெருமானே!
வானம் பொழியட்டும்
வாய்க்கால் நிரம்பட்டும்
பூமி நனையட்டும்
பூக்கோலம் மறையட்டும்
செல்வம் கொழிக்கட்டும் சென்றுவா அப்போது!
அமைச்சர் பெருமானே
அருந்தவம் புரிகின்றேன்!
மாபெரும் இராஜ்ஜியத்தில்
மக்கள் மனங்களில்
மகிழ்ச்சி பெருகவேண்டும்! மாமன்னர் புகழ்க்கொடி
மலைமீது பறக்கவேண்டும்! ஆண்டவனுக்கு ஆலயங்கள் அழகுறவே எழ வேண்டும்.
புரிகிறது அடிகளாரே
மழை வேண்டி மாதவம்!
மன்னரின் அருள் உண்டு
சென்று வாருங்கள்!
“தானம் தவமிஇரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.”
இப் பரந்த உலகில் மழை பொய்த்து விட்டால் ஈகை தவம் போன்றவும் அற்றுப்போகும். – புலவர் நன்னன்.
அறத்துப்பால் வான்சிறப்பின் 19வது குறளை எடுத்துக் கொண்டு அதற்கு புலவர் நன்னின் விளக்கத்தை நிறைவாகச் சொல்லி கவிதை படைத்து வான் கொடையாக நமக்குத் தருகின்றார்
அந்தப்புரம்…
அமைதியின் நிழலில்
அந்தப்புரம்..!
கருவறைச் சிலையென
இருவரின் துணையோடு
கார்குழல் அசைவில் காத்திருந்தாள் ராணி!
காதில் விழுந்த
காலடி ஓசை
மாமன்னர் வருகையை
மனதிற்குச் சொன்னது!
நாடி தொட்டார்!
கூடி மகிழ
தேடி வந்தேன்
வாடி நிற்பதேன்?
வாடவுமில்லை
தேடவுமில்லை
ஏங்கும் ஆளிருந்தால்
போங்களை தேடி!
அதுவா சங்கதி?
அரசவை வேலை
தகடூர் தேசத்தில்
தங்கிடும் சூழல்!
நம்பிடவும் இல்லை
தேம்பிடவும் இல்லை
முகம் மறைத்தாள்
மஞ்சத்து மகாதேவி!
வீண் வம்பு வளர்த்தால்
நானென்ன செய்வது?
மன்னரும் விழிகளைச்
சன்னலில் வைத்தார்!
நிமிடங்கள் கரைந்தது
நிசப்தமும் தொடர்ந்தது
என்ன இது விளையாட்டு?
திரும்புக தேவி…
மன்னரின் முகம் பார்த்து மார்பினில் சாய்ந்து
கைகளால் குத்தினாள்
மை தீட்டிய விழியழகி!
நானும் உன்னைப்போல்
பதில் சொல்லவோ?
நாயகன் குறும்பில்
நாணம் கொண்டாள் பேரரசி!
வளையொலிகளின்
அலையொலிகளில்
அந்தப்புரம்!
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்” குறள் 1330.
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கு இன்பம். அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே என்று சாலமன் பாப்பையா விளக்கம் தந்திருக்கின்றார் – .
இந்த விளக்கத்தை மனதினில் இருத்தி அரசன் அரசியின் ஊடலாக அந்தப்புரம் என்று தலைப்பிட்டு கண் முன்னே காட்சிமைப்படுத்துகிறார். இன்பத்துப் பால் மற்றும் இது நிறைவுக் குறளுமாகும். நிறைவான குறளும் கூட.
கற்பதில்கனிவு
கல்வியும் கற்பதில்லை
கற்பவரையும் விடுவதில்லை கல்விச் சாலையிலிருந்து குற்றச்சாட்டுகள் குவிந்தன கோலப்பன் பெற்றோருக்கு!
துணிவு காட்டுமிடமல்ல
பணிந்து கற்பாய்!
பொறுப்புடன் எடுத்துரைத்தார் பண்பான தந்தை.
பொற்பாதம் பணியவேண்டுமோ? பெற்றுக்கொள்கிறார்கள் பணம் கற்பிப்பது கடமைதானே!
பதிலுரைத்தான் வெறுப்போடு.
சினம் கொண்டாலும் பயனில்லை மகனின்
மனம் திருத்துவது எப்படி?
மயங்கி நின்றவருக்கு
மறுநாளே கிடைத்தது விடை!
பக்கத்து ஊர்ப்பணக்காரரின் பிறந்தநாள் விழாவில்
பரிசு பெறச் சென்றார்
படிக்கின்ற மகனோடு!
பணிவோடு பாதம்தொட்டுப்
பரிசு பெற்றுச்சென்றனர்
பல நூறு மனிதர்கள்!
புரிந்தா கோலப்பா?
படிக்காத மனிதரின்
நிலையில்லா செல்வத்திற்கே தலைகுனிந்து நிற்க வேண்டும் காலத்தால் அழிவில்லாக்
கண் போன்ற கல்வி தரும் அறிவிற்சிறந்த ஆசிரியரிடம் நின்று பணிதல் தவறோ?
கற்பதில் கனிவும்
கற்றோர் சொல் கேட்பதும்
பற்றி நிற்கும் வாழ்விற்கு
உற்றதொரு உயர்வு!
கவனம் கொண்டான்
கற்பதில் இன்பம் கண்டான். கல்வியால்
புகழ் கொண்டால் கோலப்பன்!
” உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்” குறள் 395
சாலமன் பாப்பையா விளக்கம்
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர். அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர் இழிந்தவரே என்று சாலமன் பாப்பையா விளக்கம் தந்ததை, தந்தை மகன் மூலமாக படிப்பின் அவசியத்தைக் காட்சிகளாக்கி கண் முன்னே விரிக்கிறார். பொருட்பாலில் கல்வி எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறளுக்கான காட்சிமைப்படுத்துதல் இது.
முதற் குறளையும் நிறைவுக் குறளையும் தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டு தூங்கா விழிகளைத் தொடர்ந்து துயில் எழுப்பிய பொன் தெறித்த மேற்கு என்று பதிப்பாசிரியர் வான்மதி அவர்கள் தொகுப்பு பற்றி பதிப்புரை தந்திருக்கிறார்கள். தொடர்ந்து பல இலக்கிய படைப்புகளை தருமாறு கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.
திருக்குறளுக்கு எப்படி தம் பங்குக்கு சிறப்பு சேர்க்கலாம் என்றெண்ணி அதன் விளைவாக மலர்ந்த மலராம் பொன் தெறித்த மேற்கு என்று மகிழ்வுரை வழங்கி இருக்கின்றார் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள். ஒரு பாவலனுக்கு இருக்க வேண்டிய முத்திரையை கடுகளவல்ல கடலளவு இந்த நூலின் வழியே பதிவு செய்துள்ள தோழர் செல்வமணி அவர்களுக்கு பாராட்டுக்கள் என கடவூர் மணிமாறன் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார்கள்.
திருக்குறளை பரப்புகின்ற பணிகள் பல்வேறு வகையில் இருந்தாலும் தம்பி செல்வமணியின் இந்த கவிதைப் படைப்பு இன்னும் அதனை சிறப்பாக செய்கிறது என்று மதிப்புரை வழங்கி சிறப்பு செய்திருக்கிறார் திரு. குமார சுப்பிரமணியம் அவர்கள்.
திருக்குறள் மற்றும் திருவள்ளுவருக்கான பெருமைகளை சிறப்பினை நிலை நிறுத்துவதில் கலைஞர் முன்னிலை வகித்தார். அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளைப் பார்வைக்கு முன் நிறுத்தியதும் சென்னையில் வள்ளுவர் கோட்டம் எழுப்பியதும் தென்கோடி குமரியில் வள்ளுவனுக்கு வானுயர சிலை எழுப்பியும் செய்த நன்றிக்கடன் தம்மைப் பாதித்து ஏதோ ஒரு வகையில் இதுவும் அது போன்றதொரு நன்றி செலுத்தும் செயலே என்று தன்னுரையினைத் தந்திருக்கின்றார்.
சிறப்புமிக்க ஆளுமைகளின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் இந்த நூலுக்கு மிக பொருத்தம் என்பதை நாம் நாம் இந்நூலினை வாசிக்கும்போது நன்கு உணரலாம். நெய்க்கு தொன்னை ஆதாரமா தொன்னைக்கு நெய் ஆதாரமா என்றொரு சொலவடை உண்டு.
அதை போன்று திருக்குறளை எடுத்துக் கொண்டு இவர் அதற்கான இந்த கவிதைக் காப்பியங்களை படைத்தாரா, கவிதைக் காப்பியங்களைப் படைத்து திருக்குறளை எடுத்துக் கொண்டாரா என்று நாம் வியந்து நிற்கும் அளவிற்கு இந்த படைப்புகள் நம்மை ஈர்க்கின்றன. அத்தனை எளிதில்லை பொருளை உள்வாங்கி அதற்கேற்ப படைப்புகளை ஆக்குவது. அதனை திறம்பட செய்து நம்மையெல்லாம் வசீகரிக்கிறார் செல்வமணி அவர்கள் – pon theritha merku puthaga vimarsanam.
வாசிக்க வேண்டிய தொகுப்பு இது. மேலும் குழந்தைகளுக்கு, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதனை ஒரு கதைபோல சொல்லும் ஒரு திருக்குறள் அகராதி எனலாம் இந்நூலினை. மென்மேலும் படைப்புகள் தர வாழ்த்துக்கள். உரிய இடத்தில் இது சேர்ந்து பல விருதுகளை பெற வாழ்த்துக்கள்.
பொன்தெறித்தமேற்கு பக்கங்கள் 224, விலை 200
– தாணப்பன் கதிர்
நீரோடை வலைத்தள தம்பி மகேஷ் அவர்களுக்கும் நெருக்கமான நண்பர் கவிஞர் தாணப்பன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
மனதைத் தொட்ட விமர்சன பதிவு இது !
அருமையான விமர்சனம்.. 👌👌
மிகவும் அருமையாக சுவாரசியமாக படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது இந்நூலில் சிறு தூறல்கள் …கவிதை வடிவில் திருக்குறளுக்கு விளக்கம் அருமை அருமை ..சகோதரர்கள்..பாப்பாக்குடி செல்வமணி அவர்களுக்கும் தான் தாணப்பன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்