சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு

“தூரோ பயணம்முன்னு
தெருப் பயண போறங்க….!.”

கோவை மண்வாசணை ததும்பும் கதைகள், நாவல்கள் எவ்வளவோ வந்துள்ளன. ஆர்.சண்முகசுந்தரம்,க.ரத்னம் தொடங்கி சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், சுப்ரபாரதிமணியன், க.சீ.சிவகுமார், மகுடேஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், இளஞ்சேரல் ராமமூர்த்தி, பூமதிகருணாநிதி இப்படியேத்தனையோ பெயர்கள் இதில் அணிவகுக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் விதிவிலக்காக ரொம்பவும் வித்தியாசமான புனைவை வெளிப்படுத்தியிருக்கிறார் சூலூர் ஆனந்தி – sigaram thodum uravugal.

sigaram thodum uravugal

சிகரம் தொடும் உறவுகள்‘ என்ற தலைப்பைப் பார்த்து விட்டு இது ஏதோ கட்டுரை நூல் என்று எண்ணி வாசிக்கத் தொடங்கினால் அச்சு அசலான மொழியில் முத்தம்மா ஆத்தா, சாமியப்பன் அய்யன், பெரிய பொன்னான், சரசாத்தா, சின்னதம்பி, சுமதி, சின்னப்பொன்னான், கமலாத்தா, பாக்கிம்மா, கண்ணப்பன், சக்திவேல், சாந்தி, சின்னக்கவுண்டர், பூவாத்தாள், தெய்வாத்தா, நல்லதம்பி என பாத்திரப் படைப்புகள் நமக்குள் ஏறி என்னன்னமோ இம்சை செய்கின்றன.

கோவை மண்வாசம்

மற்ற மண்வாசனை எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் அசலான பேச்சு வழக்கு மொழியில் கோவை மண்வாசம் துள்ளி விளையாடுகிறது. அசலான வாழ்வியல் நாவல்தான் என்றாலும் கொங்கு மண்டலத்து மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்க நெறி, தர்மப் பாங்கு போன்றவையே முன்னிலைப்படுத்தி பாத்திரப் படைப்புகள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது – sigaram thodum uravugal.

ஒடக்காயின் கதை, கிழமைபிடித்தல், சாட்டு நோம்பி, பச்சமாவு சப்பரம், இறுதி மூச்சு, ஆக்காட்டிப்பறவை, தெம்பை, சங்கராத்தி, புனுச்சல், மஞ்சநீர் சப்பரம், பச்சை குத்துதல் என ஒவ்வொரு அத்தியாயத் தலைப்புகளே மண் மக்களின் ஈரத்தை சுட்டி ஒரே மூச்சில் அதன் பின்னணியை வாசிக்க வைத்து விடுகின்றன.
அதிலும் ஆத்தாவின் மரணம் அடையும் போது அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும் வேளையில் பெரியபொன்னான், சின்னப்பொன்னான் செய்யும் சீர்முறைகளை வர்ணித்து செய்யப்பட்டிருக்கும் சொற்சித்திரம் மனதை வெகுவாக கசிய வைத்து அடுத்தது என்ன, அடுத்தது என்ன என புலிப்பாய்ச்சலுடன் வாசிப்பு சுகம் நம்மை அரவணைக்கிறது.

இப்படியான முழுக்க முழுக்க கோவை வட்டார மொழியுடன் தவழ்ந்து வந்திருக்கும் இந்த நாவலுக்கு அணிந்துரையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அண்ணன் மகள் ஆ.பா.ஜெ.மு.நசீமா மரைக்காயர், ‘ கோவை மண்மணத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்?’ என்று கூறியிருப்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.

ஜெ.கமலநாதன் முன்னுரை

ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த ஒரு பெண்மணி, கொங்கு மண்டல கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மண் மொழி எழுத்தை இப்படி தரிசித்தலென்பது ‘ எந்த மண் மொழியானாலும் எந்த பண்பாடு, கலாச்சாரம் ஆனாலும், அதில் தூய அன்பும், பாசமும், தரம்மும் நிறைந்திருந்தால் வாசிப்பதிலும் போற்றுவதிலும் தடையேதும் இராது!’ என எண்ண வைக்கிறது.
சென்னை, கோவை வானொலியின் முன்னாள் இயக்குநரும், தன்னம்பிக்கை பேச்சாளரும், எழுத்தாளருமான ஜெ.கமலநாதன் அற்புதமான முன்னுரையை இந்த நூலூக்கு வழங்கியிருக்கிறார்.

ஆனந்தி வெறும் எழுத்தாளர் அல்லர். அவர் கொங்கு மண்ணின் தாய். ஆம் அம்மண்ணின் தாய் மொழி அழகை உள்ளபடியே தாய்மை உணர்வோடு பொங்கிப் பொங்கி எழுதியிருக்கிறார்.

இதோ அதில் அவர் எழுதிய ஒரு பாடல்:
தூண் அணையா மூலையிலே
துளசிமணி கட்டிலிலே
என்னோட மந்திரியின் தாயார்
தூக்கமுன்னு சாஞ்சிருந்தா
தூக்கோ தெளியாம – எனக்கு
தூரோ பயணம்முன்னு
தெருப் பயண போறாங்க…

– கா.சு.வேலாயுதன், எழுத்தாளர் & பத்திரிக்கையாளர்

புத்தக தேவைக்கு நீரோடை மின்னஞ்சல் info@neerodai.com அல்லது வாட்சாப் எண்ணை தொடர்புகொள்ளவும்.

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    அழகான திறனாய்வு …புத்தகத்தை வாசிக்கும் ஆவலைத் தோன்றுகிறது …கொங்கு மண்ணின் மணத்தை சுவாசிக்க வைக்கிறது அருமை வாழ்த்துக்கள் …நூலாசிரியரும் திறனாய்வு கட்டுரை ஆசிரியருக்கும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *