தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai

தாயம்மா

கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய வேண்டுமென வேண்டிக் கொண்டு வெளியே வந்து மளமளவென வேலைகளை ஆரம்பித்தாள்…

காலை காபி போட்டு குடித்த பின்… மடமடவென சமையல் வேலைகளை ஆரம்பித்தாள். முந்திய நாளே தாயம்மா காய்கறிகளை வெட்டிக் கொடுத்திருந்ததால் சமையல் எளிதாக இருந்தது. தாயம்மாவை நினைக்கும் போதே அவள் மனதில் ஒரு நெகிழ்ச்சி உண்டானது.

தாயம்மா அவள் வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக வேலை பார்க்கிறாள். அவள் வேலைக்கு வந்த போது அவளுடைய இரண்டு மகள்களும் சின்ன வயசு… பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த சிறுமிகள் ..புருஷன் குடிகாரன்…அவனால் தாயம்மாவிற்கு எந்த பயனும் கிடையாது.அவளே உழைத்து சம்பாதித்து அந்த ரெண்டு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து இப்போது பெரியவளை கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டாள்.

“அம்மா “என்ற குரல் கேட்க… இதோ தாயம்மா வந்துவிட்டாள்.

தாயம்மா வந்தால் மரகதத்தை ஒரு வேலையும் செய்ய விடமாட்டாள். இழுத்து போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டுமென்று நிற்பாள். அன்று உள்ளே நுழைந்த தாயம்மா மௌனமாக வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

“என்ன தாயம்மா… இன்னைக்கு சத்தத்தையே காணும். ஏதோ யோசனையிலேயே இருக்கிற மாதிரி தெரியுது. ஏதாவது பிரச்சனையா?” என்றாள் மரகதம்.

“பெரியவ செல்வி உண்டாயிருக்கா… உங்களுக்கு தெரியும்ல்லமா.. அவ மாப்பிள வீட்ல அஞ்சா மாசம் அரிபழம் போடணும்னு சொன்னாங்க…செஞ்சுட்டேன். இப்ப வளைகாப்பு பண்ணனும்னு நிலையா நிக்கிறாங்க… என் தகுதிக்கு ஆம்பள சரியில்லாம நான் எத்தனை விசேஷம் செய்ய… இன்னும் பேறு காலம் வேறு பார்க்கணும்”

“அதுக்கு ஏண்டி மலையற… நல்ல காரியம் தானே… செல்வி முதமுதலா உண்டாயிருக்கா… உனக்கும் இது முதல் பேரக்குழந்தை

“செய்ய ஆசைதான்… ஆனால் வசதி வேண்டாமாம்மா? நீங்களே யோசிச்சு பாருங்க. இப்போ இந்த கொரானா காலத்தில அரசாங்கம் யாரையும் கூப்பிட கூடாதுன்னு சொன்னது நல்லதா போச்சு… ஒருத்தரையும் கூப்பிட வேணாம். ஆனாலும் செய்ற கட்ட செஞ்சுதான் ஆகணும் பலகாரம் பண்ணனும்… கலந்த சாதங்கள் தயார் பண்ணனும்… சூல் காப்பு வாங்கணும்… அப்ப்ப்ப்பா சொல்லும் போதே எனக்கு மூச்சு முட்டுது… இவ்வளவுக்கும் நான் தகுதியா?” என்றவாறு வருத்தத்தோடு மரகதத்தை பார்த்தாள்.

“ஏண்டி… நாங்கல்லாம் இல்லையா? இத்தனை வருஷமா இங்க வேலை பாக்குற… உன்னோட மகளுக்கு ஒரு விசேஷம்ன்னா நான் விட்டுடுவேனா…. நீ தேதியை குறி… செலவு பூரா நான் பார்த்துக்கிறேன்.செய்றகட்டுகளை நல்ல சிறப்பா செஞ்சுடுவோம். ஆட்களை மட்டும் கூப்பிடாத.. இப்ப கொரானா இரண்டாவது அலை அதிகமா இருக்கு …இந்த நேரத்துல சூலியையும் பாதுகாப்பா பாத்துக்கணும். இருக்கிறவங்களும் பாதுகாப்பா இருக்கணும்.. அதனால அவ மாமியார் நாத்தனார் வீட்டார்… உன் கூட பிறந்த அக்கா.. அதோட நிறுத்திக்கோ.”

சொன்னதோடு நிற்கவில்லை மரகதம். பார்த்து,பார்த்து அவளுக்கு வேண்டியதை, சூல் காப்பு, பட்டுப் புடவை எல்லாம் வாங்கியதோடு, பதினொரு வகை கிளறு சாதங்களை அந்த இடத்தின் பிரபலமான ஓட்டலில் ஆர்டர் கொடுத்தாள். ஐந்து வகை பலகாரங்களையும் அவர்களிடமே ஆர்டர் கொடுத்தாள் பூமாலை ,வளையல்கள், தாம்பூல சாமான்கள் என ஒரு செலவையும் தாயம்மாவுக்கு வைக்கவில்லை ..பார்த்து பார்த்து எல்லாவற்றையும் சிறப்பாக ஏற்பாடு பண்ணினாள். அவள் செஞ்ச சீர்களை பார்த்து செல்வியின் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே குளிர்ந்து போனார்கள்.

மரகதத்தின் வீட்டுக்காரர் சுந்தரமும் எதுவும் சொல்லவில்லை. அவள் ஆசைக்கு செய்யட்டும் என்று விட்டு விட்டார்.தாயம்மா சொன்னபடி 20 பேரோடு நிறுத்திக்கொள்ள மரகதமும் சுந்தரமும் போய் செல்வியை ஆசீர்வாதம் பண்ணி விட்டு வந்தனர்.

“எப்படி மரகதம் திடீர்னு உனக்கு இப்படி ஒரு யோசனை வந்துச்சு… தாயம்மா மகளுக்கு ஜாம் ஜாம்னு வளைகாப்பு நடத்திட்டியே….” என்றார் மனைவியைப் பார்த்து.

மரகதம்,” எங்க.. யு.எஸ். ல இருக்கிற நம்ம பொண்ணு அபிக்கு இது ஆறாவது மாசம். எட்டு வருஷத்துக்கு அப்புறமா.. கடவுள் கொடுத்த வரமா குழந்தை உண்டாயிருக்கா… எல்லா வசதியும் இருந்தும் நம்மாலயும், சம்பந்தியாலயும் போக முடியாத சூழ்நிலை.. என் மகளை பார்க்க, அவளுக்கு எல்லாத்தையும் நல்லபடியா செய்ய மனசு துடிக்குது. ஆனால் சூழ்நிலை என் நம்ம கைய கட்டி போட்டுடுச்சு…. இப்படி ஒரு நோய் தொற்று வரும்… அது இவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் நிச்சயமா நான் நினைக்கல… பிரசவத்துக்குப் போய் உதவ முடியுமான்னு தெரியல… நமக்கு விதிச்சது அதுதான்… என்ன குழந்தையை கடவுள் கொடுத்தாரேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

தாயம்மா கதை அப்படி இல்லங்க.. அவ மக அவகிட்டக்கயே இருக்கா… அவளும் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் உண்டாயிருக்கா… நம்மகிட்ட காசு இருக்கு ஆனா செய்யக்கூடிய சந்தர்ப்பம் இல்லை… அவகிட்ட செய்ய கூடிய சந்தர்ப்பம் இருக்கு ஆனா காசு இல்ல… அதனாலதான் நம்ம மகளா நினைச்சு செல்விக்கு எல்லாத்தையும் செஞ்சு அதுல ஒரு மனநிறைவ தேடிக்கிட்டேன்.தாயம்மா மனசார வாழ்த்துவா…அந்த வாழ்த்து என் மகளை நல்லபடியா பெத்துபிழைக்க வைக்கும்…” மரகதம் கண்கலங்க கணவனை ஏறிட்டாள் – thaayammaa sirukathai.

சுந்தரம் கண்களும் கலங்க… அவளுடைய கூற்றில் உள்ள எதார்த்தமான உண்மை மனதில் பட ..’ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ ன்னு அம்மா அடிக்கடி கூறுவாளே.. என்று நினைத்தவாறே தலையசைத்து ஆமோதித்தார்.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

2 Responses

  1. Soraiyur Rangarajan says:

    ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் என்பதை மரகதம் நிருபித்து விட்டார்.வேலைக்காரியின் பேரக்குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் மனித நேயம் இன்னும் உள்ளது என்று நிரூபித்து விட்டார்.வாழ்த்துக்கள்

  2. Nirmala says:

    அருமையான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *