உலக புகைப்பட தினம் – கவிதை
இல்லாத நம் பாட்டனை
நாம் காணாத அம்மையை
நாம் உணராத தந்தையை
உருவகப் படுத்திக் காட்டுவதும்
ஒரு புகைப்பட கலைஞன் தான்.
உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால்
தடுத்து நிறுத்தியதும்
ஒரு புகைப்பட கலைஞன் தான்..
அடைக்கலம் தர மறுக்கப்பட்டு
அகதிகளாய் படகில்
நாடு திரும்ப முடியாமல்
கடற்கரை மணலில்
ஒரு மழலையை
இயற்கை அன்னை
அழைத்துச் செல்ல
அடக்க இயலா துக்கத்திலும்
ஓர் நொடியில் உலகை உறையச் செய்து
உண்மையை பரவச் செய்ததும்
ஒரு புகைப்படக் கலைஞன் தான்.
சோமாலியாவில் பஞ்சம்
தலைவிரித்தாடும் பொழுது
எலும்புகள் தெரிந்திட
ஓடத் தெரிந்தும்
தள்ளாடி
தவழ்ந்து வந்த குழந்தையை
இரையாக்க காத்திருந்த பருந்துடன் இணைத்து பதிந்த புகைப்படத்தில்
பசி கொடுமையும் பொருளாதார சீரழிவையும் பார்த்தவுடன்
புரியும் வண்ணம்
உலகத்திற்கு எடுத்து வைத்ததும்
ஒரு புகைப்படக் கலைஞனே..
புயலின் சீற்றத்தை
கடலின் ஆட்டத்தை
மழையின் கொட்டத்தை
இயற்கை நம்மை
வஞ்சம் தீர்ப்பதை
உலகிற்கு எச்சரித்தும்
எடுத்துக் கூறியும்
விளக்கிச் சொல்லி
விழிக்க செய்பவன்
புகைப்படகாரனே..
புகைப்படம் இன்றி
என்ன நாம் கற்று இருக்க முடியும்..
இன்று நாம் பெற்றிருக்கும் எல்லாம் எதனோடோ ஒப்பிட்டு பார்த்து முன்னேற்றம் காணப்பட்டது எனில்
அதற்கு காரணமும் புகைப்படகாரனே..
அழகை எல்லோரும் ரசித்து விட்டு செல்ல அவன் மட்டுமே அடுத்த நொடியில்
அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்திடுவான் தன்
புகைப்படக் கருவி கொண்டு..
எல்லோரும் வேக வேகமாக நகர
அவன் மட்டுமே நின்று யோசித்தும்
யாசித்தும் பேசி சிரித்துக் கொண்டிருப்பான் மரங்கள் செடிகள் பூக்கள் பறவைகளுடன்…
கணநேரம் குறைந்தாலும்
பறந்து விடும் பட்சி என
கண் இமையை இணைக்காமல்
காத்திருந்து புகைப்படம் எடுப்பான்
மழை வெயில் புயல்
சகதி சந்திரன் எவை எதிர்த்தாலும்..
மௌனமே இவன் மொழியானாலும் எல்லோரையும் சிரிக்க சொல்வான்..
சுப தினங்களில்
புகைப்படம் எடுக்கையில்
எல்லோரையும் வரிசைப்படுத்தி அவசரத்திலும் ஒருநிலைப்படுத்தி
விழி திறக்க சொல்லி
உற்று நோக்க வைத்து
ஆட்காட்டி விரலை மீட்டி
புகைப்படம் எடுக்கும்பொழுது
குறுக்கும் நெடுக்குமாக கூடி திரிந்து கோபப்படுத்தினாலும்,
ஆத்திரங்கள் நிறைந்தாலும்
குணமாகவே சொல்லிடுவான்
புரியாத பதர்களுக்கும்
தள்ளி நில்லுங்கள் என்று
பொறுமையாக…
தாய்மாமன் தாமதித்து வந்தாலும்
சித்தப்பா குறுக்கே திரும்பி நின்றாலும்
உறவுகள் உடன்பிறப்புக்கள்
எங்கேயோ சென்றாலும்,
இரவு கண் விழித்தும்,
கணநேரம் தாமதிக்காமல்
பிரம்ம முகூர்த்தத்துக்குள்
முதல் ஆளாய் வந்து நிற்பான்
நடுச்சாமம் என்று பாராமல்..
நெடுநேரம் நின்றாலும்
பந்திக்கு முந்தி ஓடுவதும் இல்லை தலையணையை தேடி
ஒதுங்குவதும் இல்லை…
மீதத்தை உண்டிடுவான்
கிடைத்த இடத்தில் உறங்கிடுவான்..
தன் இல்ல, குடும்ப சுப தினங்களில்
பெரும்பாலும் தலை காட்ட மாட்டான்,
நல்ல நாட்களில் தானே
இவனுக்கும் வேலை…
எடுத்த புகைப்படங்களில்
எப்படியும் குறை கூறுவார்கள்
என்றே தெரிந்தாலும்
தளராமல் செயல் முடித்து
கையில் தவள செய்வான்
கடுமையாய் உழைத்து
அடைகாத்து உருவாக்கம்
செய்திட்ட புகைப்படத் தொகுப்பை..
பாக்கி வைத்திருப்பார்கள்..
இல்லையேல் வாங்காமல்
காக்க வைப்பார்கள்…
தொழில் போட்டியினால்
இவன் முதலீடு செய்து
கொண்டே இருக்க வேண்டும்..
உதவிக்கு அழைத்து வந்தவனும்
உடனே புகைப்பட கலைஞராக
அடுத்த மண்டபத்தில்…
தொழிலாய் பார்ப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்..
கலையாய் பார்ப்பவர்கள்
தேய்கிறார்கள்..
காலம் அப்படி
எல்லோருக்கும் ஆசை தான்
தாராளமாய் கொடுக்காவிட்டாலும்
பேரம் பேசுவதையாவது குறைத்திடுங்கள்..
உங்கள் பேரனின் பேத்திகளுக்கும்,
உங்கள் அடையாளத்தை அழியாமல்
கொடுக்கிறோம் நாங்கள்
இந்த புகைப்படத்தினால்…
அன்னியர்கள் வீட்டிற்கு வெளியே..
அக்கம் பக்கத்தினர் வரவேற்பரை வரை..
நண்பர்கள், உறவினர்கள்
உணவருந்தும் நாற்காலி வரை…
புகைப்படகாரனோ வீடு முழுவதும்…
நம்பிக்கை எமக்களித்த வாழ்க்கை..
எல்லோர் வீட்டிலும் சுபகாரியம்
நடக்க வேண்டும் என்று
முதலில் விரும்பும் நல்ல மனிதன் புகைப்படக்காரன்
அதில் நானும் இணைகிறேன்
என்பதில் பெருமை கொள்கிறேன்…
இனிய புகைப்பட தின நல்வாழ்த்துக்கள்
வாவி.ச.சீனிவாசன்
என்னையும் புகைப்படக் கலைஞனாய் மாற்றி வாழ்க்கையில் ஒளியேற்ற துடித்திடும் பேராசையை கொண்ட நண்பன் நாகமாணிக்கத்திற்கும் எல்லாச் சூழ்நிலைகளிலும்
எனக்கு ஆதரவாக இருக்கும் மற்ற நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் நன்றிகளுடன் சமர்ப்பிக்கிறேன்.
NICE