உன் – நீரோடை கவிதை
முன் வரையற்ற மணல் வெளி
அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai.
நெற்றி வழிந்த உப்புநீர்
மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக்
காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து
முளைக்கின்றன நாவற் பழங்கள்.
சிவந்த நீரோட்டத்தினடியில்
உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள்.
வரியோட்டமாய் நகரும் சதுப்பின் மௌனத்தில்
முண்டி எம்புகின்றன
உயிர் வேர் நரம்புகள்.
எங்கோ உன் ஊற்றுக்கண்ணிலிருந்து வருடி வருடித் தாகம்
சுமக்கிறேன்.
காலம் பொழியும் அருவிக்கரையின் குகைகளுக்குள் கமழ்கிறது உன்
நெடி.
சின்னஞ்சிறியதாய் மழைக் குமிழ்களுக்குள்ளிருந்து
என் நா அறிகிறது.
உன் சருகுகள் உதிரும் பிரதேசத்திலிருந்து
மலைக்குன்றுகள் பிறந்தன.
திசையற்றிருக்கும் உன் உடலிற்குள்ளிருந்து உயிர்ப்பித்திருந்தாய்
என் பாசி பிடித்த கரும் பாறைகளை.
– நந்தகுமார்