உழவன் என் தலைவன்
மனித வாழ்வின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்தின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாக நமது எட்டு கவிஞர்களின் ஆத்மார்த்தமான வரிகள். ம.சக்திவேலாயுதம், பாரிஸா அன்சாரி, ப்ரியா பிரபு, தி.வள்ளி, அனுமாலா, அர்ஜுன் பாரதி, கவி தேவிகா, மற்றும் போளூர் பாலாஜி ஆகியோர் எழுதியது – uzhavan em thalaivan kavithai.
காலை துயிலெழுந்து
கலப்பை தோள் சுமக்க
ஊரார் துயில்களைய
சேவலை எழுப்பிவிட்டு
வைகறை பொழுதில்
கழனி நோக்கி
இனிய பூபாளம் இசைக்க
இன்பமாய் ரசித்து
கலப்பையில் மாடு பூட்டி
நிலத்தை ஊன்றி உழுது
குருதியை வியர்வையாய்
நிலத்தில் சிந்தி உரமேற்றி
நெல்மணிகள் திரண்டு
களம் கண்டு வண்டியேறி
சொற்ப விலை கண்டாலும்
அற்ப வாழ்வு வாழ்ந்து
சொர்கமாய் உழவுதனை
நட்டத்திலும் காப்பாற்றும்
உழைப்பவரின் உள்ளத்தில்
உழவன் என் தலைவனே
– போளூர் பாலாஜி
தரணியாளும்
தன்னலமற்றவன்
தன்உழைப்பை
விதைநெல்லோடு
சேர்த்தே பயிரிட்டு வியர்வையோடு கண்ணீரை
சேர்த்தே நீரூற்றி
தன் வயிற்று
சுருக்கத்தைப் போல்
நிலத்திலே பாத்தியிட்டு
வாராத வருணனுக்காக வருங்கால வசந்தத்தத்துக்காக
நான் முழுக்க காத்திருந்து அரும்பாடு பலபட்டு
மாபெரும் தவமியற்றி
பெற்ற வரத்தை
நமக்காக தானம் கொடுத்த தன்னிகரில்லாத் தலைவன்
அவன்பசி தனைப்பொறுத்து பிறர் பசி போக்குமவன்
தலைவனுக்கு எல்லாம் தலைவன்
உழவன் எம் தலைவன்….
– கவி தேவிகா, தென்காசி
தமிழர்களாய் தலைமகன்களாய்
தைமகள் பூமகளாய்
செழிப்போடு வலம் வர
உன்னத உறவுகளோடு
நாம் கொண்டாடும் திருவிழா…
எம் பொங்கல் பெருவிழா!
பொங்கல்விழா என் இரத்த உறவே..
பாரம்பரிய சம்பா அரிசியாய்
என் அப்பா-அம்மா..
பக்குவமாய் வெந்து பாலாய் பொங்கி
நற்சுவையாய் அன்பாய்
வாழ்வின் நல்லுணவாகிறேன்..
பொங்கல்விழா என் காதல் உலா..
இனிக்கும் வெல்லமாய்
அச்சுவெல்லமாய் என்னவள்..
பதமாய் வெந்த புத்தரிசியோடு
புன்னைகைத்திளைக்க இணைந்தவளால்
வாழ்வின் சர்க்கரைப்பொங்கலாகிறேன்..
பொங்கல்விழா என் நட்பின் விழா…
ஏலமும் முந்திரியும் கிராம்புமாய்
அழகுச்சுவையேற்றும் சிநேகிதர்கள்…
நெய்யோடு மிதக்கும் பொன்நிற
தேங்காய்பற்களாய் நண்பர்கள்
இனிக்கும் பாயசமாகிறேன்…
பொங்கல்விழா என் உறவுக்கனா… – uzhavan em thalaivan kavithai
தோகை மயில்களாய் இனிக்கும் கரும்புச்சொந்தங்கள்…
அடிக்கரும்பும் நுனிக்கரும்பும்
வெட்டிவெட்டி பிழியப்பிழிய
வாழ்வின் கரும்புச்சாறாகிறேன்..
பொங்கல்விழா என் கிராம நிலா…
பொறியலும் அவியலும் பச்சடியுமாய்
ருசிக்கும் கதம்பமாய் ஊரார்..
தொடுகறிகளை தனித்தனியே ருசித்தாலும்
இணையும் போதே அனைவரும் விரும்பும் சுண்டக்கறியாகிறேன்..
பொங்கல்விழா என் கம்பீரப்பலா…
அடங்காத காளைகளை
அடக்கும் அடங்காத காளைகள்..
பரிசுக்காக அல்ல..எம் பண்பாட்டை
பாரிம்பரியத்தை பாதுகாக்க
எம் வீரக்காளைகளோடு
வீரம் பொங்க ஜல்லிக்கட்டாகிறேன்..
பொங்கல்விழா என் வாழ்வின் கலா..
அண்ணன் தம்பியாய்
சாதியற்ற சமத்துவமாய்
மதங்களை தாண்டிய மனங்களாய்
எப்போதும் இனிக்கும் சர்க்கரைப்பொங்கலாய்
ஊரெங்கும் பொங்கட்டும்..
நாடெங்கும் இனிக்கட்டும்!
– ம.சக்திவேலாயுதம், நெல்லை
உழவைப் போற்றுவோம்..
உழவனைப் போற்றுவோம்..
அரசனோ.. அன்றாடங்காய்ச்சியோ..
உலக உயிர்கள் அனைத்திற்கும்
இன்றியமையாதது உணவே..
பயிர் வளர்த்து மாந்தர்களின்
உயிர் காக்கும் கருணை நீ..
விதைகளோடு வீரத்தையும்
சேர்த்தே விதைக்கிறாய்..
கொடும் மழையோ
கடும் வெயிலோ
முதலில் வாட்டுவது
உன்னையே..
வானம் பொய்த்தாலும்
உன் உழைப்பில் வழியும்
வியர்வை மழையில்
பயிர் செழிக்கும்..
கோபம் கொண்ட கதிரவனையும்
உன் மூச்சுக்காற்று கொஞ்சம்
இளைப்பாற்றும்..
மண்ணின் தன்மை
அறிந்தவன் நீ..
மயக்கங்கள் நிறைந்த
மனிதமனங்களின் தன்மை
அறிய வாய்ப்பில்லைதான்..
விளைகின்ற நிலமெல்லாம்
வீடாகிப்போனாலும்..
ஏரி..குளங்களெல்லாம்
காணாமல் போனாலும்..
நம்பிக்கையெனும் வேர்மட்டும்
உன்னிடமே உள்ளது..
சிதிலமடைந்த பூமிதனை
சித்திரமாக்கும் ஓவியன் நீ..
உன்னால் மட்டுமே
உலகம் அழகாகும்..
உன்னால் மட்டுமே
உலகம் உயிர்வாழும்..
புலர்கின்ற புதுநாளில்
விருட்சங்கள் விண்ணைத் தொடட்டும்..
விவசாயம் மண்ணில் வாழட்டும்..
பயிர் காப்போம்..
நம் உயிர் காப்போம்..
உழவைப் போற்றுவோம்..
உழவனைப் போற்றுவோம்..
– ப்ரியா பிரபு, நெல்லை
அமிழ்தனைய என் தமிழ் கொண்டு,
குறை கூறி யாரையும் வசை பாட மாட்டேன்.
நிறை கண்டுணர்ந்து –
விளை நிலத்தில் சுழன்றாடி ,
விலை மதிப்பற்கரிய சேவை செய்யும்,
உழவன் தான் நம் மானிடத்தலைவன் என,
விழைந்து நிற்கிறேன்!
பைங்கூழ் பேணி-பாரனைத்துக்கும், – uzhavan em thalaivan kavithai
கூழ் ஈந்து பசிப்பிணி தீர்த்து மகிழ்பவன்.
இருந்ததைத்தான் கொடுத்தான் இதிகாச “கர்ணன்”, நீர், நிதி,
இரந்து பெற்று, ஆக்கியதையும்,
அன்புடன் அள்ளித்தந்தவன் இவன்!
ஆம்!உழவன் தான் அவன்!
தலைவனெனத் தகுதி பெற வேறு யாரும் உண்டோ
இத் தரணியில்?
“உண்டி கொடுத்தார் ,உயிர் கொடுத்தார்”-
புறநானூற்று ப்பாடலை,
அகத்திலிருத்தி, அல்லும் பகலும்,
அயராது உழைத்து,
நம் தேவை பூர்த்தி செய்ய,
சேவை செய்யும்,உழவன் நிகர்,தலைவன் யாரையும்,
பாரினில் பார்த்தீரா?
இலாப நோக்கம் ஏதுமின்றி,
அலோபி செயல்வீரன் இவன்,மானிடம்,
சோற்றில் கை வைத்திட -அனுதினமும்,
சேற்றில் கை வைக்கிறான்.
தன்னலமற்ற எண்ணம் கொண்டு,
இன்னிலம் காத்திடும்,
உழவன் தானே தலைவன்?
உரத்துக் கூறிடுவீர்-ஆம் என்று!
பத்தையும் பறக்க வைக்கும் பசி போக்கிட,
சத்துணவு அளித்திடும்,
உழவன் தானே தலைவன்?
பழித்துக்கூற யாருமுண்டோ?
தேவையறிந்து,மானிட,
சேவை செய்யும் உழவன் தான் தலைவன்!
இவன் தவிர,
இவண், தலைவன் யார்?
சீரிய, பண்டைக் கால,நூல்கள் கூறும்,
வீரிய நெறிகளையும் காண்போம்:
சங்க இலக்கியம் ,-சமூக அமைப்பில்,
தங்க நிகர் உழவனை,முதல்வன் என்றது!
மனித இனத்தேருக்கு,உழவன் தான் அச்சாணி,
புனித வார்த்தை கூறினான்,மற்றுமொரு புலவன்!
உரிமையோடு உணவு படைப்பவனே,தலைவன்,
வரிசையில் , அனைவரும் , அவன் பின்னரே!-
மற்றுமொரு கருத்து.
மீசைக்கவிஞனின் ஆசையும்-
உழவுக்கும்,தொழிலுக்கும்,வந்தனை செய்ய!
இந்திய நாட்டின் “கல்ச்சர் ” “,அக்ரிகல்ச்சர்”,-
அந்தநாள் அமைச்சர்,அன்னிய மண்ணில் கூறியது!
விலங்காது,அவனியில், உழவன் புகழ்,
விளங்கி நின்றோங்கிடும்.ஐயமில்லை!
முத்தாய்ப்பாய் ,கன்னலென ஒரு,
சத்தான வார்த்தை!
தெள்ளு தமிழ் குறள் கண்டு,
பள்ளுப்பாடி,முழங்கி,மகிழ்ந்திடிவீர்:
“உழவன் தான் நம் தலைவன்!”
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
– பாரிஸா அன்சாரி
மாரி மழை பெய்யட்டும்..
மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்..
இயற்கை சீற்றம் குறையட்டும்..
இன்பவாழ்வு கிட்டட்டும்..
கதிரவன் தன் அருளாலே, கழனியெல்லாம் நிறையட்டும்..
களவு, கொலை, குற்றங்கள் காணாமலே போகட்டும்..
நீதி, நேர்மை பெருகட்டும்…
நிம்மதி வாழ்வு நிலைக்கட்டும்..
அச்சுறுத்தும் நோய்த்தொற்று,
அகன்று ஓடிப் போகட்டும்..
கரும்பின் இனிமை போலவே,
கன்னியர் வாழ்வு சிறக்கட்டும்..
மஞ்சள்குலை மாண்பினிலே
மங்கலம் தான் பெருகட்டும்..
புதுப்பானை பொங்கலிலே, புத்துணர்ச்சி கிட்டட்டும்…
தைமகள் அவள் வரவினிலே..
தரணியெல்லாம் செழிக்கட்டும்!!!
– தி.வள்ளி, திருநெல்வேலி
1971 ல் பொங்கல்
இரவு வேலை முடித்து படுக்குமுன் பனி தவிர்க்க
தலையில் துணி கட்டி, முன் வீதியில்
நீர்த் தெளித்து பெருக்கி இருக்குமிடமெல்லாம் கோலம் இட்டு
வண்ணப் பொடி தூவி அழகு பார்த்து படுக்க
விடியலில் ஆதவன் வருமுன்னே சென்று
வண்ணக் கோலம் காண்போம்.
எங்கும் புகை மூட்டம் ,பனி அல்ல ரப்பர் எரிப்பு .
புது ஆடை உடுத்தி, கதிரவன் அவனை தொழுது நிற்க
பல் வகை காயுடன், வடை போளியுடன்
உணவு உண்டு, களைப்பாறி மீண்டும்
இரவு வந்திட புது கோலம் போட்டு வண்ணம் தூவி
மறுநாள் பொங்கலை வரவேற்க காத்திருப்போம்.
இளையவர் புது ஆடை உடுத்திட , பெரியவர் கண்டு களித்திட
திறந்த வெளியிடத்தில் சூரியன் சந்திரன் கோலமிட்டு
அக்னி தேவனை பூஜை செய்திட
அடுப்பில் கோலமிட்டு, வெண்கல பானையில் சாம்பல் தடவி
இலையுடன் மஞ்சளை பானையில் கட்டி
புது அரிசியுடன் வெல்லம் சேர்த்து
பொஙகி வரும் பொங்கலை பித்தளை தட்டில் கரண்டி தட்டி
“பொங்கலோ பொங்கல் ” கூவி அழைத்திடுவோம்.
இருபத்தொறு காயுடன் கூட்டும் , வெல்லப் பொங்கலும்
மிளகு சேர்த்து பருப்புடன் பொங்கல் என வகையாக
சாப்பிட்டு , களைப்பாறி, மீண்டும் இரவில் புது
கோலமிட்டு, வண்ணம் . இட்டு
விடியல் காலை கதிரவன் ஏழுமுன் எழுந்து
வெளியே நான்கு மஞ்சள் இலை போட்டு ஏழு
வகை உணவு படைத்து காக்கையரை விருந்துக்கு
அழைத்து வந்தோரை வணங்கி உடன்
பிறப்புகளை காக்க வேண்டி நின்றோம் . பின் வீட்டு
பெண்டிர் தாய் மனை சென்று அவர் வழி உறவுடன்
உண்டு களித்து மகிழந்திட, மூன்று தினங்களும் மூன்று
நிமிடமாய் மறைய கண்டோம்.
2021 ல் பொங்கல்
ஏழு வகை காயும், புது அரிசியும் ,வெல்லமும்
இருந்தது உறவுகளை தவிர .
தனியாய் பொங்கலிட்டு ,காய் வகைகள் செய்து
அந்த ஆதித்தனை வணங்கி , அதை செயலியில்
படம் எடுத்து , வாட்சப்பில் அனுப்பிட, உறவுகளுடன்
காணொளியில் பேசிட பொங்கலும் முடிந்து
போனது ஒரே நாளில் என் அவருடன்.
– அனுமாலா
நெஞ்சுரம் கொண்ட என் தலைவா
எழுந்திரு இக்கணமே…
பொழுது புலர்ந்திட சிறு நேரமே இங்கிருக்க
இப்பொழுதே எழுந்திரு என் கணவா…
இன்னுமா கேட்கல என் அவயம்???
உதட்டருகில் மச்சமுடன் உன் அழகி எதிர்நிற்க
சீக்கிரம் துயிலெழு என் கருத்தவனே…
அக்குரல் அவன் காதில் தான் ஒலிக்க
வெடுக்கென்று கண் விழித்து விம்மியவன்
அவள் கண்களை நோக்க
விடியலிலே இருவருக்குள்ளும் துளிர்த்தது சிறு மோகம்…
நான் குளிச்சு நாளாச்சு…
உன்னுள் இன்னுமென்ன புது மயக்கம்…
வெட்டிவச்ச கரும்பும் வாசலில் தான் கிடக்க,
புதுப்பானை மஞ்சளுடன் பொங்கல் வைக்க காத்திருக்க,
மறைந்திருந்த கதிரவனோ எட்டியெட்டி நமைப்பார்க்க
எழுந்து வா…என் இளங்காளையே…
எல்லாம் மறந்து இன்றாவது ஊர்கூடி தைப்பொங்கல்
இனிதாய் வைப்போம் என்று குலமகள் கூவியழைக்க…
“அடி போடி கிருக்கச்சி”
பொங்கலாவது சுடும் செங்கலாவது
ஏர் உழுது,
நாற்று நட்டு,
நீர் பாய்ச்சி,
களைப்பேதும் எனைத்தாக்காமல் களையுமெடுத்து,
கதிரறுக்க நாள் இனிதே வரும்
என்றே அனுதினம் காத்திருந்தேன்….
எதிர்பார்த்திருந்த அந்நாளும் கூடி வர அத்தனை ஆவலாய்
விளைந்திருந்த என் கண்மணிகளான நெல்மணிகளை
முகத்துடன் வாரியணைத்து
எழும் வாசமதை நான் நுகர
எங்கிருந்தோ ஓர் மழைத்துளி மூக்கின் நுனியில் தான் விழுக
வானை அண்ணாந்து பார்க்கிறேன்…
விறுவிறுவென மழைத்துளிகள் பன்மடங்காய் கீழ்விழுக,
என் அத்தனை நெல்மணிகளும்
நிலம் நோக்கி தான் சரிந்து, – uzhavan em thalaivan kavithai
ஒவ்வொன்றாய் நீரில் மூழ்கி தான் இறக்க,
அவைகளை காப்பாற்ற வழியின்றி நான் தவித்து
என் நிலம் போலே
கண்களும் குளமாகி
மழையோடு மழையாய் என் கண்ணீரும் கரைந்து,
அத்தனையும் இழந்து என அவன் தொடர…
தன் பூவிதழ் கரங்களால் அவனது வாய் மூடி
போதுமய்யா நம் புலம்பல்கள்…..
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று மட்டும் மனம் நிறுத்தி
ஊர் கூடி பொங்கல் வைப்போம்…
“உழவில்லையேல் உணவில்லை”
“உணவில்லையேல் இவ்வுலகம் இல்லை”
என் உழவனே
உனை நம்பியே நானும், இவ்வுலகத்தின் பசியும்…
எழுந்து வா…
என் சூரியனே… என்றாள் மீண்டும் குலமகள்…
– அர்ஜுன் பாரதி
பொங்கல் கவிதைகள் அனைத்தும் அருமை…வாழ்த்துகள் அனைவருக்கும்…
அனைத்து கவிதைகளும் மிக அருமை
கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.. கவிதைகள் அனைத்தும் அருமை.. உழவின் பெருமை கூறும் அனைத்து வரிகளும் மனதில் நின்றன.
சிதிலமடைந்த பூமிதனை
சித்திரமாக்கும் ஓவியன் நீ..
உன்னால் மட்டுமே
உலகம் அழகாகும்..
உன்னால் மட்டுமே
உலகம் உயிர்வாழும்..
ப்ரியா பிரபு அவர்களின் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.