வெண்ணிலா குறுங்கதை
சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நெகிழ்ச்சியான சிறுகதை – வெண்ணிலா குறுங்கதை
கொடும்பாளூர் இளவரசி வானதி, சோழ அரண்மனையின் பின்பக்கம் இருந்த நந்தவனத்தை நோக்கி சுற்றும்முற்றும் பார்த்தவாறே மெல்ல நடந்தாள்.வெண்ணிலா இந்நேரம் வந்திருப்பாள்..வெண்ணிலா மட்டுமே அவளுடைய ஒரே தோழி. அவளிடம் பேசும்போது தான் மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது…தன்னை புரிந்து கொண்டவளும் அவள்தான் என்று நினைத்தவாறே நடந்தாள் நந்தவனம் நோக்கி
“வெண்ணிலா! நான் வர சற்றுத்தாமதமாகிவிட்டது.இளவரசர் வருவதால், அரண்மனையே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது… உனக்கு தெரியுமா… எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, இந்த நந்தவனத்து ஓடைக்கு உன்னிடம் பேச வருவதற்குள் எவ்வளவு சிரமப்பட்டுப் போகிறேன் தெரியுமா?”
“தெரியும் மகாராணி!”
“என்னடி…திடீரென்று என்னை மகாராணி ஆக்கிவிட்டாய்…நீ என் ஆத்ம சினேகிதி … ‘வானதி’ என்று பெயர் சொல்லி கூப்பிட சொன்னால் அதைத்தான் கேட்க மாட்டேன் என்கிறாய், இப்பொழுது என்ன மகாராணி என்கிறாய்.”
“தேவி! தாங்கள் கொடும்பாளூர் இளவரசி. கொடும்பாளூர் அரசர் பெரிய வேளாளரின் செல்வப்புதல்வி. உங்கள் சித்தப்பா சின்ன வேளாளரின் அருமை வளர்ப்பு மகள்,சோழ இளவரசி குந்தவை தேவியாரின் அருமை தோழி … எல்லாவற்றிற்கும் மேலாக சோழநாட்டின் கண்ணான இளவரசர் அருள்மொழிவர்மரின் உள்ளம் கவர்ந்த கள்ளி. ஒருவேளை இளவரசர் மகாராஜா ஆகிவிட்டால், பின்னர் தாங்கள் மகாராணி தானே… அதான் இப்பொழுதே அப்படி கூப்பிட்டேன்” என்றாள் வெண்ணிலா.
“அடியே..இளவரசர் ஒருக்காலமும் மகாராஜாவாகப் போவதில்லை. நானும் சோழநாட்டின் மகாராணி இல்லை… நாங்கள் இருவரும்… ஒருவேளை அவர் என்னை திருமணம் செய்து கொண்டால்… கடல்கடந்து எங்காவது சென்று விடுவோம். “
“ஐய்யோ தேவி! சோழநாட்டின் கண்ணை கடத்திக்கொண்டு போவேன் என்று சொல்கிறீர்களே!”
“ஏய் வெண்ணிலா… நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு என்னிடம் அன்பாக இருப்பதால் உன்னை மட்டுமே என் தோழியாக நினைக்கிறேன். நீயும் நான் சொல்வதைக் கேட்காமல் ஏதேதோ சொல்லி என்னைக் கேலி பண்ணுகிறாய்.” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வானதி.
“சரி! சரி! தேவி கோபித்துக் கொள்ளாதீர்கள்! இவ்வளவு காதலை சோழ இளவரசர் மேல் மனதிற்குள் வைத்திருக்கும் தாங்கள் அதை ஏன் வெளிப்படையாக அவரிடம் சொல்லக்கூடாது. அவருடைய சகோதரி குந்தவைப் பிராட்டியாரின் மனம்கவர்ந்த தோழி அல்லவா நீங்கள்? உங்களுக்கு சொல்லுவதற்கு எல்லாவித உரிமையும் இருக்கும்போது ஏன் உங்கள் காதலை அவரிடம் சொல்லக்கூடாது?”
“அது மட்டும் என்னால் முடியவே முடியாது வெண்ணிலா. நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதையெல்லாம் அவர் முகத்தை பார்த்ததுமே மறந்துவிடுகிறேன். இவ்வளவு ஏன்? அவரை தள்ளி இருந்து பார்த்தாலே என் மனம் படபடக்கிறது… நாக்கு உள்ளே இழுத்துக் கொள்கின்றது… கண்கள் சொருகி விடுகிறது… இதில் நான் எப்படி என் மனதின் காதலை அவரிடம் தெரிவிப்பேன்.”
“இளவரசி! நான் ஒன்று சொல்வேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்…”
“சொல்லுடி! நீ என்னத்தை புதிதாக சொல்லப் போகிறாய்… ஏற்கனவே அரண்மனையில் இருக்கும் மற்ற சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லோரும் என்னை பார்த்து பரிகசித்து சிரித்து பைத்தியக்காரி என்கிறார்கள்”.
“அம்மா! வருத்தப்படாதீர்கள்! நான் சொல்ல வந்ததும் அதுவே! மற்ற சிற்றரசர் வீட்டு இளவரசிகளுக்கு இளவரசர் மேல் ஒரு கண். சோழநாட்டின் பிரியத்திற்குரியவர் அல்லவா?. அவரை மணந்து கொண்டால், தங்களுடைய செல்வாக்கும் தங்கள் நாட்டின் செல்வாக்கும் உயரும் என்பதால் அவரை வளைத்துப் போட பார்க்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை சொல்லாமல் வைத்திருந்தால் அது அவர்களுக்கு வசதியாக போய்விடும் …இளவரசர் சீக்கிரம் ஈழத்திற்கு கிளம்ப போகிறார் அவர் அங்கு போவதற்கு முன்னால் உங்கள் மனதை அவரிடம் திறந்துக் காண்பித்துவிடுங்கள் இளவரசி” – வெண்ணிலா குறுங்கதை
“அது மட்டும் என்னால் முடியாது…அது மட்டும் என்னால் முடியாது …”
“வானதி! யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் ? தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறாயா?..உன்னைக் காணாமல் அரண்மனை பூராவும் தேடிக்கொண்டிருக்கிறேன்.மற்ற பெண்கள் உன்னை பரிகசிப்பது சரியாகத்தான் இருக்கிறது.” என்று செல்லமாக கடிந்து கொண்ட குந்தவை நாச்சியார்,வானதியை அன்புடன் அணைத்துக் கொண்டார்.
வெட்கத்தில் தலை கவிழ்ந்த வானதி” ஒன்றுமில்லை அக்கா சும்மா பாடிக் கொண்டு இருந்தேன் கொஞ்ச நேரம் ” என்று சமாளித்தவள் பின் அவருக்கு தெரியாமல் ..
மனதிற்குள்
“அக்கா! உங்களுக்கு தெரியாது வெண்ணிலா என் மனதில் உள்ளவற்றை சொன்னால், இந்த பெண்களைப் போல் சிரிக்க மாட்டாள்”.
அடியே! வெண்ணிலா நான் அரண்மனைக்கு கிளம்புகிறேன்… அக்கா வந்துவிட்டார்கள்.. நீ தேய்ந்தாலும், ஒளிந்தாலும், எங்கேயும் போய் விடாதே… நாளைக்கும் இதே நேரம் உன்னுடன் பேச வருவேன்… “என்று மானசீகமாகக் கூறிக் கொண்டாள்.
விண்ணில் காய்ந்த வெண்ணிலவு கள்ளமில்லா அந்தப் பெண்ணிலவைப் பார்த்து கண்சிமிட்டியது..
– தி.வள்ளி, திருநெல்வேலி