விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai

vidiyal vibaram kavithai

சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,
கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,
உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,
கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்…

இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,
எமையாளும் வண்ணமென எழுந்து வந்து பார்த்திருக்க..
நமையாளும் விடியலென நல்லோர் உரைத்தபடி,
சுமையில்லாப் பொழுதாகி சுகராகம் இசைக்கிறதே…

வளர்பிறையின் முதற்புள்ளி வாசமென நிறைந்திருக்க,
தளர்வில்லா மனத்திரையில் தவக் கனவு விரிந்திருக்க,
களமாகும் அகத்திரைக்குள் காரியங்கள் அணிவகுக்க,
வளமாகும் வாழ்வுக்கே வந்துதித்தாள் வெள்ளியிங்கு..

வித்திட்ட வேள்விக்குள் விளைந்திட்ட வெள்ளிப்பூ,
முத்தான முதலாகி முழுக்கனவின் நனவாகி,
எத்தினமும் இல்லாத எழிலான திருமுகமாய்,
இத்தினத்துள் வந்தாளே.. இதயத்து நறு மலராய்… – vidiyal vibaram kavithai

நவமான இரவுக்கு நல்லதொரு துவக்கமென,
தவமாகும் விடியலிங்கு தலைநிமிர்ந்து முகம்நோக்க,
அவதார நோக்குடனே அன்னையிவள் வந்திடவே,
சிவமிங்கு சக்தியாக சீர்திருத்த விடியல் இங்கு…

கார்கால மழைபோல காத்திருந்த மனங்குளிர,
போர்க்காலப் புதுவரவாய் பூத்திருக்கும் விடியலிங்கு,
தேரேறி வந்ததினால் திருவீதி திரு விழாவாய்,
ஊரெல்லாம் வாழ்த்திடவே உயர்விடியல் ஆனதிங்கே…

You may also like...

5 Responses

  1. Kavi devika says:

    கவிதை வரிகள் அருமை.வாழ்த்துகள்

  2. Rajakumari says:

    கவிதை நன்றாக இருக்கிறது

  3. பொய்யாமொழி says:

    நன்றாக எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்

  4. தி.வள்ளி says:

    கவியின் வரிகள் கார்கால மழை போல மனதை குளிர்வித்தது பாராட்டுக்கள் ..

  5. J.MEHALA DEVI says:

    விடியலில் விழிப்பற்கு முன் கவிதைவிடியலைக் கண்டுதான் துயில் எழுகிறேன். 1500 அதற்கும் மேல் விடியல் கவிதை காண காத்திருக்கும் உங்களருமை வாசகி.