கவிதை தொகுப்பு – 33
இந்த வார கவிதை வெள்ளியில் அன்புத்தமிழ் அவர்களின் “மண்ணின் மைந்தர்கள்”, ப்ரியா பிரபு அவர்களின் “காதலால்”, கவி தேவிகா அவர்களின் “மதுரமோகனன்” மற்றும் மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “தடங்கள்” ஆகியவை இடம்பெற்றுள்ளன – kavithaigal thoguppu 33.
மதுரமோகனன்
அம்மான் மைந்தனே!!!!
அலங்கார ப்ரியனே!!!!!!
அன்பெனும் மனக்கடலில்
அழகுதுயில் கொண்டவனே!!!!!!
சோகத்தை மறக்கிறேன்
இதழ்மொழி இன்னிசையில்!!!!!
துன்பத்தைக் கடக்கிறேன்
மலர்முக புன்முறுவலில்!!!!!
விழிநீர் துடைக்கிறேன்
விளிக்கின்ற வார்த்தைகளில்!!!!
புத்துணர்வு பெறுகின்றேன்
புலம்பனின் புலரியில்!!!!!
எப்பொழுதிலும் எந்நேரமும்
எனையகலாத என்மனத்துணையானே!!!!!
ஆசுவாசபடுத்தி ஆட்கொண்ட
ஆதிகேசனான ஆருயிரே!!!!
மீண்டும் மீண்டும்!!!!!!
துன்பங்கள் இப்பிறவியில்!!!!???
வேண்டும் வேண்டும்!!!!!!
உன் நிழலடியில் நிலைத்திருக்க…..
உந்தன் நினைவுகள் நீங்காதிருக்க……
இப்படிக்கு… ஆருயிர் கோபிகை – kavithaigal thoguppu 33
– கவி தேவிகா, தென்காசி
தடங்கள்
வாழ்க்கை வகிடெடுத்து
அழகாக்கியது என்னையும்
உன் பிஞ்சு
விரல்பிடித்து நடந்த
பிரபஞ்ச நாட்களில்…!
உன்
வருகைக்கு
பின்னால் உணர்ந்தேன்…
வானமும் விரலிடுக்கில்
வசப்பட்டதாய்..!
ஆறாத துயருக்கும் அருமருந்தாய்
இப்பொழுதும்…
இருக்கிறது…
இதழ் குவித்து பரிசளித்த
எச்சில் ஒத்தடங்கள்…!!
நடைபயிலும்போது
பிடித்த கை
தளர்த்த முடியவில்லை
இன்னமும்…
நம்பிக்கையின்
வேர்கள்
உனக்குள்
புதைந்திருப்பதால்…!!
கர்வப்படுகிறேன் இப்போதும்
கடந்துபோன
காலங்கள்…
உன்
கால் கொலுசு
ஓசையில் புதுபிக்கப்படுவதால்.!
– குடைக்குள் மழை சலீம்
காதலால்..
சலனமற்று
இருந்தது நதி..
பெருங்காற்று கடந்த போதும்
பேராழி கலந்த போதும்
அசைவுகளில்லை
ஆர்ப்பரிப்பில்லை
மோனத்திலோ
தியானத்திலோ
ஆழ்ந்திருந்தது..
உனது பிம்பத்தின் நிழல்
விழும் வரை..
பிம்பம் பட்டு
சிதறிய நீர்த்திவலைகள்
உன் நினைவுகளாய்
சுழலுகிறது..
தன்னுள்
சுழன்று சுழன்று
நதியையே
உள்ளிழுக்கப் பார்க்கிறது..
தன் போக்கில்
போகும் நதியை
உன் போக்கில்
இழுத்துப் போகிறாய்
தன்னையே.. தான்
மறந்து சுழன்று
உன்னுள் புதைந்து
நதி மாறிய வினோதம்
உன்னால் மட்டுமே
நிகழ்த்தக் கூடும்..
சலனமற்று
இருந்தது நதி..
உன் பிம்பத்தின் நிழல்
விழும் வரை..
– ப்ரியா பிரபு, நெல்லை
மண்ணிண் மைந்தர்கள்
பூமித்தாயும்
உங்களால் தான்
சுவாசம் கொள்கிறாள்
ஓரளவிற்காகவாவது
எம் தூய்மை பணியாளர்களே
காலையில் உங்கள்
கால்படாவிட்டால் இவ்விடம்
ஒருகாலும் படாமல் போகும் அத்தனை அசிங்கங்களும்
ஓரிடத்தில் மலைக்குவியலாய்
தன்னிடத்தை அசிங்கம் செய்தவன்
கூட அலட்சியமாய் செல்லும் வேளையில்
தன் வாழ்வை அழித்து பிறர் வாழ வழிசெய்யும்
தெய்வங்கள் நீங்கள் – kavithaigal thoguppu 33
உங்கள் வறுமைக்காய்
இந்த வேலை செய்ய வந்தீர்கள் ஆனால்
இந்த வேலையே என்றும் சேவையாய் செய்கிறீர்கள் உங்களை
அறியாமலேயே
உங்களையும் தன் போன்று
மனிதரென நினைக்காத மனங்கள் இங்குண்டு
ஆனால்…
அதே மனிதஇனம் உங்களை
நடமாடும் தெய்வமென
கொண்டாடுகிறது இன்று
நீங்கள் இல்லையேல்
இந்த பூமி என்றோ புதைந்திருக்கும்
இந்த மதிகெட்ட மனிதர்களால்..!!??
நீங்களே இம்மண்ணின் மைந்தர்கள்
எம் தூய்மை பணியாளர்களே..
– இரா.அன்புதமிழ்
அனைத்து கவிதைகளும் அருமை..ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தில் ரசனைக்கு விருந்து..
எல்லா கவிதைகளும் மிகவும் அருமையn க இருந்தது
நால்வரின் கவிதைகள் சொற்பதம் அருமை