பொது கவிதைகள் தொகுப்பு – 21
நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், ஒருங்கிணைந்த கவிதை தொகுப்பு – kavithai thoguppu spb vali

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
உதிர்த்த வார்த்தைகளால் கேட்போர் உள்ளத்தில் அந்த உணர்வுகளை உதிக்க வைக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தக பாடகர்களின் மிகச்சிறிய பட்டியலில் நீண்ட காலம் முதலில் இருப்பவர்!… – kavithai thoguppu spb vali
பெண்ணல்ல பெண்ணல்ல
ஊதாப்பூ ஒலித்ததும்
நாங்கள் பூவின் வாசத்தை நுகர்ந்ததுண்டு!…
மேகம் கொட்டட்டும்
மின்னல் வெட்டட்டும்
ஒலித்ததும் நாங்கள் மழைச்சாரலில் நனைந்ததுண்டு!…
மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் ஒலித்ததும் நாங்கள் காதல் உணர்வில் மிதந்ததுண்டு!…
ஒவ்வொரு இந்தியனின் கண்ணீர் காதல் கோபம் ஏக்கம் மகிழ்ச்சி துன்பம் அத்தனை உணர்வுகளுக்கும் அருமருந்தாய் ஆறுதலாய் பல்லாயிரம் பாடல்களில் ஒலிக்கும் ஒரு குரல்!…
எளிய உருவத்தால்
நமது கண்களிலும்
இனிய பாடல்களால்
நமது காதுகளிலும்
உயர்ந்த குணத்தால்
நமது இதயங்களிலும்
என்றும் வாழும்
நம்மில் ஒருவர்!…
வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்ல வள்ளுவனுக்கு 1330 குறள்கள் தேவைப்பட்டன.. இவருக்கு ஒரு குரல் போதுமானதாய் இருந்தது!…
எஸ்ஆர்கே என்றேன்
மும்பை திரும்பியது
என்டிஆர் என்றேன்
ஆந்திரா திரும்பியது
எம்ஜிஆர் என்றேன்
தமிழ்நாடு திரும்பியது
இந்தியாவே
திரும்பியது
எஸ்பிபி என்றதும்!…
– பிரவீன், அவிநாசி
இன்றைய வாழ்வு
இன்றைய(கொரோனா) வாழ்வு
பனித்திரை விலகி – மெல்ல
நித்திரை தொலைத்து
முகத்திரை போர்த்த – நல்
விடியலும் வந்ததே
யார்த்திரை கிழித்தேயாயும்
திரை ஈட்டும் நாளாயன்றி
வான்திரை ஓயும் முன் – செம்
மாந்தனாய் பொருளையீட்டி
கனல் செந்திரை மூட்டும் மாலை
கனிவோடு வீடடைந்து
மென்திரை மேகம் விலக்கி
பால்நிலவோடு உறங்கு பளிங்காய்…
பி.கு “திரை – வெவ்வேறு பொருளில்”
– பொய்யாமொழி.பொ, தருமபுரி
மூச்சின் இறுதிநொடிவரை
நான் நடந்த திசைகளின் பாதைகளில் துணையில்லாத
என் தனித்த பயணங்கள்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறுமை மட்டுமே
என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது
தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்ற
காலங்கள்கூட என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்
கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு கடினமான
அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்
உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின
சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது
என் நிழலில் அமர முயன்று தோற்றுப் போனேன்
கொதிக்கும் சூழலில் வெந்து போனது என் பிஞ்சு மனமுந்தான்
என் உடலினை என் கால்களே சுமந்தாலும் மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்
கண் வழி நீரூற்றி ஆறுதல் சொல்லின பணமும் குணமும்
வெகுதூரத்திலுள்ள எதிரிகளாய்த் தெரிய
உறவுகள் எல்லோரும் என்னருகே அன்பாய் இருப்பதுபோல்
வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்
அநாதை என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு உண்மையான
ஒரு அன்புக்காய் மட்டும் யாசிக்கின்றேன்
இது கவிதை சொல்லும் கவிதையல்ல
கற்பனைகளின் கதையுமல்ல
என் தனிமை எனும் கொடுமைக்குள்
எல்லைதாண்டிய சிறைவாசம்
ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கின்றது
என் தனிமையின் வரிகள் விடுதலைக் கவியெழுத
தொடரட்டும் வலிகள் என் மூச்சின் இறுதிநொடிவரை
– நவீன், ஈரோடு
நான் எழுத நீ பாட
இரண்டெழுத்தில் உருவான சகாப்தம் அவர்..
கண்ணதாசன் என்ற காட்டாற்றில் எதிர்நீச்சல்
போட்டு வந்த பெருவெள்ளம்..
வலி நிறைந்த மனங்களுக்கு மலிவு விலை
மருந்து கொடுக்க வந்த மகாகவி..
வெத்தல பாக்கு வெண்ணிற தாடி உருண்டு சிவந்த ஸ்ரீரங்கவாடி..
அவர் வரிகளிலே வாயடைத்து நிக்க வெச்சார்..
மக்களிடம் நற்கருத்தை கொண்டு சேர்த்து திக்க வெச்சார்..
பல சமயங்களில் குசும்பு பேசி கொஞ்ச வெச்சார்..
வார்த்தைகளிலே வர்ணஜாலம் வெச்சார்..
அத பாடிக்காட்டி இன்னொருத்தர் தாளம் போட வெச்சார்..
அவர் தெலுங்கில் இருந்து வந்த தென்றல் காற்று..
தேடினாலும் கிடைத்திடாத இன்னிசைப்பாட்டு..
கனீர் குயிலோ மெல்லிசை மயிலோ,
மெய்மறக்க வைக்கும் கடவுள் தூதுவன்..
சூழலுக்கேற்ப சுருதியை மாற்றும்,
மனதை ஆட்டுவிக்கும் மந்திரகாரன்..
நாவில் தவலும் தமிழுக்கு தடையில்லாத தந்திரகாரன்..
இவர்களை தமிழ் கண்டெடுத்த கலங்கரை விளக்கு..
என்றைக்கும் பேசும் அற்புத படைப்பு..
– மணிகண்டன் சுப்பிரமணியம்
அனைத்தும் அற்புதமான படைப்புகள்..
அனைவருக்கும் வாழ்த்துகள் 🎊
வாழ்த்துகள் அனைவருக்கும்
அனைத்து கவிதைகளும் அருமை.. எதைச் சொல்ல எதை விட..தேன் பருகிய வண்டானோம்…நன்றி நீரோடைக்கு
Superb
All poetry very nice .but especially special thanks to mr.praveen-Avinasi,His poetry for Honarable SPB impressed me so much.Thanks to mr.praveen.All the best sir
அருமையான கவிதைகள்
அர்த்தமுள்ள வரிகள்
அருமையான சொற்கள்
அனுபவம் மிக்க கவிஞர்கள்
அனைத்து கவிஞர்களும்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
என்றும் அன்புடன் ஈரோடு நவீன்