தாய் மனது – தியாகத்தாய் சிறுகதை
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “தாய் மனது”, இப்படி ஒரு மாமியார் மருமகள் என சுவாரசியமாக நகரும் கதைக்களம் – thaai manasu sirukathai
மணி பத்தாகிவிட்டது. கதவை பூட்டி, விளக்கை அணைத்துவிட்டு, உள் கதவைப் பூட்டும்போது ரஞ்சனி, தன் மாமியார் தன் அறைக்குப் போய் விட்டதை கவனித்தாள். முன் அறை விளக்கை அணைத்து விட்டு, இருட்டில் கண் மூடி படுத்து கிடக்கும் கணவனை பார்த்தபடி சப்தமில்லாமல் படுத்தாள்.
மறுநாள் காலை விடிந்தது. அவரவர், அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.விரும்பப்படாத கனத்த மவுனம் அவர்களிடையே நிலவியது. அரவிந்த் ஆபீஸ் போய்விட்டான். அஞ்சலியும் அவள் மாமியார் கனக வல்லியும் வீட்டு வேலைகளில் மூழ்கினர் – thaai manasu sirukathai.
மாலை அரவிந்த் வந்ததும், டிபன், காபி ,கொடுத்து விட்டு, கனகவல்லி அவனருகில் அமர்ந்தாள். மகனைப் பார்த்து,”அரவிந்த்! கோபப்படாதே. அம்மா நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவை எடுத்தேன்.” என்று ஆரம்பித்த உடனேயே அரவிந்த் கோபத்தோடு ரூம் கதவை படாரென்று அடைத்துக்கொண்டு, உள்ளே போய் விட்டான்.
முதியோர் ஓய்வு இல்லம்
அஞ்சலிக்கு கஷ்டமாக இருந்தது. மாமியாருக்கும் கணவனுக்குமிடையே திண்டாடினாள். கனகவல்லியும் விடவில்லை. பத்து நாட்கள் திரும்பத்திரும்ப பேசி, மகனை ஒரு தன் முடிவுக்கு ஒப்புக்கொள்ள வைத்தாள். அந்த மாத கடைசியில் நல்ல வசதிகளுடன், நன்றாக நடத்தப்பட்ட, அந்த முதியோர் ஓய்வு இல்லத்தில் அரவிந்த் அம்மாவை கொண்டு வந்து சேர்த்து விட்டான். கண்கள் சிவந்து கலங்க …அம்மாவை விட்டுவிட்டு… விடுவிடுவென சென்று காரில் ஏறினான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அவன் ஓவென அழுது விடுவானென அவனுக்கு தெரியும் .
அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் முதியோர் ஓய்வு இல்லத்தில் சேரவேண்டும் என்ற தன் முடிவில் ஏன் பிடிவாதமாக இருந்தாள், என்பது அன்றுவரை சத்தியமாக அவனுக்குப் புரியவில்லை.
“மாதம் ஒன்றாக, கனகவல்லியிடன் நன்றாக பழகி விட்ட, இல்லத் தோழி ரங்கநாயகி அம்மாள், கனகவல்லியிடம்,” அம்மா! எங்க பிள்ளைங்க எல்லாம் எங்கள கவனிக்க தயாரா இல்லாம இங்கே கொண்டு வந்து விட்டிருக்காங்க! ஆனா உங்க பிள்ளை அரவிந்த் உங்க மேல பாசத்தை பொழியறாரு அப்புறம் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றார்.
முதல் கடமை
கனகவல்லி தன் தோழியைப் பார்த்து, “ரங்கநாயகி அம்மா!என் பிள்ளை என் மேல ஓவரா வச்சிருக்கற பாசம் தான் என்னை இந்த முடிவை எடுக்க வைத்தது. அஞ்சலி பாவம் சின்னப் பொண்ணு! அப்பா ,அம்மா எல்லாம் ஊர்ல இருக்காங்க. அவ எங்களை நம்பி வந்த பொண்ணு… அவள சந்தோஷமா வச்சுக்க வேண்டியது எங்க கடமை… – thaai manasu sirukathai
ஆனால் அரவிந்த் எனக்கு ஒரே பிள்ளை. ஓவரா பாசத்தை கொட்டி வளர்த்திட்டேன் அவனும் என் பேர்ல உயிரா இருக்கான். அவன் அப்பாவும் இல்லாத நிலையில் என்னை பார்த்துக்கொள்வதே தன் முதல் கடமையாக நினைக்கிறான்.எல்லா விஷயத்திலும் எனக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். அதனாலேயே அவன் அஞ்சலியை காயப்படுத்திடுறான். சமையலிலிருந்து எல்லாத்துலயும் என்னை புகழும்போது பாவம் அஞ்சலி முகம் வாடி விடுகிறது.
குடும்ப வாழ்க்கை
எந்த முக்கிய முடிவும் என்னை கேட்டுதான் எடுக்கிறான். அது இன்னைக்கு எனக்கு இதமா இருக்குது. ஆனா நாளடைவில் அவன் மனைவிக்கும் அவனுக்குமிடையே விரிசல் விழுந்திடும். இன்னைக்கு பாசமா இருக்கிற அஞ்சலி, போகப் போக என்னை எதிரியா பாக்க ஆரம்பிச்சுடுவா. நான் அவனை விட்டு தள்ளி நின்னாத்தான் அவன் குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருக்கும். எனக்கும் அவனைப் பிரிஞ்சிருக்கிறது வருத்தமாத்தான் இருக்கு. இருந்தாலும் மனதை கல்லாக்கிட்டுத்தான் இந்த முடிவை எடுத்தேன்ம்மா” என்று கண்கலங்கி கூறினார்.
ரெங்கநாயகி அம்மாவுக்கு கனகவல்லியின் வார்த்தைகளிலிருந்த உண்மை புரிந்தது. கூடவே தாய்மையின் உன்னதமான உயர்வு பெருமிதம் கொள்ள வைத்தது. ‘பெண்ணுக்கு பெண்ணே எதிரி’ என்று சொல்லும் வார்த்தையை பொய்யாக்கி விட்டார் கனகவல்லி அம்மா என்று நினைத்துக்கொண்டார் ரங்கநாயகி அம்மாள்.
– தி.வள்ளி, திருநெல்வேலி
ஆஹா நல்ல கதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை.
கதையை படித்து நெகிழ்ந்து விட்டேன். இந்த காலத்திலும் இப்படியொரு மாமியாரா? என்று… அம்மாவாக…. சிறப்பு.. வாழ்த்துக்கள் வள்ளி அக்கா
அருமை
தாய் மனசு யாருக்கு வரும்………
கதை நன்றாக இருக்கிறது.. வாழ்த்துகள் 💐
Very nice emotional story.
கதை மிகவும் உருக்கமாக இருக்கிறது
மிக்க நன்றி நண்பர்களே…
மனதை விட்டு நீங்காத கதை