இலையுதிர் நிர்வாணங்கள்
தாபாலில் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள் தன் கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்த இலையுதிர் நிர்வாணங்கள் கவிதை தொகுப்பிற்கான விமர்சன உரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன் – கோவை சசிகுமார் – ilaiyuthir nirvaanangal vimarsanam
இவ்வுலகம் இனிது,
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது,
தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, ஞாயிறு நன்று, திங்களும் நன்று, வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன,
மழை இனிது, மின்னல் இனிது, கடல் இனிது, மலை இனிது, காடு நன்று – என நம்மிடையே நம்பிக்கை விதைத்தார் பாரதி மகாகவி. ஆனால் தம்மை காத்து, பயணித்த ஐம்புலன்களுக்கு மனிதர் செய்த கைமாறு என்ன? சுற்றுப்புற சூழலை, எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவும் அழிச்சாட்டியமாய் செய்தோம்!
அணு வேதிக் கழிவுகளை நீலக்கடலில் கொட்டி, கடல் உயிரிகளை கொன்றோம் ஏரியாய்…. குளமாய்…. ஆற்றுப்படுகைகளாய் இருந்த இடங்களை வீட்டுமனைகள் ஆக்கி விலை சொல்லி விற்கிறோம்.
மனிதர் செய்யும் தவறுகள் காரியங்கள் சூழலியல் பாதிப்பை உருவாக்கி சக மனிதருக்கு தொல்லை துன்பங்களைத் தருமெனத் தெரிந்தும் தொடரகிறானே…..
அவன் தான் மனிதன்.
மூன்றாவது தொகுப்பு
இத்தகைய சூழலில்தான் கோவை சசிகுமார் சூழலியல் கவனமேற்படுத்தும் கவிதைகளை தொகுப்பாக்கி இலையுதிர் நிர்வணங்கள் என்ற நூலை வாசகர் கரங்களில் வழங்கியிருக்கிறார்
சசிகுமாரின் மூன்றாவது தொகுப்பு இந்நூல்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிடும் 43வது நூல் என்ற பெருமிதத்தை தாங்கிவரும் தொகுப்பிது. நல்லது நாமிப்போது கவிதைகள் குறித்து பேசுவோம்.
இந்த தொகுப்பை சூழலியல் சார்ந்த கவிதைகள் மற்றும் இதர கவிதைகள் என இரண்டாகப் பிரிக்கலாம். இங்கே சுழலியல் சார்ந்த கவிதைகள் குறித்து விவாதிப்போம் காரணம் இன்றைய மாசடைந்த சூழலில் சூழலியல் அக்கறை ஒவ்வொரு படைப்பாளிக்கும் தேவைப்படுவதும் அவர்தம் பொறுப்பும் ஆகும்.
தென்னைக்கும் வாழைக்கும் தெரியாமல்
நிலமட்ட நீரும் வற்றி போகும்
வன்மத்தில் கானகமழிந்து கான்கிரீட் காடுகளாக்கும் மனிதவளம் பற்றி……..
பாவம் அப்பாவுக்குத் தெரியவில்லை
என தந்தை என்ற குறியீட்டின் வழியாக வெள்ளந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர் இத்தொகுப்பையும் தன் தந்தைக்கே சமர்ப்பித்திருக்கிறார்.
கரையின் இருபுறமும் வேர்விட்டு நடக்கும் நதியின் குழந்தைகளான மணலை, பொக்லைன் என்னும் எந்திரங்கள் வாரி இறைக்க ஒரு நீருயிரியின் குரலால் பூமிக்கான செய்தியை பதிவு செய்வது சிறப்பு.
நான் கருவாடாவதில் கவலையில்லை
சிரித்துக் கொண்டிருந்த பூமியை என்னை போல் ஆக்கி விட்டாயே மனிதா
என்பதில் மெல்ல துடித்து அடங்கியது
நீரற்ற மீனின் சடலம்.
தரு வளங்கள் வெட்டி சிதைக்கப்படும் காட்சியை இருவேறு காட்சிகளை இணைப்பதன் மூலமாக புதிய காட்சியொன்று வாசகனுக்கு புலனாகிறது.
மரங்களடர்ந்த வனத்தில் பாதையின்னும்
வெறுமையாகவே இருக்கின்றது பார்க்கும் விழிகளெங்கும் நிரம்புகின்றன
வெக்கையின் ஒளிக்கற்றைகள்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆற்றின் ரத்தம் உறிஞ்சப்படுவதை கண்டிப்பவரின் சோக வரிகளிவை.
சலசலக்கும் ஓடையில் தாகம் தீர்த்த
கூலாங்கற்கள் தண்ணீரின்றி கதறுகின்றன
வனத்தினைக் கொன்று வன்மத்தில்
கிளையொடித்து இறக்கும்
ஒவ்வொரு இலைச்சருகும் பெரும் சாபமொன்றை உதிர்த்து விட்டுதான்
பச்சையமிழக்கின்றன
அந்த சாபத்தின் ஒற்றைவரி இதுதான்
ஓசோனை ஓட்டையாக்கி நீங்களும்தான்
ஓர்நாள் பற்றியெரியப் போகிறீர்கள்
அப்படியோர் சூழல் வராமல் காப்பது மானுடரின் மனதில், செயலில், சிந்தனையில் தானிருக்கிறது என்பதை பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன
சிறந்த கருத்துக்களை பொட்டலமாகக் தருகையில் சொற்சிக்கனத்தையும் கவிஞர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல கவிதைகளில் தேவையற்ற சொற்கள் பத்திகள் துருத்திக் கொண்டிருப்பது வாசக தடை.
வாக்கியங்களை இன்னமும்கூட செய்திக்கு சுருக்கியிருப்பின் இன்னும் சிறந்த கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும் என்கிற ஆதங்கம்தான், என்றாலும் திசை தெரிந்த அம்புகளால் தம் கவிதைகளைச் செலுத்தும் சசிகுமாரின் இத்தொகுப்பு வாசிப்பவர் கவனத்தை ஈர்க்கும்; வெல்லும் – ilaiyuthir nirvaanangal vimarsanam
– அன்பாதவன்