ஆனி மாத பதிவு
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021
நீரோடை பெண் – நூல் மதிப்பீடு
நீரோடை பெண்… கவித் தென்றல் மகேஷின்… மயிலிறகாய் மனதை வருடும் கவிதைகளின் தொகுப்பு…
ஈன்றெடுத்த அன்னையின் இணையில்லா பொற்பாத சமர்ப்பணமாய் முதல் கவிதை…
சான்றோன் ஆக்கிய தந்தைக்கு ஒரு சமர்ப்பணம் …
தன் உள்ளம் கவர்ந்த கள்ளிக்கு புத்தகம் முழுதாய் சமர்ப்பணம்…
உணர்ச்சியை பேனா மையாக்கி
கவி எழுதிய சொல்லோவியம்…
வார்த்தைகளை வர்ணஜாலமாக்கி…
கவி வரைந்த வண்ண ஓவியம்…
இறுதியாய் ஈன்றெடுத்த செல்வங்களுக்கு சிறு மடல்கள் ..
மொத்தத்தில் நீரோடை பெண் நீங்காது இருப்பாள் நினைவினிலே…
இன்னும் பல எதிர்நோக்குகிறோம்… இளங்கவியிடமிருந்து…
– தி.வள்ளி, திருநெல்வேலி
இணையா துருவங்கள் நூல் ஒரு பார்வை
காயத்ரி ராஜ்குமார் அவர்களின் இணையா துருவங்கள் நூல் ஒரு பார்வை. வாசகர் உரை: எழுத்தாளர் திருமதி. புவனா சந்திரசேகர். கதையின் நாயகன் சாய்,நாயகி சம்யுக்தா இருவரையும் கொண்ட அழகான காதல்கதை.
ராகவியின் சதித்திட்டங்களால் சாய், சம்யுக்தா நடுவில் பிரிவு ஏற்படுகிறது. அன்பான மனைவியைப் பிரிந்து வாடும் சாய், தன்னிடம் இருந்து கோபத்துடன் பிரிந்து சென்ற மனைவியையும் தங்களது இல்லறத்தின் கனியான குழந்தை பிரகதியையும் மீண்டும் சந்திப்பானா? மனைவியின் மனதை மீண்டும் வெல்வானா? இருவரும் ஒன்று சேர்வார்களா? குழந்தைக்குத் தந்தையின் அன்பு கிடைக்குமா? ராகவி தனது தவறுகளைப் புரிந்து கொள்வாளா? என்பதையெல்லாம் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
சம்யுவின் தோழி கயல் நல்ல கதாபாத்திரம். அதே போல சாயியின் பெற்றோர், சம்யூவின் பெற்றோர், அவளுடைய அண்ணன், அண்ணி போன்ற எல்லாக் கதாபாத்திரங்களுமே அளவாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
தேவையில்லாத வர்ணனையோ காட்சிகளோ இல்லாமல் கதை தெளிவாக அழகாக நகர்கிறது. நடுவில் சில அழகான காதல் கவிதைகள் இனிமை சேர்க்கின்றன. – aani maatha ithazh 2021
கல்கண்டு வடை
தேவையான பொருட்கள்
முழு உளுந்து- 2 உழக்கு (400 கிராம்)
பெரிய கல்கண்டு-2 உழக்கு
ஈர அரிசி திரித்த பச்சரிசி மாவு-1 உழக்கு
எண்ணெய்- 1 கிலோ
செய்முறை
உளுத்தம் பருப்பை 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.2 மணிநேரம் கழித்து தண்ணீர் நன்றாக வடிந்த பிறகு கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.மாவு அரைக்கும் போது சிறிது தண்ணீர் சேர்த்துப் பின்பு பொடி செய்த கற்கண்டை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.மாவு பந்து போல வந்தவுடன் எடுக்கவும். அதனுடன் பச்சரிசி மாவு சேர்த்து பிசைந்து வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது சிறிதாக வடைகளாகத் தட்டவும்.அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். தீ அதிகமாக இருந்தால் வடை கருப்பாகி விடும் – ரம்யா மதுரை
கேப்பை பூரி
வழக்கமாக கோதுமை, மைதா போன்வற்றில் செய்திருப்போம். அதிலும் பீட்ரூட் , புதினா இலை எல்லாம் சேர்த்து கலர் கலர் பூரியும் செய்து அசத்தியிருப்பீர்கள். இதோ இங்கு கேப்பை மாவில் ஒரு சிறு முயற்சி.
தேவையான பொருட்கள்
கேப்பை மாவு – 2 கப்
ரவை – ஒரு தேக்கரண்டி
மைதா – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரித்தெடுக்க
செய்முறை
ரவை, மைதா, உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து ஊறவைக்கவும். பிறகுகேப்பை மாவை அதனுடன் சேர்த்து ஒன்றாக பிசைந்துகொள்ளவும். தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிதளவு தெளித்து பிசைந்து பூரி மாவு பதத்திற்கு வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக்கி பூரி கட்டையால் திரட்டி எடுக்கவும் மெல்லியதாக தேய்க்காமல் சற்று கனமாக இருக்க வேண்டும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும். கனமாக இருப்பதால் பூரி உப்பலாக நன்கு எழுந்து வரும். இரண்டு பக்கமும் நன்கு வெந்தது தெரிந்தவுடன் எடுக்கவும். உருளைக்கிழங்கு மசால் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு : கேப்பை உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் கால்சியம் தருகிறது. இதனுடன் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளையும் சேர்க்கலாம். – ஏஞ்சலின் கமலா, மதுரை
கவிதை தொகுப்பு 53
காதலினால்
கனவுகளுக்கும்
நிதர்சனங்களுக்கும்
அப்பாற்பட்டது
உன்னோடான வாழ்வு..
தாமரை இலையில்
தவழ்ந்திடும் நீராய்
தனித்திருக்கவும் முடியவில்லை..
தாகத்தினை
தணித்திடும் நீராய்
பருகிடவும் முடியவில்லை..
மனம் வருந்திடும் வேளையில்
கன்னங்களில் நிறைகிறாய்
கண்ணீராய்… – ப்ரியா பிரபு, நெல்லை
நிலாக்கால நினைவுகள்
அருகருகே அமர்ந்து
அன்புகதை பேசியே
அன்றில்களாய் ஒன்றாய்
திரிந்தோம் அன்றைய நாளில்
எனைமட்டும் பூமியிலே
தனித்தியங்க வைத்து
நீலவானில் நீ உலாவும்
மாயமென்ன மனதினியானே
கண்களில் சங்கமித்த
நமதினிய காதல் கதைகள்
நீங்காது நெஞ்சிலாடும்
நிலாக்கால நினைவுகளாய் … – கவி தேவிகா தென்காசி
கற்பக விருட்சம்
தொட்டில் துவங்கி காலில்லா கட்டில் வரை
நடவண்டி ஆரம்பித்து ஊன்று கோல் வரை
காய்கனி பூக்களாய்
உணவு திரவியங்களாய்
வீட்டு உபயோக பொருள்களாய்
இசை கருவிகளாய்
பஞ்சு திரியாய்
பருத்தி உடையாய்
தீக்குச்சியாய்
பறவைகள் கூடாய்
விலங்குகள் கூடாரமாய் – aani maatha ithazh 2021
எண்ணெய் தரும் விதைகள்
பட்டை இலை தரும் மசாலா
வெட்டி வேர் தரும் இனிமை
இளநீர் நுங்கு தரும் குளுமை
தேக்குமர தேகத்தோடு
சந்தனமர வாசத்தோடு
ஆலமர உறுதியோடு
வாழைமர நலன்களோடு
உதவும் மருத்துவ குணங்களோடு
விருட்சமாக அனைவரும் வாழ வேண்டும் – ராகவன், சென்னை
கரு சுமக்கும் காலம்….
சூழ் கொண்ட நாள் முதலாய்
சுற்றிக்கொண்டது சந்தோசம் …
நஞ்சுக்கொடி ஒட்டிக்கொள்ள
ஒரு பிடி சோறு கூடுதலாய் உனக்காக ..
உன் இதயம் துடிக்க
தூள் தூளானது என் சோகம்…
மூளை முளைத்ததும்
முழுதும் ஆட்க்கொண்டது உன் மோகம் …
கை,கால் முளைத்ததும்
நின் இருப்பை அறிய வைத்தது உன் ஆட்டம் …
காது கொடுத்து கேட்க ஆளில்லாமல்
அரற்றி கொண்டிருந்த என் பேச்சை
கேட்டு கை கால் ஆட்டி ஆர்ப்பரித்தது உன் அசைவு …
அம்மாவின் பேச்சுக்கு கைக்கொட்டியது
பிள்ளை என பிதற்றலாய் பெருமை கொண்டது
என் பெண்மை …
உள்ளுக்குள் உன் வளர்ச்சி ,
உடல் பெருத்த என் உற்சாகத்தின்
உரமாய்….
எடை கூடி என்னை மாற்றியவை எல்லாம்
நீ எட்டி பார்த்த அந்த நிமிடம்
எங்கே போனது என தெரியவில்லை …
எத்தனை வலிகள் வந்தாலும்
இன்னும் ஒருமுறை உன்னை சுமக்க
ஆசை கொள்கிறது என் தாய்மை …
இத்தனை இன்பம் தந்து
இடைப்பட்ட கவலை தீர்த்து
இணையாய் இன்னும் இருந்திட
சுகங்கள் தொலைத்தாலும் , என் பெண்மையை
இறுமாப்பு கொள்ளவைக்கும் நின்னை
ஜனிக்க காத்திருக்கும் கர்ப்ப காலமும்
ஒரு சுகம் தான் … – மகேஸ்வரன் கோ
பயணம்
காலை முதல் இரவு வரை தினமும் பயணம்
ஏதாவது ஒன்றை தேடி தொடரும் பயணம்
பலருக்கு பிடித்தமானது பயணம்
சிலருக்கு பிடிக்காவிட்டாலும் பயணம்
மாணவருக்கு படிப்பு பயணம்
மகளிருக்கு உணவு வேலை பயணம்
ஆடவர்க்கு வேலை பயணம்
வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடி பயணம்
வேளாவேளைக்கு உணவு நாடி பயணம்
தாகம் தணிக்க தண்ணீர் பயணம்
மானம் காக்க உடை பயணம்
எல்லாமே இயங்க பண தேடி பயணம்
விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி நோக்கி பயணம்
அரசியல்வாதிகளுக்கு பதவி தேடி பயணம்
எழுத்தாளர்களுக்கு இலக்கிய பயணம்
பக்தர்களுக்கு இறைவனை தேடி பயணம்
குழந்தையிலிருந்து முதியவர் வரை பயணம்
மனித வாழ்வில் தேடல் பயணம் முக்கியம்
அறிவுபசி தீர தினமும் வேண்டும் பயணம்
வளர்ச்சி நோக்கிய பயணம் அவசியம் – ராகவன், சென்னை