ஐங்குறுநூறு பகுதி 4
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 4
மருதத்திணை
04 தோழிக்குரைத்த பத்து
31
“அம்மவாழி தோழி மகிழ்நன்
கடனன் றென்னுங் கொல்லோ நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந் துறை
யுடனா டாயமோ டுற்ற சூளே”
துறை: தலைவன் புறத்தொழுக்கம் விரும்பேன் என கூறியதை விடுத்து நடந்தது கண்டு தலைவி அவன் சுற்றத்தார் கேட்கும்படியாக தோழிக்கு சொல்லியது.
விளக்கம்: தோழி கேட்பாயாக, மகிழ்நன் நம் ஊரின் மிகுந்த இடமுடைய திருமருதத் துறையிடத்தில் நம்மோடு உடனாடிய தோழியரோடு நமக்குரைத்த சூளுரை இப்போது செய்வதற்கு உரியது என்று என்ன உள்ளதோ?
32
“அம்ம வாழி தோழி மகிழ்ந
னொருநா ணம்மில் வந்ததற் கெழுநா
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே”
துறை: வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைவி தோழிக்குக் கூறியது.
விளக்கம்: தோழி! ஊரன் ஒரு நாள் நம் இல்லின் கண் வந்ததற்கு அவன் பெண்டிர் எழுநாள் தீயின் கண் இட்ட மெழுகைப் போல விரைந்து மெலிந்து அழுபவென்று கூறுவர், ஆதலினால் அவர் வருதல் கூடாது.
33
“அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொ டாடு மென்பதன்
றண்டா ரகலந் தலைத்தலைக் கொளவே”
துறை: வாயில் வேண்டி புகுந்தார் கேட்ப தலைவி தோழிக்குச் சொல்லியது.
விளக்கம்: தோழி! மருது மிகவும் உயர்ந்த விரிந்த பூவையுடைய பெரிய துறைக்கண் ஊரன் தனது பெண்டிர் குளிர்ந்த மாலையை உடைய மார்பைத் தாம் தாம் பெற்றுக் கொள்ள அவர்களோடும் விளையாடுவான் என்று கூறுவார், ஆதலின் வாரான்.
34
“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப் பூத்த புழைக்கா லாம்பற்
றாதேர் வண்ணங் கொண்டன
வேதிலா ளற்கு பசந்தவென் கண்ணே”
துறை: வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்ப தலைவி தோழிக்குக் கூறியது
விளக்கம்: தோழி! நம் ஊரின் பொய்கைக்கண் பூத்த துளையை உடைய காலையுடைய ஆம்பலினது தாது போன்ற அழகை அடைந்தன அயலாராகிய ஊரற்கு பசப்பு அடைந்த எனது கண்கள்.
35
“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை யாம்ப னாருரி மென்கா
னிறத்தினு நிழற்றுதன் மன்னே
யினிப்பசந் தன்றென் மாமைக் கவினே”
துறை: வாயில்கள தலைவனின் குணமாக கூறியதை கேட்ட தலைவி தன் மேனி பசந்ததன் காரணத்தை தோழிக்கு சொல்லியது
விளக்கம்: தோழி! நமது ஊரின் பெய்கையிலுள்ள ஆம்பலின் நாருரித்த மெல்லிய தண்டினது அழகினும் அழகை செய்தல் இனிமேல் இன்றாய் இப்பொழுது எனது மாமை கவின் பசந்தது, வந்ததிற்கு பயனின்று.
36
“அம்ம வாழி தோழி யூர
னம்மறந் தமைகுவ னாயி னாமறந்
துள்ளா தமைதலு மைகுவ மன்னே
கயலெனக் கருதிய வுண்கண்
பசலைக் கொல்கா வாகுதல் பெறினே”
துறை: தலைவனின் வாயிலோரை மறுத்த தோழிக்கு தலைவி சொல்லியது.
விளக்கம்: தோழி! ஊரன் நம்மை மறந்திருத்தலை பொருந்துவானாயின் நாமும் மறந்து நினையாதிருத்தலும் பெறுவோம்; அது எவ்வாறெனில் கயல் மீன் என்று பிறரால் கருதப்படும் மை தீட்டிய கண் பசலையைக் கொண்டு தளராத தன்மை பெற்றால் மட்டுமே.
37
“அம்ம வாழி தோழி மகிழ்ந
னந்தோ ருண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்த
றேற்றா னுற்ற சூழ்வாய்த் தல்லே”
விளக்கம்: காதற்பரத்தை தலைவனை சூழ்ச்சியால் கவர்வாள் எனக் கூறிய பாங்கர்கள் கேட்க தலைவி தோழிக்கு சொல்லியது.
விளக்கம்: தோழி! ஊரன் தன்மீது அன்பினையுடைய மகளிரது மைதீட்டிய கண்கள் பசப்படைந்து நீர் நிறைய பொய்த்தலைச் செய்ய வல்லமை இல்லான் ஆகான்; தேறுதல் காரணமாக தன்னால் சூளுற்ற சூள் உண்மையாதலை செய்ய வல்லன் அல்லன்.
38
“அம்ம வாழி தோழி மகிழ்நன்
றன்சொல் லுணர்ந்தோ ரறியல னென்றுந்
தண்டளர் வெளவு மேனி
யொண்டொடி முன்கை யாமழப் பிரிந்தே”
துறை: தலைவன் தன் மனைக்கு போக கருதினான் என்ற தோழிக்கு பரத்தை கூறியது.
விளக்கம்: தோழி! ஊரன் தண்ணிய மாந்தளிரினது அழகை கெடுக்கும் மேனியை உடைய, ஒள்ளிய தொடியை அணிந்த முன் கையை உடைய யாம் அழும்படி பிரிந்து தனது வார்த்தையை தெளிந்தோர் இடத்தில் சொல்லுதலை எக்காலத்திலும் அறியான்.
39
“அம்ம வாழி தோழி யூரன்
வெம்முலை யடைய முயங்கி நம்வயிற்
றிருந்திழைப் பணைத்தோண் ஞெகிழப்
பிரிந்தன னாயினும் பிரியலன் மன்னே”
துறை: ஒருநாள் தலைவன் தன் மனைக்கு சென்றதால் பரத்தை மீதான காதல் நீங்கப் பெற்றான் என தலைவி கூறியதற்கு பாங்காயினர் கேட்க பரத்தை தன் தோழிக்கு சொல்லியது.
விளக்கம்: தோழி! ஊரன் தன் மார்போடு விரும்புவதற்குரிய தனங்கள் அழுந்தத் தழுவி, பின் பிறருடைய திருத்தமுற்ற இழை அணியப்பட்ட பருத்த தோள் மெலிய பிரிந்தான் ஆயினும் நம்மிடம் அவ்விதம் பிரிதலைச் செய்யான்.
40
“அம்ம வாழி தோழி மகழ்ந
னொண்டொடி முன்கை யாமழப் பிரிந்துதன்
பெண்டி ரூரிறை கொண்டன னென்ப
கெண்டை பாய்தர வவிழ்ந்த
வண்டுபிணி யாம்ப னாடுகிழ வோனே”
துறை: தலைவன் உலகத்தாருக்கு அஞ்சி மனையில் தங்கியிருப்ப அது கேட்ட காதற் பரத்தை பாங்காயினர் கேட்ப தோழிக்குச் சொல்லியது.
விளக்கம்: தோழி! மகிழ்நன் ஒள்ளிய தொடியணிந்த முன் கையையுடைய யாம் அழும் வண்ணம் பிரிந்து தனது பெண்டிரது ஊரின் கண்ணே உறைகின்றனன் என்று கூறுகின்றார்கள்; அவனோ கெண்டைமீன் பாய்தலின் முறுக்கு அவிழ்ந்து வண்டைப் பிணிக்கும் தேன் நிரம்பிய ஆம்பல் பொருந்திய நாட்டையுடையவன்.
– மா கோமகன்