என் மின்மினி (கதை பாகம் – 27)
சென்ற வாரம் – ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது – en minmini thodar kadhai-27.
அழுகையில் கண்களும் சோர்ந்து போக அம்மாவின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டவளாக என்னையும் அறியாதவளாக தூங்கி போனேன்…
சிறிது நேரத்திற்கு பிறகு ஏஞ்சலின்…. ஏஞ்சலின்….என்று என்னை கூப்பிடும் சத்தம் கேட்கவே கண்விழித்து பார்த்தேன். அம்மா என் தலையருகில் உக்கார்ந்து கொண்டிருந்தாள். என்னடி ஒன்னும் சாப்பிடாம தூங்கிட்டே.எழும்பி சாப்பிட்டு தூங்கு என்றாள் அம்மா…
அப்பாவும் தம்பியும் சாப்பிட்டாங்களா.நீ சாப்பிட்டீயா அம்மா என்றவாறே மீண்டும் உக்கார்ந்தவாறே தூங்கி விழ ஆரம்பித்தேன்… தூக்கத்தை கட்டுப்படுத்தி எழும்பி முகத்தை கழுவிவிட்டு அம்மா எடுத்து வைத்த சாப்பாட்டை கொஞ்சமாக வாயில் எடுத்து வைத்தவாறே அம்மாவின் முகத்தை பார்த்தேன்…
ஆனால் அம்மாவோ தூங்கி போயிருந்தாள்.எழுப்ப மனம் இல்லாமல் வயிறு நிறைய சாப்பிட்டேன். என்றும் இல்லாத அளவுக்கு சாப்பாடு தனிசுவை.இதை அம்மாவிடம் உடனடியாக எழுப்பி சொல்லியே ஆகணும்னு மனசு நிறைய ஆசை. ஆனால் தூங்கி போன அம்மாவின் குழந்தை முகத்தை பார்க்கும் போது எழுப்ப மனம் வரவில்லை.
அப்பா தம்பியின் அருகில் சென்று பார்த்தேன்.நன்றாக படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நானும் அன்று நிகழ்ந்த கசப்பான நிகழ்வை நினைத்தபடி அதை சரிசெய்ய அடுத்து அப்பா என்ன பண்ண போகிறார் என்று
யோசிக்க ஆரம்பிக்கவும் லேசான வாந்தி,மயக்கம் வருவது போலே ஓர் உணர்வு.வயிறும் லேசாக வலிக்க ஆரம்பித்து தீவிர வலியாக மாற தொடங்கியது.
தொடர்ந்த வலியை தாங்க முடியாமல் கதற ஆரம்பித்தேன்.அம்மா எனக்கு ஏதோ ஆகுது.அப்பா…….. எனக்கு வலி தாங்க முடியல என்று சத்தம் போட போட என்ன ஆச்சுன்னு கூட யாரும் கேட்காமல் தூங்கி கொண்டிருந்தனர்.
மெதுவாக நகர்ந்து அவர்கள் அருகே சென்று அப்பா அம்மா எழுந்திருங்க.எனக்கு வயிறு வலிக்குது.தம்பி தம்பி நீயாவது எழும்புடா ப்ளீஸ்டா என்று கதற யார் காதிலும் விழவே இல்லை. என் கதறல் சிறிது நேரம் செல்ல செல்ல அதிகமாக கேட்க ஆரம்பிக்க பக்கத்துக்கு வீட்டு ஆட்கள் எங்கள் வீட்டுக்கதவினை வேகமாக தட்ட தொடங்கினர்.
என்ன ஆச்சுங்க கதவை திறங்க. ஏன் ஏஞ்சலின் கதறுகிறாள் என்று வெளியில் சத்தம் போட்டபடி மீண்டும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தனர். மெதுவாக பக்கத்தில் இருந்த சுவற்றினை பிடித்து எழும்பி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.கதவை நான் நெருங்கவும் பக்கத்து வீட்டு ஆட்கள் கதவை உடைத்து உள்ளே வரவும் சரியாக இருந்தது – en minmini thodar kadhai-27.
– அ.மு.பெருமாள்
பாகம் 28-ல் தொடரும்
கதை என்றாலும் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகள் …மனது பதறுகிறது இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கவே கூடாது என்று தோன்றுகிறது …நம்மை இந்த உணர்வுக்கு தள்ளுவது கதாசிரியரின் வெற்றி …
கதைகளம் அமர்க்களம்.வாழ்த்துகள்
மிகவும் வருத்தமாக இருக்கிறது