எப்படி மறந்தேன் சிறுகதை (கொரோனா பரிதாபங்கள்)
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “எப்படி மறந்தேன் வசந்தா”, கொரோனா பரிதாபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை – eppadi maranthen sirukathai.
அப்பாடா வேலை முடிஞ்சுது அலுத்துப் போய் உட்கார்ந்தேன்.இந்த கொரோனாவால் கம்யூனிட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. காலை சாப்பாட்டுக்கு செய்த பிரட் சாண்ட்விச்,சூப் இரண்டையும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த போது, செல்போன் அடித்தது.
குற்ற உணர்வு
லைனில் வசந்தா. வசந்தா என் கிட்ட மூணு வருஷத்துக்கு முன்னால வேலை பார்த்தா. வீடு கட்டி, நாங்கள் இங்கே வந்த பிறகு, தூரம் அதிகமா இருந்த காரணத்தால வசந்தா வர்றதில்ல.ரொம்ப பாசமா இருப்பா. மாசம் ஒரு தடவை வந்து வீட்டை யெல்லாம் கிளீன் பண்ணி குடுத்துட்டுப் போவாள். அவள் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஸ்கூல் பீஸ் நான் தான் கட்டி வந்தேன்.மாசம்தோறும் ரேசன் சாமான்கள் வாங்கி வைத்திருப்பேன். எடுத்துட்டு போவாள்.லாக்டவுன் போட்ட பிறகு, பஸ் இல்லாதனாலேயோ என்னமோ வசந்தா வரவே இல்லை. இந்த ரெண்டு மாசமா நானும் கெரோனா டென்ஷனில் வசந்தாவை மறந்தே போனேன் – eppadi maranthen sirukathai.
ஒரு குற்ற உணர்வு என்னுள் எழ, “வசந்தா என்னடி, எப்படி இருக்க?” என்றேன். “அம்மா” …வசந்தாவின் குரலில் ஒரு சோர்வு.” ஏண்டி, நான் தான் போன் பண்ணல, மறந்துட்டேன்… நீயாவது பேசி இருக்கலாம்ல்ல..”பதில் இல்லை அழுகிறாளோ?
“பஸ் ஓடாததால ,உங்களை வந்து பார்க்க முடியலம்மா, என் வீட்டுக்காரருக்கும் வேலையில்ல… வீட்ல தான் இருக்காரு”
“ஏண்டி.. ஒரு போன் பண்ணி சொல்லக்கூடாதா?”
“ரீசார்ஜ் பண்ண காசு இல்லம்மா…இப்ப நானும் ரெண்டு பிள்ளைகளும் ஆஸ்பத்திரியில இருக்கோம்மா…”
பதறாதீங்ம்மா
“என்னடி சொல்ற!” நான் பதறிப் போய் கேட்க..
“எங்க மூணு பேருக்கும் கொரானாம்மா..”
“எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? பிள்ளைங்க நல்லா இருக்காங்களா?”
“பதறாதீங்ம்மா! நல்லாத்தான் இருக்கோம்…பெரிய ஆஸ்பத்திரில இடமில்லைன்னு, ஒரு காலேசுல தங்க வச்சிருக்காங்க. நாங்க நல்லா சாப்பிட்டு பல நாள் ஆச்சுமா. இங்க மூன்று வேளைக்கும் நல்ல சத்தான சாப்பாடு… முட்டை, பால், பழம் சுண்டல்ன்னு, நல்ல சாப்பாடு கொடுக்கிறாங்க. வெளில இருந்தா ஒரு வேளைக்கு கூட இந்த சாப்பாட நினைச்சுப் பார்க்கமுடியாது.பத்து நாள் ஆச்சு. வீட்டுக்குப் போகச் சொல்லிடுவாங்கன்னு தான் கவலைம்மா! “என்றாள் கலக்கத்தோடு.
அவள் வார்த்தையில் இருந்த உண்மை என்னை கன்னத்தில் அறைய, நான் அதிர்ந்து போனேன். கொரோனாவை விட கொடியது பசிக்கொடுமை. உடனே அவள் அக்கவுண்ட் நம்பரை தேடி எடுத்து அதில் பணத்தைப் போட்டேன்.இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும் குற்ற உணர்வு என்னை ஆட்கொள்ள என் முன்னே இருந்த சூப்பும், சாண்ட்விட்ச்சும் என்னை பார்த்து நகைப்பது போல் தோன்றியது. உண்ண மனமின்றி, கனத்த மனதோடு எழுந்து வேலையை பார்க்க தொடங்கினேன்.
– தி.வள்ளி, திருநெல்வேலி
நன்று.. நன்று.. வாழ்த்துகள் 💐💐
அருமையான மனிதாபிமானம் உள்ள கதை. கதாசிரியர் வள்ளிக்குப் பாராட்டுக்கள்!
மனதை உருக்கும் கதை அம்மா…
பசிக் கொடுமை பாவம்
உண்மையின் கதை. அருமை. பாராட்டுகள்.
இளமையில் வறுமை கொடிது என்பதை பிரதிபலித்த சிறுகதை..
இளமையில் வறுமை கொடிது என்பதை பிரதிபலித்த சிறுகதை..
ரொம்ப எளிமையாக மனதில்
பதியும் படி உணர்வுபூர்வமாக
எழுதுகிறீர்கள் வள்ளி
அருமை அருமை
கொரனோ… நம் அனைவரையும் ஒரு வழி ஆக்கி விட்டது.