கவிதைப் போட்டி 2021_11

சென்றமாத போட்டி கவிச் சொந்தங்களால் (போட்டியாளர்களால்) மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 11

kavithai potti

தலைப்புகள்

 1. டாக்டர் அம்பேத்கார்
 2. தீபாவளி
 3. ஸ்ரீராமர்
 4. தமிழ் கடவுள் முருகன்
 5. மழலையில் வறுமை
 6. பெண் கொடுமை
 7. ஔவையார்
 8. மறக்க முடியாத நிகழ்வு
 9. தமிழ் மொழி
 10. மழலை மொழி

மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 11. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

29 Responses

 1. லோகநாயகி.சு says:

  ***கவிதை போட்டி:11*

  முருகா சரணம்……*
  *

  அழகின் வடிவம் கண்டு
  அளவில்லா ஆனந்தத்தில்
  அடியேனின் எழுதுகோலும்
  ஆர்ப்பரித்துக்
  கொண்டது
  அருள்வேலனை அலங்கரிக்க……!!!!

  எனைக்காத்து
  எந்தன் சிந்தையில்
  எப்பொழுதும் வீற்றிருக்கும்
  எம்பரம்பொருளே
  என் முருகனே…..!!!!!🦚
  வேட்டைக்கும் வேளாண்மைக்கும்
  முதல் காவலனே …..!!!!
  மூத்தவனே முதல் குடியோனே
  தமிழ் கடவுளின் ஆதவனே!!!!🙏🏻

  தாமரையில் தவழும் ஆறுமுகனே🌷🌺
  என் முருகப்பெருமானே
  உனை தினமும் தொழவந்தேனே….!!!!

  உன் கவசம் எனைக்காத்திட
  உனை நித்தம் பாடிட
  ஓம் சரவணபவனே
  என திருநாமம் ஒலித்திட
  என்றும் உனை சரணடைவேனே…!!!⚜️⚜️✡️🙏🏻

  லோகநாயகிசுரேஷ்….

 2. தமிழ்மொழி..

  அனைத்து மொழிகளுக்கும்
  அன்னையானவள்.!! – நம்
  அன்னையை போலவே
  அவளும் அமைதியானவள்.!!
  அகிலத்திற்க்கே தெரியும்
  அவளே அகிலாண்டவள் என.??!
  அனைத்தையும் மறைத்து
  அவளையும் அழித்து
  அவளின் பிள்ளைகளை
  அடிமையாக்க துடிக்கும் ஈனப்பிறவியின் முன்
  அசராமல் அடங்காமல்
  அரசாள்கிறாள் இந்த
  அகிலம்தன்னை
  எம் தமிழ் அன்னை..!!!
  என்றும் பெருமை கொள்வேன்
  தான் தமிழனென்று.!!!
  என்றும் வேண்டிடுவேன் நான்
  தமிழனாய் பிறக்க வேண்டுமென்று.!!!

  – அன்புதமிழ்

 3. தமிழ் கடவுள் முருகன்

  பச்சை மால் மருகனையே
  இச்சையாய் துதித்திடுவோம்
  மச்சமாய் நம் வினைகள் துள்ளி
  துச்சமெனப் பறந்து விடும்

  விண்ணையும் தொட்டு விடும் நம்
  பண் இசைப் பாடல் எல்லாம்
  மண் உலகம் நலம் பெறவே வேல்
  திண்ணமாக காத்து அருளும் .

  ஒயிலாக வந்து நிற்பான்
  மயில் மீது தமிழ் கடவுள்
  வெயில் உகந்த நிழல் போன்று
  பயில்வதற்கு ஏற்புடையான் .

  வள்ளி தெய்வானையுடன்
  சிவ மைந்தன் வருகின்றான்
  சக்தி வேலன் காக்க வேண்டும்
  முருக சரவணபவ ஓம் ஓம் .

  எழுதியவர்
  திருமதி ராணி பாலகிருஷ்ணன்
  raniramathilagam@gmail.com

 4. Esakki Ammal says:

  தமிழ் கடவுள் முருகன்

  அறு படை வீட்டில் நிறைந்த சிவ
  புதல்வனே!
  ஆறுமுகமும் உந்தன் திருபுகழின்
  பெயர் ஒன்றே!
  பாசத்தினையும் வியக்கும் உந்தன்
  மழலை குணமே! புன்னகைக்கும் மழலையர் வடிவில்
  வலம் வருவாயே!
  மாங் கனிக்கு போட்டி போட்டு
  சிந்தனை எல்லாம்! சினத்தின் சிகை அலங்காரமாய்
  காட்சி தந்தாயே!
  ஓம் சரவண பவ எனும் எட்டெழுத்து
  மந்திரத்தின் நாயகனே!
  ஔவையின் இசைவரிகளும் உனை
  ஒன்றி புகழ்ந்திடுமே!
  வேல் வாங்கி பாரின் துயரம்
  நீக்கினாய்! உன்
  வேலின் அருள் வாங்கி கவி நயம்
  வர்ணித்தேன்…!
  சூரனை சம்ஹார செய்யும்
  வடி வேலவனே!
  சகல வெற்றியும் உன் அருளால்
  நிறைந்திடுமே…!

  வேல்…

 5. வேல் says:

  தமிழ் கடவுள் முருகன்

  அறு படை வீட்டில் நிறைந்த சிவ
  புதல்வனே!
  ஆறுமுகமும் உந்தன் திருபுகழின்
  பெயர் ஒன்றே!
  பாசத்தினையும் வியக்கும் உந்தன்
  மழலை குணமே! புன்னகைக்கும் மழலையர் வடிவில்
  வலம் வருவாயே!
  மாங் கனிக்கு போட்டி போட்டு
  சிந்தனை எல்லாம்! சினத்தின் சிகை அலங்காரமாய்
  காட்சி தந்தாயே!
  ஓம் சரவண பவ எனும் எட்டெழுத்து
  மந்திரத்தின் நாயகனே!
  ஔவையின் இசைவரிகளும் உனை
  ஒன்றி புகழ்ந்திடுமே!
  வேல் வாங்கி பாரின் துயரம்
  நீக்கினாய்! உன்
  வேலின் அருள் வாங்கி கவி நயம்
  வர்ணித்தேன்…!
  சூரனை சம்ஹார செய்யும்
  வடி வேலவனே!
  சகல வெற்றியும் உன் அருளால்
  நிறைந்திடுமே…!

  வேல்…

 6. அ.கலையரசன் says:

  டாக்டர் அம்பேத்கர்

  ஆண்டான் அடிமை
  அழிந்தொழிய நொடிக்கு
  நொடி படித்தவர்….

  சாதி சடங்குகள்
  பிடுங்கெறிய
  புத்தகமே
  ஆயுதமென்றவர்…

  கடையவரும்
  கல்வி கற்க
  கண்கள் பிதுங்க
  படித்தவர்…

  சாமான்யருக்கும்
  சட்டமியற்றி
  சமத்துவ
  சால்வை போற்றியவர்…

  மூலையில் முடங்கிட
  வைத்தவர்கள் முன்
  சட்டத்தின்
  மூளையாய்
  முன்னேறி முளைத்தவர்…

  அண்ணல் அம்பேத்கார்

  ***கலை***

 7. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “மழலையில் வறுமை”
  ****************************

  கொஞ்சும் வயதில்/
  கெஞ்சுகிறது காசை/
  வேறு வழியில்லை/
  பசியின் ஆசை.

  உயிர்வாழ‌ குழந்தை/
  உணவுக்காக அலைகிறது/
  அரசாங்கம் உணவுக்காக/
  அதிகமாகவே செய்கிறது.

  இலவச அரிசி/
  எங்கும் அன்னதானம்
  எப்படி இருந்தாலும்/
  ஏந்துகிறது குழந்தைகள்/

  அவர்களேன் ஏந்துவது/
  அனாதை யாருமில்லை/
  அம்மா இல்லையென்றால்/
  அரசாங்கம் இருக்கிறது.

  குழந்தையின் சாபம்/
  குடும்பத்திற்கு மட்டுமல்ல/
  நாட்டிற்கும் சாபம்/
  எவரும் நினைப்பதுமல்ல

  நினைக்கமுடியாது எல்லோரும்/
  நினைப்பவர் நினைக்கவேண்டும்/
  நினைத்ததை நிறைவேற்றி/
  சட்டம் போடவேண்டும்.

  கொஞ்சும் குழந்தையை/
  கையேந்த விடாதீர்கள்/
  கொடுமையிலும் கொடுமை/
  மழலையில் வறுமை.

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 8. சத்தியபானு ச says:

  தமிழ் மொழி

  அன்னை மொழியே எங்கள் தமிழ் மொழி….!
  அகிலன் போற்றும் எங்கள் தமிழ் மொழி….!
  சிந்தனை சொல்வளம் எங்கள் தமிழ் மொழி…..!
  அயலாரையும் அரவணைக்கும் எங்கள் தமிழ் மொழி…..!
  அமைதியின் பிறப்பிடமே எங்கள் தமிழ் மொழி….!
  செந்தமிழின் சிகரமே எங்கள் தமிழ் மொழி….!
  சங்கதமிழனின் சங்ககால மொழி தமிழ் மொழி…..!
  தமிழின் பெருமையை போற்றும் எங்கள் தமிழ் மொழி…..!
  தமிழே வாழ்க…..! எங்கள் தமிழ் மொழியே….!
  சிந்தனை மொழியே வாழ்க…..!
  சிங்கார மொழியே வாழ்க…..!
  கன்னித்தமிழ் மொழியே வாழ்க….!

  சத்தியபானு ச
  சிவகங்கை

 9. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  டாக்டர் அம்பேத்கார்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  தனிப்பலகை தனிலமர்ந்து கல்வி கற்றுத்
  தரணிபோற்றும் மேதையாக உயர்ந்து நின்றோன்
  இனியந்தக் கொடுமையிங்கு தொடர்வ தற்கே
  இயலாமல் சமத்துவத்தைப் பெற்றுத் தந்தோன்
  குனிந்திங்கே இழிவுடனே தாழ்ந்தி ருந்தோர்
  கூன்தன்னை அனைவர்முன் நிமிர வைத்தோன்
  பனிவிலக்கும் கதிரவனாய்த் தாழ்த்தப் பட்டோர்
  படும்துயரைக் களைந்தவர்க்கு விடியல் தந்தோன் !

  சட்டத்தின் பேரறிவால் இந்தி யாவின்
  சட்டத்தைச் சிற்பியாக வடித்துத் தந்தோன்
  திட்டமிட்டே ஒடுக்கிவைத்தோர் உயர்வ தற்குத்
  திகழுமிட ஒதுக்கீட்டை வாங்கித் தந்தோன்
  எட்டாமல் இருந்தகனி வேலை வாய்ப்பை
  எட்டவைத்துப் பழங்குடியை அமர வைத்தோன்
  முட்டிமுட்டி மேல்சாதி தடைத கர்த்து
  முன்னேற்றி ஆதியரை முன்னே வைத்தோன் !

  சீர்திருத்த வாதியாகப் பொருளா தாரச்
  சீர்மையிலே வல்லுநராய் மனித நேய
  ஆர்வலராய் மனிதர்தம் உரிமை காக்கும்
  ஆற்றலராய் அரசியலில் களங்க மில்லா
  நேர்மையராய் உலகிலுள்ள ஒடுக்கப் பட்டோர்
  நெஞ்சினனாய் விடுதலைக்குக் குரல்கொ டுத்த
  போர்வீரன் அம்பேத்கார் என்னும் மேலோன்
  போற்றியவர் வழிநடப்போம் வாரீர் வாரீர் !

 10. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  தீபாவளியைப் பெருமை செய்வோம்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  காசுதனைக் கரியாக்கும் வெடிக ளாலே
  கண்டபயன் ஏதுமில்லை என்று ணர்ந்தும்
  காசுதனைக் கரியாக்கும் வெடிகள் வாங்கிக்
  கண்களுக்கு விருந்தென்றே சொல்லு கின்றோம்
  மாசுதனை உருவாக்கிக் காற்றை நஞ்சாய்
  மாற்றுவதை நாமெண்ணிப் பார்ப்ப தில்லை
  வீசுகின்ற காற்றாலே தூய்மை தன்னை
  விலைகொடுத்துக் கெடுத்தேநோய் வாங்கு கின்றோம் !

  பண்டிகைகள் எல்லாமே உறவு கூடிப்
  பகைமறந்து மகிழ்ச்சியுடன் பழகு தற்கே
  நண்பருடன் சுற்றத்தார் ஒன்று சேர்ந்து
  நல்லாடை அணிந்துசுவை விருந்த யர்ந்து
  கொண்டாடிக் குலவிடலாம்! கோயிற் சென்று
  குலதெய்வம் தொழுதிடலாம்! பெரியோர் தம்மை
  மண்டியிட்டுக் கால்வணங்கி வாழ்த்து பெற்றே
  மனநிறைவில் திளைத்திடலாம் தீப நாளில் !

  வெடிகளுக்காய் வீணாக்கும் தொகையில் ஏழை
  எளியவர்க்குப் புத்தாடை தைத்த ளித்தும்
  பிடிசோற்றுக் கலைகின்ற அனாதை இல்லப்
  பிள்ளைகட்கு வயிறாற உணவ ளித்தும்
  படிப்பதற்காய் ஏங்குகின்ற தொழில்சி றார்கள்
  பள்ளிசெல்லப் பெற்றோர்க்கே உதவி செய்தும்
  அடித்தளத்து மக்களிடம் அன்பு செய்தும்
  ] அருந்தீபா வளிநாளைப் பெருமை செய்வோம் !

 11. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  இனிய தமிழ்மொழி
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  புத்தமுதாய் இலங்குதொன்மை தமிழைப் போல
  பூமிதனில் வேறெந்த மொழிதாம் உண்டோ
  முத்தமிழின் பிரிவைப்போல் உலகந் தன்னில்
  முகிழ்ந்துள்ள மொழிகளிலே வகையு முண்டோ
  நித்திலமாய் ஐந்துவகை இலக்க ணத்தை
  நீள்புவியில் பெற்றவேறு மொழிதாம் உண்டோ
  எத்தனையோ மொழிகளினைத் திணித்த போதும்
  எழில்மாறாத் தனித்தமிழ்போல் வேறிங் குண்டோ !

  அகத்திற்கும் புறத்திற்கும் நெறிகள் சொல்லும்
  அருந்தமிழைப் போலெந்த மொழியி லுண்டு
  தகவுடைய திருக்குறள்போல் வாழ்வைக் காட்டும்
  தனிநூல்கள் வேறெந்த மொழியி லுண்டு
  நகமகுட விரல்கள்போல் காப்பி யங்கள்
  நல்லெட்டு பத்துதொகை எங்கே உண்டு
  முகத்திற்கு முன்நிற்கும் மூக்கைப் போல
  முன்பிறந்த தமிழ்க்கிணையாய்ப் பிறிதெங் குண்டு !

  ஆழ்வார்கள் நாயன்மார் சமணர் யாத்த
  அரும்பாக்கள் கொண்டமொழி ; இறைவன் போற்றி
  வாழ்வித்த பக்திமொழி ; கணினிக் கேற்ற
  வளமுடைய மொழியென்றே உலகம் ஏற்று
  வாழ்த்துமறி வியல்மொழியாம் ; சித்தர் தந்த
  வளமருந்து ஞானமொழி எல்லாம் பெற்று
  வாழ்கின்ற இளமைமொழி தரணி ஆள
  வளதமிழுக் கிணைமொழிதாம் உண்டோ சொல்வீர் !

 12. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  மறக்கமுடியா நிகழ்ச்சி
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  அன்புநண்பன் அவசரமாய் ஓடி வந்தே
  அழுகின்ற முகத்தோடே என்னைப் பார்த்து
  உன்னைத்தான் நம்பிவந்தேன் இல்லை யென்று
  உரைத்திடாதே காய்ச்சலிலே மயங்கி யுள்ளாள்
  என்குழந்தை கையிலொரு காசு மில்லை
  எனக்கின்று நீயுதவி செய்ய வேண்டும்
  என்றேந்தி நின்றவனின் கரத்தில் நானோ
  எடுத்தளித்தேன் ஆயிரமாம் தாளை அன்று !

  சிலநாள்கள் சென்றபின்பு சாலை யோரம்
  சிற்றுண்டிக் கடையருகில் அவனைப் பார்த்தேன்
  நலமாக இருக்கிறாளா உன்கு ழந்தை
  நட்போடு நான்கேட்டே தேநீர் தந்தேன்
  பலமாகத் தலையாட்டித் தேநீர் தன்னைப்
  பருகியவன் ஊர்கதைகள் பேசி யப்பின்
  செலவுக்கு நான்கொடுத்த பணத்தைப் பற்றிச்
  செய்தியொன்றும் சொல்லாமல் சென்று விட்டான் !

  ஆண்டொன்று சென்றபின்பும் பலநாள் பார்த்தும்
  அவன்பெற்ற பணம்பற்றிப் பேச வில்லை
  தூண்டிலில்மீன் பிடிப்பதைப்போல் நான்பி டித்தே
  துடிப்பாக நான்கொடுத்த பணத்தைக் கேட்க
  ஈண்டுனக்குச் சொல்கின்றேன் உன்னி டத்தில்
  இருப்பதிகம் இருந்ததாலே எனக்க ளித்தாய்
  வேண்டியது போகமீதி வைத்தி ருப்போர்
  வேண்டியோர்க்குத் தருவதற்கே என்றான் சென்றான் !

 13. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  குழந்தைத் தொழிலாளர்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  கதிர்முளைத்து வருமுன்னே கண்வி ழித்துக்
  —கலையாத தூக்கமுடன் உடலும் சோர்ந்து
  முதிராத மனங்களிலே சுமையைத் தாங்கி
  —மூண்டுவரும் பசிநெருப்பைத் தணிப்ப தற்கே
  சுதிசேர்த்துப் பெற்றோரின் வறுமைப் பாட்டின்
  —சுருதியாக உடன்பாடச் செல்லு கின்ற
  கதியில்லா இளஞ்சிறார்கள் பாடு தன்னைக்
  —கண்கொண்டு பார்ப்பவர்கள் யாரே உள்ளார் !

  அழகான சீருடையில் அகவை யொத்த
  —அருஞ்சிறார்கள் பள்ளிசெல்லும் காட்சி கண்டே
  நிழலான வறுமையினால் குடிசைக் குள்ளே
  —நின்றவனோ ஏக்கத்தில் சாம்பு கின்றான்
  குழவியர்க்குக் கட்டாயக் கல்வி யென்றே
  —குறித்துள்ள சட்டங்கள் இங்கி ருந்தும்
  விழலுக்கே இறைக்கும்நீர் போல வன்றோ
  —விதிகளெல்லாம் செயலின்றித் தூங்கு திங்கே !

  நூல்களினைச் சுமக்கின்ற பிஞ்சுக் கையால்
  —நுழைந்துள்ள ஏழ்மையினால் மண்சு மந்து
  கால்தேயச் சிற்றாளாய்க் கல்சு மந்து
  —கந்தகத்தை உடல்சுமந்து மேனி யெல்லாம்
  தோல்கறுக்கச் சூரியனின் வெயில் சுமந்து
  —துவளுகின்ற சோர்வுதனை மனம் சுமந்து
  பால்முகமோ பரிதாப முகமாய் மாறப்
  —பாரத்தைச் சுமக்கின்றார் சமுதா யத்தால் !

  பிஞ்சுவிரல் அவெழுதிக் கல்வி கற்கப்
  —-புத்தகங்கள் புரட்டுகின்ற வயதில் தீயாய்
  நஞ்சுமிழும் வறுமையெனும் கொடுமை போக்க
  —நாளெல்லாம் தீக்குச்சி அடுக்கு கின்றார்
  பஞ்செனவே பறந்துவிளை யாடு கின்ற
  —பருவத்தில் நான்குசுவர்க் கட்ட டத்துள்
  குஞ்சுகளாய்ச் சிறகிருந்தும் விரிந்தி டாமல்
  —குமைகின்றார் ஏழ்மையினால் உடலு ழைத்தே !

  மத்தாப்பூ சிரிப்புதிர வகுப்ப றையில்
  —மகிழ்ச்சியுடன் குறும்புபல செய்து கல்வி
  முத்துகளை ஆசிரியர் கோத்த ளிக்க
  —முகிழ்க்கின்ற அறிவுமாலை அணியும் காலம்
  சித்திரமாய் அமர்ந்துவிரல் மருந்தை அள்ளச்
  —சிதறுகின்ற பட்டாசு செய்யு கின்றார்
  சொத்தாக வறுமையினைப் பெற்ற தாலே
  —சொத்தையாகி வேகின்றார் தொழிற் கூடத்தில் !

  சொல்லமுதாய் நாபேசிச் சிறக டித்தே
  —சுதந்திரமாய்ப் பறக்கின்ற பள்ளிக் காலம்
  கல்லுடைக்கும் அடிமையராய் மலையின் ஓரம்
  —காட்டிற்குள் மறைவாக வாடு கின்றார்
  சொல்லிழந்து கைகட்டிப் பண்ணை வீட்டில்
  —கொத்தடிமை யாய்அப்பன் கடனுக் காகக்
  புல்வெட்டி மாடுமேய்த்தே புதரைப் போலப்
  —புரியாமல் அடிமாடாய் வாழு கின்றார் !

  சாலையிலே தாள்பொறுக்கி வீடு கட்குச்
  —செய்தித்தாள் எடுத்தேகிப் பலரின் வீட்டில்
  காலையிலே வீட்டுவேலை துணிது வைத்துக்
  —கடைகளிலே எடுபிடியாய் வேலை செய்து
  பாலையிலே காணுகின்ற கானல் நீராய்ப்
  —பகற்கனவில் எதிர்கால வாழ்வை எண்ணி
  நாளையிந்த நாடாளும் சிறார்க ளெல்லாம்
  —நாளெல்லாம் உழைக்கின்றார் கல்வி யின்றி !

  சேய்களுக்குக் கட்டாயக் கல்வி என்னும்
  —செயல்பாட்டில் கடுஞ்சட்டம் வருதல் வேண்டும்
  தாய்தந்தை படும்துயரைக் களையு கின்ற
  —தகுதிட்டம் அரசிங்கே நடத்த வேண்டும்
  வாய்ப்பளிக்கும் இலவசங்கள் முறையாச் சென்று
  —வளர்கல்வி பெறுதற்கே உதவ வேண்டும்
  தூய்மையான தொண்டுள்ள நிறுவ னங்கள்
  —துணையாகிக் குழந்தைகளைப் பேண வேண்டும் !

 14. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி:11

  தீபாவளி

  ஒரு கிண்ண எண்ணையில்,
  உறக்கம் விழித்த குளியலில்…..!!!
  அப்பா தந்த காலர்ச் சட்டையில்,
  அம்மா சுட்ட உளுந்து வடையில்…..!!!
  அடுத்த வீட்டு மைசூர்ப் பாகில்,
  அண்ணன் தங்கையின்
  அன்புப் பரிமாறலில்…..!!!!
  சீனா சிவகாசிப்
  போட்டிகள் புதைய
  சிரிக்குது தீபாவளி
  சத்தமில்லாமலே……!!!!!

  லோகநாயகிசுரேஷ்…….

 15. கவின்யா says:

  தமிழ் கடவுள் முருகன் –
  என் அப்பன்
  கார்த்திகேயனே
  என்றும் உன்
  திருவடியில் உன்
  மகளாய் (னா)
  இருந்திட வேண்டும்…..

  எழியோர்க்கு
  பிள்ளையாகவும்
  அனைவருக்கும்
  சமமாய்
  காட்சியளிக்கிறயாய்……

  உன்னை
  வணங்காத
  நாளும் இல்லை
  கிழமையும்
  இல்லை…….

  இன்று உலகமே
  நோயால்
  அவதி பட்டும்
  கண்ணீர்
  சிந்துவதையும்
  நீயோ பார்த்து
  கொண்டிருக்கிறாய்…..

  அனைவரும்
  நலத்துடன்
  திரும்ப
  நீயோ
  ஒவ்வொரு
  வீட்டில்
  மைந்தனாக
  இருந்து காக்க
  வேண்டும் என் அப்பா
  கார்த்திகேயனே……

 16. கவின்யாவிகாசினி says:

  மழலை மொழி-
  வானமெங்கும்
  மாலை சூரியன்
  அரவணைப்பில்
  மிதந்து விளையாடும்
  புறாவிர்க்கும்
  குருவிகளுக்கும்
  ஈடாய் குழந்தைகளின்
  ஒற்றை மழலை
  சிரிப்பில் மனம்
  தானாய் மிதக்கின்றது!!……….

 17. ஔவையார்

  ஔஷதம் ஒத்த மூதுரைகள்
  ஔவைப் பாட்டி தந்தனளே
  தமிழ் பாக்கள் அதனாலே
  தமிழர் வாழ்வும் சிறந்தனவே.

  உயிர்ச்சொல்லும் உயிர் மெய்யும்
  அறமொழியால் கற்பித்தாள்
  உலகம் உய்ய தமிழர்களும்
  பாங்காய் ஒளிர வழிவகுத்தாள்.

  நான்கு கோடி பாடல்களை😁
  நான்கேவரியில் பாடியவள்
  நாளும் நலமாய் நாம் வாழ
  நன்றாய் நமக்கு அருளினளே.

  வள்ளுவனின் திருக்குறளை
  அரங்கேற்றம் செய்ய உதவியவள்
  விநாயகர் அகவல் கவிபாடிய
  ஔவைப் பாட்டி யாம் அறிவோம் .

  நன்றி மறவா தன்மையினால்
  இன்றளவும் ஔவைகாளி விரதங்கள்
  ஆடிமாதம் தைமாதம் வாராவாரம்
  கடைப்பிடிக்கப் படுகின்றன.

  வையம் உயிர்ப்புடன் இருக்கும் வரை
  ஔவைப்பாட்டியின் புகழ் ஒலிக்கும்
  ஔவைத் தமிழை நாம் கற்றால்
  சீராய் வாழ்வோம் பூமணம் போல் .

  எழுதியவர் திருமதி ராணி பாலகிருஷ்ணன்
  raniramathilagam@gmail.com

 18. Himeshwaran says:

  ” தனிமை”

  உனக்கும் எனக்குமான கதைகள் ஏராளம் ……….

  தனிமைப்படுத்தப்பட்ட கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கனவுகளும் அறுவடைக்காகவே காத்திருக்கிறது…….

  கிழவியிடம் வாங்கிய நவாப்பழம்,
  கடைவீதியில் தேய்ந்த ரப்பர் செருப்பு,
  பின்னொரு நாளில் பெய்த மழையில் விரல்களுக்கிடையே மின்னலலை பார்த்த கணங்கள் எல்லாம் நிந்தையில் பறக்கும் சிறகுகள்………..

  சதுரங்களில் போடப்பட்ட நாற்காலியில் நீ இல்லாமல் என் நினைவுகளில் ஓடும் கதைகள் காற்று தொடாத மழைத்துளிகள்………..

  நான் உன்னிடம் கேட்பதெல்லாம் வனத்தில் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி பூக்களில் இளைப்பாறும் நேரம் மட்டுமே………..

  நேற்று முடிவடைந்த இரவுகள் வரை நானும் என் நாற்காலியும் அந்நியப்பட்டே நகர்கிறோம்……………

 19. suganiya says:

  மறக்க முடியாத நிகழ்வு!

  கனத்த வயிறும், கனவுகளின் தோரணங்களுமாக
  வலி மறந்து, வலிமை நிறைந்து
  உள்நுழைந்த அறையில் பார்த்தறியா
  முகங்களுக்கு நடுவில், ஓர் முகத்தை
  எதிர்பார்த்து உதிரத்தை உதிர்த்து
  உற்றவனை திரும்ப சென்று காண்பேனா?
  என்ற கேள்விக்கு பதிலை மறந்து
  உன்னை என் கைகளில் ஏந்திய
  அந்த நொடி… என் வாழ்வின்…

  மறக்க முடியாத நிகழ்வு!!!

 20. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “பெண் கொடுமை”
  ************************

  உயிர்களை உருவாக்கும்/
  பெண்ணே பேரண்டம்/
  அவளின்றி அணுவும்/
  அசைவதில்லை அகிலத்தில்.

  அவளாலே இயங்குகிறது/
  அவளே சக்தி/
  அவளாலே கிடைக்கும்/
  அனைவருக்கும் முக்தி.

  அதை உணராத/
  அற்பபிறவிகள் சிலர்/
  அடிமைப்படுத்தி அவளை/
  அழவைத்து மகிழ்கிறார்கள்.

  மண்ணும் பெண்ணும்/
  இரண்டும் ஒன்றே/
  மிதித்தாலும் அடித்தாலும்/
  பொறுமையாக இருப்பார்கள்.

  பெண்கள் பணிந்துபோவதால்/
  பயப்படுவதில்லை ஆண்கள்/
  அடங்கிப்போகும் பெண்களை/
  அடக்குகிறார்கள்‌ ஆண்கள்.

  எத்துன்பம் என்றாலும்/
  தாங்கிக் கொள்கிறாள்/
  பயப்படுவதில்லை அவள்/
  பணிவதை விரும்புகிறாள்.

  எத்தனையோ உள்ளது/
  பெண் கொடுமை/
  கொடுமையிலும் கொடுமை/
  பாலியல் வன்கொடுமை.

  காற்று இன்றி/
  உயிர்கள் இல்லை/
  பெண்கள் இன்றி/
  உலகே இல்லை.

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 21. Kovai Subha says:

  தீபாவளி வந்தாச்சு

  வந்தாச்சு வந்தாச்சு
  தீப ஒளியை கையில்
  ஏந்தி கொண்டு
  தீபாவளி வந்தாச்சு…!!

  நரகாசுரனின் வீழ்ச்சியை
  நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக
  தீபாவளி பண்டிகையென்று
  கொண்டாடி மகிழ்கின்றோம்…!!

  அந்த காலத்தில் என்று ஆரம்பித்து
  தாங்கள் கொண்டாடி மகிழ்ந்த
  தீபாவளி திருநாளை எண்ணி
  பலரும் மனதுக்குள் மகிழ்ந்து

  அந்த காலத்து நினைவுகளை
  இந்த காலத்து இளைய பட்டாளத்துடன்
  மகிழ்ச்சியோடு சுவை மாறாமல்
  சொல்லி மகிழ்ச்சி கொள்கிறார்கள்…!!

  இளைய சமுதாயமே
  நாம் பண்டிகை கொண்டாடுவதின்
  அருமை பெருமைகளை
  புரிந்து கொண்டு கொண்டாடுங்கள்…!!

  பாரம்பரிய பழக்க வழக்கங்களை
  நன்கு அறிந்து கொண்டு
  வருங்கால சமுதாயத்துக்கு
  தீப ஒளிப்போல்
  வழிகாட்டியாக இருந்து
  பாரம்பரியத்தை பேணிக்காத்து
  மகிழ்ச்சியோடு வாழுங்கள்….!!

  தீபாவளியின் தீப ஒளியில்
  இருண்டு கிடக்கும்
  நமது பாரம்பரியத்துக்கு
  ஒளியேற்றி
  புதிய பாதை அமைத்து
  இனிய பயணங்களை
  மகிழ்ச்சியோடு தொடருங்கள்…!!

  பட்டாச்சுகள் வெடித்து
  சிதறுவதைப்போல்
  இந்த தீபாவளி நன்னாளில்
  சமுதாய சீர்கேடுகளும்
  வெடித்து சிதறட்டும்…!!

  எல்லோருக்கும் இனிய
  தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!!
  –கோவை சுபா

 22. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “ஔவையார்”
  *****************

  பெண்ணின் பெருமையவள்/
  பேரண்டத்தின் அறிவுமவள்/
  சொல்லின் வலிமையவள்/
  சொர்க்கத்தின் வழியவள்.

  அகிலம்‌ வாழவே/
  அழகை துறந்தவள்/
  அறம் ‌காக்கவே/
  அறிவை திறந்தவள்.

  அரசனுக்கு மட்டுமல்ல/
  ஆண்டவனுகே புத்திசொன்னவள்/ அழகுத்தமிழில் அறிவு/
  பாட்டும் சொன்னவள்.

  நியாயம் சொல்வதில்/
  நீதியின் தராசவள்/
  நலம் காப்பதில்/
  நன்மைக்கு தாயவள்.

  அன்பின் அழகவள்/
  ஆசைக்கு பகையவள்/
  அறத்தின் சேயவள்/
  அறிவுக்கே ஆசானவள்.

  பாரதத்தாயின் புதல்வியவள்/
  பெண்ணினத்தின் மூத்தவள்/
  தமிழ்தாயின் தங்கையவள்/
  முத்தமிழின் மூதாட்டியவள்.

  ஔவை தந்ததமிழை/
  அறிவாய் படிப்போம்/
  அதன் வழியே/
  அனைவரும் நடப்போம்.

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 23. ரொ.அந்தோணி says:

  தமிழ் கடவுள் முருகன்

  குறிஞ்சித் திணையின் முதலானவன் சிறுகுடி சேயோன்
  மலைநெல் கஞ்சி குடித்து
  மயிலேறி செல்லும்
  மலை வேந்தனே!
  மலைகாத்த ஆறுபடை கொண்ட ஆறுமுகன் அகிலத்தை காக்கும்
  ஓம் சரவணபவ !!உம் மந்திரமே

  அப்ப நீ ஈசனுக்கு
  மந்திரத்தை உபதேசம்
  செய்த சாமிநாதா!!
  சைவ சித்தாந்தத்தின் சித்தனே!!
  சஷ்டி நட்சத்திரங்களின்
  வைகாசி விசாகனே!!
  முருகா அரோகரா!! அரோகரா!!

  சிவன் நெற்றியில் அக்கினிப் பிழம்பு கருவாய் தோன்றி
  சரவணபொய்கை குளத்தில்
  தாமரை மலரின் கந்தகத்தில் உருவெடுத்து
  கார்த்திகைப் பெண்களின்
  மடியில் கொஞ்சி விளையாடி
  அன்னை பராசக்தி ஆறுமுகனை ஒருவனாக படைத்த
  திருமகனே!! சண்முக நாதா

  சர்வ வல்லமையும் படைத்த சுப்பிரமணியனே!!
  அகத்தியர் அருணகிரிநாதர்
  அவ்வையார் நக்கீரர் உமது தமிழ்
  அன்பால் ஈர்த்த வனே!!

  உந்தன் அருள் அருளாலே
  அருள் புரிவாய் முருகா!
  அன்பை நாடி
  அண்டி சேர்ந்தேன் முருகா!
  எட்டுக்குடி வேலவனே!
  குன்றின் குமரனே!
  சூரபத்மனை அழித்த
  செந்தில்நாதா!!
  வெற்றி வேல் தாங்கிய வடிவேலவா ஆதிகுடி தமிழ் கடவுளே!!
  ஓம் ஓம் முருகா!!

  ஒ. டி. ஆர் . ரொ.அந்தோணி

 24. S. V. Rangarajan says:

  பெண் கொடுமை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் அடிமைப் பட்டே வாழ்ந்தனர் என்பது வெளிப்படை உண்மை பால்ய விவாகம் கணவன் சிறுவயதிலேயே காலமானால் மொட்டை அடித்த தலை வெளியே வர தடை யார் முன்னாலும் வந்து நிற்க கூட தடை பெண்கள் பள்ளி அதிகம் படித்தவை பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்னர் மாற்றங்கள் கல்லூரி படிப்பு பொறியியல் படிப்பை கூட பெண்கள் இப்போது படிக்க அனுமதி ஆனாலும் சில சூப்பர் மார்க்கெட் களில் மகளிர் காலணி அணிய கூடத் தடை என்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.

 25. Srikanth Lawrence says:

  மழலையில் வறுமை:

  பெற்றோரின் துயர நோய்
  தாயின் கற்பத்திலே வளர்ந்து
  வறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும்

  மழலை பிறந்ததும்
  புது வறுமை பிறந்திடும்
  அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்
  வயதை மீறி பிறந்திடும் கவலை
  மழலையின் கவலையா
  பிறப்பின் கவலையா

  மழலையின் வயிற்றிலே மறைந்திருக்கும் பஞ்சம்
  மிச்சம் மீதி உணவையும் அமிர்தமாய் காட்டிடும்
  கொடுக்க ஏதுமில்லா குழந்தையிடம்
  தன்மானத்தை வாங்கி‌ சோறு போடும் இந்த வறுமை

  மழலைக்கும் உண்டு சிறு மானம்
  சிறு மானத்தை மறைப்பதிலே பெரும் பஞ்சமா
  எங்கே கிழிந்த ஆடை
  கிழிந்த ஆடையை புத்தம் புதியதாய் சலவை செய்திடுமே இந்த வறுமை

  வண்ண தொலைகாட்சியில் கார்டூன் பார்க்க ஆசையா உனக்கு
  வறுமை உன்னை பார்க்க விடுமா
  சின்னஞ் சிறு கைப்பேசியை திரையரங்கமாக மாற்றி கொடுப்பதுதான் இந்த வறுமை

  வீதிகளிலே ஓடி விளையாடுது வறுமை
  இதை கண்டு களிக்கிறது சமூகம்
  பிஞ்சு விரல்களை பிச்சை பாத்திரமாய் ஆக்குவதோ இந்த வறுமை

  மாட மாளிகையின் நிழலில் நிற்க மட்டுமே உதவும் இந்த வறுமை
  குடிசை வீட்டையும் கோபுரமாய் மாற்ற உதவிடுமா
  குடிசையும் இங்கே கோபுரமாவது
  மழலையின் குழையும் சிரிப்பினால்

  வறுமையின் ருசி வெறுமையே
  மழலையே வெறுமையை ருசிக்காதே
  வெறுமையை உன் பெருமையான புன்னகையால் விற்றுவிடு

  ஆடம்பரம் தெரியாத வயது உனக்கு
  ஆடம்பரத்தை பார்த்து ஏன் ஏங்குகிறாய்
  உழைப்பு என்னும் சொத்தை சேர்த்து கொள்கொள்
  வரும்நாளில் ஒருநாள்
  வறுமையே பெருமை கொள்ளும் உன்னை கண்டு

  – Written By Srikanth Lawrence

 26. காந்திமதி கண்ணன் says:

  சீரழியும் உலகத்தில் சிக்கிக்கொண்டேனோ…?

  வெறியன் முகமென
  தெளிவாய் தெரிந்தால்
  துஷ்டன் இவனென
  தூரம் செல்லலாம்…

  வேறு முகங்கொண்டு
  வேட்டையாடத் துடிக்கும்
  காமக் கொடூரர்களை எப்படி
  கண்டுகொ(ல்)ள்வது..?

  சதைத் தேடும் சாத்தான்களை
  பிணவறையில் அடையுங்கள்.
  உயிரும் மனமும் உடலைப் பிரிந்தபின்
  பிண்டங்கள் வெறும் பையென புரிந்து மடியட்டும்.

  எளிதில் நம்பாதே
  ஏமாளி நீயென
  பெண்மைக்கு பாடம் புகட்டும்
  பேதை சமூகமே…
  அடக்கமும் ஒழுக்கமும்
  ஆண்மைக்கும் ஊட்டுங்கள்.

  காந்திமதி கண்ணன்

 27. சௌந்தர்ய தமிழ் says:

  உன் காதலில் உயிர் ஓவியம்

  மார்கழி சாரல் நீயே..
  மார்பிலே தோற்றம் நீயே..
  மல்லிகை பாவை நீயே..

  உலா வரும் நேரம் இன்று..
  விரல்களில் ஏக்கம் கொண்டு…
  தீண்டினால் காதல் நன்று..

  மண்ணிலே காயம் இன்று..
  உன்னிலே மயக்கம் கொண்டு..
  உன் பார்வையில் காதல் நன்று..

  இரு விரல் இணைந்து..
  இதயங்கள் நனைந்து..
  பேசும் மொழி மௌனம் ஆனேதே..

  கவிமொழி பேசும் காதலுமே..
  கடல் நுரை என கரைந்தது ஏனடி..

  இதயதுடிப்பில் துடிக்கும் இசையில்
  இணைந்தே தொடர சம்மதம்
  சொல்லடி…

  – சகா…

 28. சௌந்தர்ய தமிழ் says:

  திருமணம்

  இசையோடு இனிதே தொடங்கும் நாள்…

  இமைகள் திறந்து இதய புன்னகையுடன் பாவை பாதம் பதிப்பாள்..

  மணியோசை சினுங்க சினுங்க,
  மல்லிகை வாசம் மண்ணில் வீச,
  மங்கை முகம் நிலவொலி ஆனதே…

  என்னவளின் தேகம் நோகுமோ என
  பனிப்பூக்கள் மாலையாக..

  செம்பருத்தி சிரித்துக்கொண்டே செவ்விதழிழ் சேர்ந்துவிட்டாள்…

  மருதாணி நிறம் வெட்கம் என்னும் போர்வையில் மறைந்துகொண்டது..

  மையிட்ட விழிகள் மாமனை தேட,
  கண்ணிமைக்கும் நொடியில் கரம் பிடித்தான்..

  மெட்டிஒலியில் புதிய வழியில் கரம் கோர்த்து இனிய பயணம்..

  மழைச்சாரல் போல கண்ணீர் ஊற்றெடுக்க தலையனை நனைந்தது..

  கண்ணீர் துடைக்க கரம் இருப்பின் அது வரமே… திருமணம் என்னும் அன்பில்…

  – சகா…

 29. இராம வேல்முருகன் says:

  டாக்டர் அம்பேத்கர்
  எண்சீர் விருத்தம்
  காய் காய் மா தேமா
  1
  தேன்சுரக்கும் மலரெடுத்துச் சூடி நாட்டின்
  திருவுயர்த்திக் காசினியை மகிழச் செய்து
  கூன்விழுந்து குடைசாய்ந்த சமுதா யத்தை
  கொழுகொம்பை இழந்துவிட்ட இனமா னத்தை
  வான்முகட்டைத் தொட்டுவிடச் செய்த அண்ணல்
  வளமனைத்தும் சமமென்றே உரைத்த செம்மல்
  ஏன்பிறந்தோம் எனநொந்து வாழ்ந்த மக்கள்
  இனம்காக்கக் கதிரவனாய் உதித்தார் வாழி!
  2
  தன்மக்கள் வாழ்வுமட்டும் உயர்ந்தால் போதும்
  தரக்குறைவாய் மாற்றினத்தை நினைப்போம் என்ற
  வன்மக்கள் கயமையினை உடைத்தெ றிந்து
  வறுமையுற்றோர் தரமுயர்த்த வழிகள் கண்டே
  என்மக்கள் என்நாடு இதுவென் சட்டம்
  எனவாய்ந்து புதுச்சட்டம் வரைந்த வேந்தன்
  நன்மக்கள் வாழுகின்ற நாட்டிற் றாமும்
  நற்றலைவ னாயுர்ந்த செம்மல் வாழி!
  3
  உழைக்கின்ற வருக்கமெலாம் தாழ்ந்தோ ரென்றே
  உருப்படாத கொள்கையினை வகுத்தோ ரோடத்
  தழைத்தவொரு மாமரமாய்த் திகழ்ந்த தென்றல்
  தன்னினத்தின் தலைநிமிரச் செய்தார் வாழி
  பழுத்தபழம் தமிழகத்தில் செய்த தற்போல்
  பாரதத்தில் தடம்பதித்த அம்பேத் காரைத்
  தொழுதுநாமும் வணங்கிடுவோம் எந்த நாளும்
  தொண்டாற்றி அவர்போலச் சிறந்தே வாழ்வோம்.
  4
  சாக்கடையாய் நினைத்தோரின் எண்ணப் பூச்சைச்
  சமத்துவத்தின் வழியினிலே மங்கச் செய்து
  போக்கி்டங்கள் இல்லாது மாய்ந்து போனோர்
  பொழுதெல்லாம் நற்பொழுதாய் மாற்றி வாழ்வைப்
  பூக்கடையாய் மணம்வீசச் செய்து சட்டப்
  புன்னகையால் புதுயுகத்தைக் கொணர்ந்த கோவை
  நாக்கமழப் பாவெடுத்து நானும் பாடி
  நற்றமிழாள் துணையோடு வாழ்த்து வேனே!
  5
  ஏருழுது செருப்புதைத்து சமுதா யத்தில்
  இரந்துவாழ்ந்தோர் வாழ்வினிலே மாற்றம் காணப்
  பாருழுது பயன்விளைத்தார், கீழே தள்ளிப்
  பரிகாசம் செய்தோரைப் படிப்பால் வென்றார்
  சீருலகில் தமக்கென்று பாதை கண்டு
  சிங்கார மகனாக திகழ்ந்தார் இந்த
  ஊருலகம் போற்றுகின்ற அம்பேத் காரை
  உவகையுடன் நானுமிங்கே வாழ்த்து வேனே!
  6
  கற்கவழி எண்ணற்ற தடையைக் கண்டும்
  கற்றாரே தடையெல்லாம் அகற்றித் தள்ளி
  உற்றதொரு மாமேதை யாக வாழ்ந்த
  உத்தமரை ஊழ்வினையை விரட்டிச் சென்றே
  அற்பர்களின் சூழ்ச்சிதனை வென்றே நாட்டின்
  அமைச்சரென ஆனவரை அம்பேத் காரை
  எற்றிசையும் போற்றவல்ல தமிழைக் கோண்டே
  எந்நாளும் பாடிடுவேன் அண்ணல் வாழி !

  பாவலர்மணி இராம வேல்முருகன்
  வலங்கைமான்