கவிதை தொகுப்பு – 29

கவிஞர்கள் பொய்யாமொழி. நேசம், ஸ்ரீராம் பழனிசாமி, நீரோடை மகேஷ் மற்றும் குடைக்குள் மழை சலீம் என நீரோடையின் ஐந்து கவிஞர்கள் எழுதிய வரிகளின் தொகுப்பு – kavithai thoguppu 29

kavithai thoguppu hard work

ஆத்மாவின் அழுகை

புத்தகம்போல்
பொக்கிஷமாய்
காத்துவந்த
நினைவுகள்…

கரையான்
அரித்த
காகிதமாய்
காலம் தின்றுவிட…

பெருங்கடலில்
விழுந்துவிட்ட
சிறு துளியாய்…

பிதற்றலோடு
கரைகிறது
எனது
பிரபஞ்ச காதல்…

எத்தனை
யுகங்களாய்
கட்டமைத்த
எதிர்பார்ப்புகளை…

ஒற்றை நொடியில்
தகர்தெரிந்து
போனாய்
ஒருவழிப்பாதையில்…

கனத்த இதயத்தோடு
காத்து கொண்டுதான்
இருக்கிறேன்
இன்னமும்….

கல்லறைக்குள்ளும்
கரையாத
ஆத்மாவின்
அழுகையோடு… – kavithai thoguppu 29

– குடைக்குள் மழை சலீம்


உழைப்பும் படைப்பும் உனதே

கல்லையும் கரைய வைப்பவள் பெண்
என்றார் ஒரு கவிஞர்…
தோழனே !
சிறு துகளையும் மாமலையாக்கும்
வல்லமை பெற்றவன் நீயே

உன்னை உறங்காமல்
உழைக்கச் சொல்லவில்லை
உழைப்பில் உழைப்பில்
உறங்கி விடாதே என்கிறேன்

உழைப்பில் தேனீயாக நீ
மாறிப்பார்
உன்னைத்தேடி ரோஜா
தேன் சொட்ட வரும்

உன்னைச்சேர பொன்மகள்
கால் கடுக்க காத்திருப்பாள்

நீ உழைத்து உயர
முதலீடாக அக் கலைவாணியும்
தன் வீணையை
அடகு வைக்க நினைப்பாள்…

நீரோடை மகேஷ்


கானல் நீர் வாழ்வாச்சு

சுயநலமும் பெருத்தாச்சு
தன் குடும்பம் என்றாச்சு
விஞ்ஞானம் வளந்தாச்சு
விளைநிலமும் பாழாச்சு

வெட்டி வெட்டி போட்டாச்சு
வெயிலுக்கும் வேத்தாச்சு
மழை பேஞ்சு நலஞ்சாச்சு
குளமுமிங்கே வீடாச்சு

குயிலும் எங்கோ பறந்தாச்சு
மாடு மேஞ்சு நாளாச்சு
கட்டங்கட்டி வெதச்சாச்சு
பாத்திகட்டி பாத்தாச்சு

வெந்த நிலம் வெடுச்சாச்சு
வெதச்ச வயிறும் காஞ்சாச்சு
வெதச்சவனும் மாண்டாச்சு
கூடி குடும்பம் அழுதாச்சு

விளைநிலமும் வித்தாச்சு
கூலி தேடி போயாச்சு
பசியாற பணமாச்சு
நல்வாழ்வும் கிடைச்சாச்சு…

– அந்தியூரான் ஸ்ரீராம் பழனிசாமி


கூடு(வீடு)

ஒரு பறவையின்
ராகத்தில்
கூட்டை தொலைத்த
கானம்

வண்டியில்
அடுக்கிவைக்கப்பட்ட
மரத்துண்டுகளை கண்டு
கூக்குரலிட்ட பறவை
வண்டியின் பின்னால்
தொடர்கிறது..

வாழும் விரயத்தில்
களைத்திருந்தாலும்
ஓய்வுக்கு ஒரு கூடு
உயிர்களின் தேவை.

பொய்யாமொழி, தருமபுரி


சாபம்

இரவு முழுவதும்
சொட்டிக்கொண்டிருந்தது
வானம்..
புதிதாக கட்டப்பட்ட
கூட்டிற்க்குள்
அப்பொழுதே குடிபெயர்ந்த
தாய் சேய் பறவைகள்
தெப்பக்காடாக நனைந்திருந்தன..

என்றும் இல்லாதது போல்
வானமின்று செக்கசிவந்து
வெம்மை வீசியது..
அது தாய்ப்பறவையின்
சாபமென அதற்கு மட்டுமே
தெரிந்திருந்தது.. – kavithai thoguppu 29

– நேசம்

You may also like...

8 Responses

  1. Kavi devika says:

    அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

  2. Nachiyar says:

    வாழ்க வளமுடன். மிக அருமை

  3. உஷாமுத்துராமன் says:

    அருமையான கவிதை மழையில் நனைந்தேன். பாராட்டுக்கள்

  4. surendran sambandam says:

    கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது

  5. பொய்யாமொழி says:

    அனைத்து கவிதைகளும் அருமை. எழுதிய கவிஞர்களுக்கும் வெளியிட்ட நீரோடைக்கும் நன்றி.

  6. Priyaprabhu says:

    கவிதைகள் நன்று..
    வாழ்த்துகள் 💐💐

  7. தி.வள்ளி says:

    உழைத்தால் கலைவாணியே வீணையைஅடகு வைப்பார் என்று சொல்லும் மகேஷ் …கரையான் அரித்த காகிதமாய் நினைவுகளை சொல்லும் கவிதை ஆகட்டும்..கானல் நீர் வாழ்க்கை கூட்டைதொலைத்த பறவை ..பறவையின் சாபம் என அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  8. கதிர் says:

    சலீம், மகேஸ், ஸ்ரீராம், நேசம், பொய்யாமொழி அனைவருக்கும் வாழ்த்துக்கள்… வரிகள் அருமை.. தொடர்ந்து எழுதவும் அன்பர்களே..