கதை நீரோடை – சிறுவர் கதை 1

நம்மை சுற்றி உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் பேசுவதை நினைப்பதை நாம் கேட்கும் நிலை வந்தால் என்னவாகும் – kids story talking animals.

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன் ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான்.

மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்று பேசினாலும் இன்றுமுதல் உனக்குக் கேட்கும், இப்படிப்பட்ட ஆற்றல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடித்து நீ இறந்து விடுவாய். போய் வா, என்றான்.
துறவியை வணங்கிவிட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான் அவன். வழியில் இருந்த விலங்குகள் பறவைகள் பேசிக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தற்செயலாகக் கிடைத்த விந்தையான ஆற்றலை எண்ணி மகிழ்ந்தான் அவன்.

இரவு நேரம், அவனும் அரசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், அப்போது சிறிதளவு தேனும் ஒரு உருண்டை சோறும் தவறித் தரையில் விழுந்தன.

அங்கிருந்த எறும்பு ஒன்று, ஓடி வாருங்கள், கூட்டமாக ஓடி வாருங்கள், நமக்கு இனி உணவுப் பஞ்சமே இல்லை. அரண்மனை மதுக் குடம் உடைந்து தேன் வெள்ளமாகப் பாய்கிறது. பெருஞ்சோற்று மலையே நமக்காகக் கிடக்கிறது, என்று உரத்த குரலில் தன் கூட்டத்தை அழைத்தது.

இதைக் கேட்ட அரசன், இரண்டு சொட்டு தேன், தேன் வெள்ளமா? ஒரு உருண்டை சோறு பெருஞ்சோற்று மலையா? இந்த எறும்பிற்கு அறிவே இல்லையா? இப்படியா வருணிப்பது? என்று நினைத்தான், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை – kids story talking animals.

தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான்.
அருகிலிருந்து அரசி, ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள்.
ஒன்றும் இல்லை, என்று மழுப்பினான் அவன்.

சாப்பிட்டு முடித்த அரசன் பட்டு மெத்தையில் படுத்தேன். அரசி வெற்றிலை பாக்கு மடித்துத் தந்து கொண்டிருந்தாள். அறையில் இனிய மணம் பரவியது.

அங்கிருந்த ஆண் ஈ ஒன்று, பெண் ஈயை அழைத்து, எவ்வளவு இனிய சூழல் வா! நாம் இருவரும் அரசனின் முதுகில் இருந்து ஓடியாடி விளையாடுவோம். மகிழ்ச்சியா இருப்போம். இதைப் போன்ற நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? என்றது.

எனது முதுகு இந்த ஈக்களுக்கு மெத்தையா? என்று நினைத்தான் அரசன். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மீண்டும் கலகலவென்று சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டாள் அரசி.
ஒன்றும் இல்லை, என்ற வழக்கம் போல மழுப்பினான்.

உண்மையைச் சொல்லுங்கள். என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லாவிட்டால் நான் இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன். என் மீது உயிரையே வைத்திருப்பதாக நீங்கள் சொன்னதெல்லாம் நடிப்பு, என்று கோபத்துடன் சொன்னாள் அவள்.

என் உயிருக்கும் மேலாக நான் உன்னிடம் அன்பு வைத்திருக்கிறேன். நான் சிரித்ததற்கான காரணம் மட்டும் கேட்காதே என்றான் அவன்.

நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும், என்று வற்புறுத்தினாள் அவள்.
உண்மையைச் சொன்னால் என் உயிர் போய்விடும், என்றான் அவன்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் சிரித்ததற்கான காரணம் எனக்கு தெரிய வேண்டும், என்று அடம்பிடித்தாள் அவள்.

என்ன செய்தாலும் தன் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்தான்.
என் உயிரைவிட உனக்கு நான் சிரித்ததற்கான காரணம் தெரிய வேண்டும். நாளை மாலையில் உனக்கு அந்த உண்மையைச் சொல்கிறேன். அப்படியே என் பிண ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்து வை. என்று வருத்தத்துடன் சொன்னான் அவன்.

பொழுது விடிந்தது. வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவ வந்தான் அவன். மாலையில் இறக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சோகமாக இருந்தான். அரண்மனை முழுவதையும் அரசன் இறக்கப் போகும் செய்தி பரவி இருந்தது. உலாவிக் கொண்டிருந்த அவன் பின்னால் வளர்ப்பு நாய் சோகமாக கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் அரண்மனைச் சேவல் பெட்டைக் கோழிகள் சூழ ஆரவாரமாக உலாவிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நாயால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏ! சேவலே! உனக்குச் சிறிது கூட நன்றி கிடையாதா? நமக்கு இவ்வளவு காலம் உணவு அளித்துக் காப்பாற்றியவர் இந்த அரசர். இன்று மாலை இவர் இறக்கப் போகிறார். எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயே? இது நியாயமா? என்று கேட்டது.

அதற்குச் சேவல், நம் அரசர் பெரிய முட்டாள். அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவி. அவளுக்காக உயிரைவிடத் துணிந்துள்ளார். எனக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் நீயே பார். என் பேச்சைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தருவேன். மனைவிக்காக இந்த அருமையான உயிரை நான் இழக்க மாட்டேன், என்று பதில் சொன்னது.

இந்தச் சிக்கலில் அரசர் உயிர் பிழைக்க வழி இருக்கிறதா? என்று கேட்டது நாய். அரசர் மட்டும் அரசியிடம் உன்னைச் சவுக்கால் நூறு அடி அடிப்பேன். அதன் பிறகுதான் உண்மையைச் சொல்வேன் என்று சொல்லட்டும். எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்றது சேவல்.

நாயும் சேவலும் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டான் அரசன். அரண்மனை திரும்பினான், மாலை நேரம் வந்தது. அவன் அருகே வந்த அரசி, இப்பொழுது உண்மையைச் சொல்கிறீர்களா? என்று கேட்டாள். நீ முதலில் சவுக்கால் நூறு அடி பெற வேண்டும். அதன்பிறகு நான் உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து விடுவேன், என்றான் அரசன்.

நான் சவுக்கடி பெற்றுக் கொள்கிறேன். எப்படியும் உண்மை தெரிந்தாக வேண்டும், என்றாள், அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அரசன். கையில் சவுக்கை எடுத்த அவன் அவளை ஓங்கி அடித்தான். பத்து அடியைக் கூட அவளால் தாங்க முடியவில்லை. மென்மையான அவளது உடலிலிருந்து குருதி கசியத் தொடங்கியது. ஐயோ! போதும் அடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் உண்மையும் வேண்டாம். சவுக்கடியும் வேண்டாம், என்று அலறினாள் அவள்.

சவுக்கால் அடிப்பதை நிறுத்தினான். அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். [நன்றி முகநூல் நண்பர்]

You may also like...