நீரோடை பெண் நூல் ஒரு பார்வை
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”
என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….
தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய பலாச்சுளை போல தேமதுரமாய் தித்திக்கும் – neerodaippen puthaga vimarsanam
மூன்றெழுத்து மந்திரச்சொல்
எழில் வதனம் காட்டும் தெளிந்த நீரோடை போல் கவிஞரின் அகம் காட்டிச் செல்கிறது அத்தனை கவிதைகளும். ஆங்காங்கே உருண்டோடும் கூழாங்கற்களைப் போல படிப்பவர் மனதிலும் நினைவலைகள் உருண்டோடத்தான் செய்கிறது .கடந்த கால நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் அணு அணுவாய் ரசித்து இன்புற தூண்டியிருக்கிறார் கவிஞர். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழை நீரோடை பெண்ணாக , தமிழச்சியாக உருவகம் கொண்ட தென்னகத்தில் உதித்த அத்தனை அன்பினையும் அதன் ஆழத்தையும் தன் கவிவரிகள் மூலம் அழகாய் தீட்டியுள்ளார் கவிஞர்.
தியாகத் தாய்
தியாகத் தாய் என்று கவி வரிகளில் ஆதியில் தன் தாயை வணங்கி துவங்குகிறார் கவிஞர். அடுத்ததாக அப்பாவை போற்றுவிட்டு, தான் வாழ்ந்த கிராமம், தமிழச்சியின் நீரோடை பெண், சந்தன நிலவு, பொக்கிஷம் என்று அடுத்தடுத்து காதல் தலைப்புகளில் நம்மை திக்குமுக்காடி திகைக்க வைக்கிறார் கவிஞர் – neerodaippen puthaga vimarsanam.
மூன்றெழுத்து மந்திரச்சொல் கவிஞருக்குள் செய்த அற்புதங்கள்,
“உன் தியாகத்திற்கு கைமாறு
செய்ய நினைத்து
என் அஸ்தியை
உன் பாதம் படும் புற்களுக்கு
உரமாய் இட்டாலும்
ஈடாகாது தாயே !!!
நீ இன்றி வேறு இல்லை
என் வேர் இல்லை “
எல்லோரும் தாயை போற்றி வணங்கி இருக்கிறோம் ஆனால் இங்கு கவிஞரோ ஒருபடி சற்று மேலாக போய் தனது அஸ்தியையும் கூட தாயின் பாதம் படும் புற்களுக்கு உரமாக இட்டாலும் ஈடாகாது என்று அவரது தாய்மையின் அதித அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .
தந்தையை இங்கு அவர் தவமாய் தவமிருந்து வரமாய் பெற்றாரோ என்னவோ!
“வாழ்வில் விழுந்ததற்கும்
வீழாமல் இருப்பதற்கும்
அகப்புற காயங்களுக்கும்
மருந்திட்டு உணர்வில்
ஊக்கமளித்த உன்னத
உறவே நீர்தான் “
மகள்களை விட மகன்களுக்கும் அப்பாவின் அன்பு தெரியும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.
“உன்னை
உனக்காக
உன்னையே
வாழ்வாதாரமாக கொண்ட
புரட்சிகர நான் “….
அவளுக்காக கவிதை படைக்கபட்டதா இல்லை கவிதைக்காகவே கவிஞர் உதித்துவிட்டாரா…. சிறிய சொல்லில் எத்தனை ஆழமான காதல் புரட்சி….
“முதல்நாள் மகவின்
கடவுள் சிரிப்பை
இரவெல்லாம் கண் விழித்து
கண் சிமிட்டாமல் ரசித்ததை போல ……”
அவளின் புன்னகை தான் இவருக்கு இரவு நேர தாலாட்டோ என்று ஏக்கம் கொள்ள வைக்கும் அழகிய வரிகள்.
தோன்றியது என்றாலும் தலைமை
எத்தனை பிறவி
எடுத்தாலும்
பயன் அவளை
வர்ணித்துவிட்ட பூரிப்பில்
மை தீர்ந்த பேனாக்கள் …
தனது பேனாக்களின் பூர்வஜென்ம புண்ணியம் தன்னவளின் அழகைப் பற்றி கவிதை எழுதுவதுதான் என்று அழகாக கூறுகிறார் கவிஞர்…அவளை பற்றி எழுதும் போது மை கள் கூட பலவண்ண எண்ணம் கொள்கிறதோ….
கண்களில் கண்ட
உன் அழகை வழியெல்லாம்
வரைந்து வைத்தேன்
விண்ணில் பார்த்த நிலவை
அன்று
மண்ணில் பார்த்தது உலகம்…..
“பிரம்மனே…
எப்படி முடிந்தது
உன்னால்
என் நிலவைப்போல்
இன்னொரு நிலவை
புவியில் படைக்க “
நிலவோடு ஒப்பிட்டு காதலியை கூறும் கவிஞர்கள் மத்தியில் இவர் சற்று வித்தியாசப்படுகிறார்…. தன்னவளை படைத்த பிரம்மனையே வம்புக்கு இழுக்கிறார்… தன் காதலியை ப்பார்த்து தான் பிரம்மன் நிலவை படைத்தார் என்று சொன்னாலும் சொல்லுவார்.
“அந்த உருவம் யாருக்கு
வேண்டுமானாலும் சொந்தமாகலாம்
என் பார்வை நரம்புகளை உடைத்து
பதிந்த பிம்பம்
எனக்கு மட்டுமே …..”
அவளது புகைப்படம் கூட கவிஞரின் காதல் வரிக்கண்டு காதல் கொள்ளும் -neerodaippen puthaga vimarsanam .
பூக்களில் இளைப்பாறும் வண்ணத்துபூச்சியாய்
“பால்மனமாறா பாலகர்கள்
எல்லாம் பாலூட்டி வளர்த்த
அநாதை நாய்க்குட்டிகள்”
தன் கிராமத்தை பற்றி அவர் எழுதிய பசுமை மாறா பால்ய கதைகளின் நிகழ்வுகள் நம் கண்முன்னே காட்சிபடுத்துகிறது நினைவுகளை…..
நீரோடையாய் தடையின்றி தெளிவாய் ஓடிக்கொண்டிருக்கிறதோ கவிஞரின் காதல் உள்ளம்…. என்று தோன்றுகிறது காதல் கவி வரிகளை காண்கையில்….. நீரோடையின் கரைதனில் நின்று ரசித்து பூங்காற்றின் மெல்லிசைக்கு தலையாட்டும் நாணலாய்… இந்த கவிதை புத்தகத்தின் வாசகியாய்…. கவிதை பூக்களில் இளைப்பாறும் வண்ணத்துபூச்சியாய்…. நான்….
இன்னும் இன்னும் படிக்கத்தூண்டும் கவிஞரின் கவிதைகள் ….. அவசர உலகில் ஆரவாரமாக ஓடி,களைத்து அயர்ந்து கிடக்கும் மனதிற்கு, புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக ,காதலின் இனிமையை உள்ளத்தில் நிறுத்துகிறது….
மிதமாய் வருடும் மயிலிறகாய்….. மனதுக்குள் மலரும் கவிதைப்பூ இதமாய்….. மேலும் மேலும் கவிதைப்பூக்கள் மலர்ந்து செழித்து வாசம் பரவ… பல புகழ் விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞருக்கு….
– அன்புடன் கவி தேவிகா, தென்காசி
தொடர்ந்து படைத்திட வாழ்த்துகள் நண்பர் மகேஷ்
கவித் தென்றலுக்கு வாழ்த்துகள்
கவிதைகள் மிகவும் அருமை..
அந்த உருவம் யாருக்கு
வேண்டுமானாலும் சொந்தமாகலாம்
என் பார்வை நரம்புகளை உடைத்து
பதிந்த பிம்பம்
எனக்கு மட்டுமே …..”
அழகு.. அழகு..
தொடரட்டும் நின் பணி..
கவிதைகள் எழுதிய கவிஞருக்கும், வாழ்த்து பாடிய கவி தேவிகாவுக்கும் வாழ்த்துகள். அருமை.
கவிதைகள் அருமை என்றால் ….கவிதைகளுக்கு முகவரி வழங்கிய பெண் கவியின் வார்த்தைகள் மிக அருமை …கவி தென்றல் மகேஷ் மேலும் வளர்ந்து இன்னும் பல நூல்களை எழுத வாழ்த்துக்கள்..அருமையாக விமர்சனம் அளித்த சகோதரி கவி தேவிகாவுக்கு நன்றிகள்.