பொங்கல் பரிசு – சிறுகதை

கதாசிரியர், கவிஞர் அனுமாலா அவர்கள் எழுதிய நெஞ்சைத்தொடும் விவசாய குடும்பத்தை மையமாக வைத்து எழுதிய கதை – pongal parisu sirukathai

“மீனாட்சி…மீனாட்சி” என்று கூப்பிட்டார் சொர்ணாம்பாள்.
“மாமீ இதோ வந்துட்டேன்”
“வாசல்ல போயி நம்ம முனியாண்டி இருக்கானா பாரு. இல்லேன்னா மாமாவையாவது கொஞ்சம் உள்ளே வரச்சொல்லு” என்றார் சொர்ணாம்பாள். “என்ன ஆச்சும்மா? எதுக்கு கூப்பிடுறே?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் கைலாசம் அய்யர்.

கைலாசம் தம்பதியினர்

“நம்ம கார்த்திக் வரானோல்லியோ அதுனாலே மாடியிலே அவன் ரூமை சுத்தம் செஞ்சு, கர்ட்டன் மாத்தி ..எல்லாம் செய்யணும் இல்லையா? சங்கராந்தி வேற வருது. வீடு மொத்தமும் ஒட்டடை அடிக்கணும், தொடைக்கணும், நிறைய வேலை இருக்கு. அதான் எப்போ செய்வான் என்று கேட்க முனியாண்டியை கூப்பிட்டேன்” என்றார் சொர்ணாம்பாள்.

“நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு அவன் ரெண்டு .ஆட்களோளோட வந்து, சுத்தம் செஞ்சு, நீ சொல்ற எல்லா வேலையையும் செய்வான். நீ பக்கத்தில் இருந்து பாத்துக்கோ” என்றார் கைலாசம். சீர்காழி ஒரு சின்ன டவுன். மாயவரத்தில் இருந்து ஒரு ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.. அந்த ஊரில்தான் கைலாசம் தம்பதியினர் அவர்களுடைய நூறு வருட பழமையான பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

வீடு பழசு என்றாலும் அவ்வப்பொழுது தேவையான மராமத்து வேலைகளை செய்து நல்ல முறையில் பராமரித்து வந்தார்கள். அந்த ஊரிலேயே பெரிய வீடு அவர்களுடையது. கைலாசம் பல ஏக்கர் நிலம் வைத்து சாகுபடி செய்துகொண்டிருக்கும் ஒரு சிறிய மிராசுதார். ஊர் மக்களுக்கெல்லாம் உதவுகின்ற பெரிய பரோபகாரி. அதனால், அவர் வீட்டு வேலை என்று கூப்பிட்டால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தட்டாமல் உடனே வந்து வேலை செய்வார்கள்.

கைலாசம் அய்யர், சொர்ணாம்பாள் தம்பதியின் ஒரே மகன் கார்த்திக். அவன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் அமெரிக்காவில் பெரிய வேலையில் நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவியும் அங்கு ஒரு நல்ல வேலையில் இருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வந்து பெற்றோருடன் தங்கி செல்வான். அவ்வப்பொழுது இவர்களும் அங்கு செல்வதுண்டு. இந்த முறை, பொங்கல் சமயத்தில் வருவதாகவும் சென்னையில் ஒரு வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறி ஒரு பத்து நாட்கள் தங்கி செல்வதாக சொல்லியிருந்தான் – pongal parisu sirukathai.

வீட்டையும், நிலத்தையும் பாத்துக்க

சொர்ணாம்பாள் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள் வாங்கி வைத்திருப்பதுடன் வீட்டிலும் செய்து வைத்திருந்தார். பையனையும், பேரனையும் எதிர் நோக்கி காத்திருந்தார். போகிக்கு முதல் நாள் கார்த்திக் அவன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான். நேரம் குதூகலமாக சென்றது. போகி பண்டிகை முடிந்து உணவு சாப்பிட்ட பிறகு அனைவரும் கூடத்தில் உட்கார்ந்தனர். “அப்பா, உங்களுடன் சிறிது பேசவேண்டும்” என்று ஆரம்பித்தான் கார்த்திக்.

“உங்கள் ரெண்டு பேருக்குமே வயசாகிக்கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள் இங்கே தனியா இருக்க போறீங்க? சென்னையில் நான் வாங்கும் பெரிய வீடு உங்களுக்காகத்தான். நீங்கள் அங்கே வந்து தங்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நீங்கள் இங்கே இருப்பதை விட அங்கே இருந்தால், எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். மருத்துவ வசதிகளும் அங்கே நிறைய உண்டு. இங்கே இந்த வீட்டையும், நிலத்தையும் பாத்துக்க பாண்டியன் மாமா இருக்காரு” என்றான் கார்த்திக்.

“இந்த மண்ணை விட்டு எங்களால எப்படியப்பா வர முடியும்? முடியற வரைக்கும் இங்கேயே இருந்துடறோம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர நிறைய பேர் இருக்காங்க. ஏதாவது உடம்புன்னா கூட, ஒரு மணி நேரத்தில் மாயவரம் சென்று விடலாம். அதோடு இல்லாமல், நம்ம வயல், தோப்பு எல்லாவற்றையும் நாம இருந்து பார்த்தால்தான் நன்றாக இருக்கும். இல்லையென்றால், குத்தகைக்கு விடணும். என்னால முடியற வரைக்கும் நான் செஞ்சிடறேன்” என்றார் கைலாசம் அய்யர்.

கார்த்திக்கிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. அவன் அப்பா ஒரு முடிவு எடுத்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்பது அவனுக்கு தெரியும். அதனால் பேச்சை மாற்றினான். “அப்பா எல்லாருக்கும் பொங்கல் பரிசு கொடுத்துடீங்களா?” “எல்லாம் நாளைக்குதான்டா. அறுவடை முடிஞ்சு வர்ற நெல்லை எல்லாருக்கும் கொடுக்கணும். கரும்பு, வெல்லம், பருப்பு எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நம்ம பண்ணையில் வேலை செய்யிற எல்லாருக்கும் கொடுக்க வேட்டி, புடவை எல்லாம் கூட வாங்கி வச்சிருக்கேன்.” என்றார் கைலாசம்.

ரெண்டு மூட்டை நெல்

“பாண்டியன் மாமாவுக்கு? அவரு நம்ம தாத்தா காலத்திலிருந்து நம்ம கூடவே இருக்கார் இல்லையாப்பா அவருக்கு தனியாக ஏதாவது செய்யப்போறீங்களா?” என்று கேட்ட கார்த்திக்கிற்கு, “அவருக்கு ரெண்டு மூட்டை நெல் அதிகமாக கொடுத்து, ரூபாய் பத்தாயிரம் ரொக்கமும் சேத்து கொடுப்பேன்” என்றார் கைலாசம். “எனக்கு ஒரு யோசனை தோணுதுப்பா என்றான் கார்த்திக். உங்க காலத்துக்கு அப்புறம் இந்த நிலத்தையெல்லாம் நான் எப்படி பார்த்துக்கொள்ள முடியும்? அப்பப்போ நம்ம குலதெய்வ கோவிலுக்கு வருவேன்.

நம்ம வீட்டில் தங்குவேன். அப்போ இந்த நிலத்தையும் விளைச்சலையும் பார்க்கணும் என்றால் அதற்கென்று தனியாக நமக்கு ரொம்ப
வேண்டப்பட்டவர்கள் யாராவது இருந்தால்தான் சரியாக இருக்கும். உங்க காலத்திலேயே பாண்டியன் மாமாவை உங்க பார்ட்னரா சேத்துக்குங்க வருடாந்தர விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அவருக்குன்னு சொல்லுங்க. நீங்க அவருக்கு கொடுக்கிற பொங்கல் பரிசாக இது இருக்கட்டும். நம்ம நிலத்தில வேலை செய்யறவங்க இல்லாம நாம இல்லே. அதனாலதான் சொல்றேன்.

“இன்னும் ஒரு யோசனை கூட இருக்கு. நம்ம பண்ணையில மொத்தம் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்?” என்று கேட்டான் கார்த்திக்.

கொரோனா காலத்தில்

“பாண்டியன் தவிர நான்கு பேர் இருக்காங்க. இவங்க மட்டுமில்ல்லாமல், நெல் விதைக்கிறப்போவும், அறுவடை நேரத்திலேயும் தினசரி கூலிக்கும் பல ஆட்கள் வேலை செய்வதுண்டு” என்றார் கைலாசம். “அப்பா, அந்த நாலு பேருக்கும் நம்ம நிலத்திலிருந்து ஒவ்வொரு ஏக்கர் நிலத்தை அவங்கவங்க பெயருக்கு பத்திரம் செஞ்சுடலாம்ப்பா. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?” என்றான் கார்த்திக்.

“நான் என்னப்பா சொல்லப்போறேன். நீயும் அப்பாவும் சொன்னால் சரி. இப்போவே நம்மகிட்டே வேலை செய்யறவங்க எல்லாத்துக்கும் அப்பப்போ மூட்டை மூட்டையா அரிசியும் கொடுத்து, பணமும் கொடுத்துக்கிட்டிருக்காரு உங்க அப்பா. கொரோனா காலத்திலேயும் எல்லா உதவிகளும் செஞ்சார். புயல் அடிச்சப்ப, அத்தனை பேரையும் நம்ம கோடவுனில் தங்க வச்சு, சாப்பாடு போட்டாரூ. அதனால, நீ சொல்றபடி செய்தால் பாண்டியனும் ரொம்ப
சந்தோஷப்படுவார்” என்றார் சொர்ணம்பாள்.

uzhavan em thalaivan

அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் பாண்டியன். கார்த்திக்கை பார்த்து, “தம்பி நல்லா இருக்கீங்களா? குட்டி பையா, தாத்தாகிட்டே ஓடிவா” என்று பேரனை எடுத்தது கொஞ்சினார். “பாண்டியா, உனக்கு நூறு வயசு. உன்னை பத்திதான் பேசிக்கிட்டிருந்தோம். நீயே வந்துட்டே. உன்கிட்டே கார்த்திக் ஏதோ சொல்லணுமாம்” என்றார் கைலாசம். அதற்கு பாண்டியன் “சொல்லுங்க தம்பி” என்றார்.

“ஐயா, கொஞ்சம் உட்காருங்க. இந்த வருஷத்துல இருந்து நீங்க அப்பாவோட பார்ட்னர் ஆகப்போறீங்க. அதாவது, விளைச்சலில் மூணுல ஒரு பங்கு உங்களுக்கு. என்ன சொல்றீங்க? உங்களுக்கு சந்தோஷம்தான்?” என்றான் கார்த்திக். “ஐயா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏற்கனேவே ஐயா எங்களுக்கு எவ்வளவோ உதவிகள் எல்லாமும் செஞ்சுக்கிட்டிருக்காரு. இப்போ நீங்க சொல்றதை கேட்டால், என்ன சொல்றதுன்னே தெரியலை. இன்னிக்கு என் குடும்பம் நல்லா இருக்குன்னா அதுக்கு அய்யாதான் காரணம். என் பையன் எப்படியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் நிலம் தனியா வாங்கி விட்டான்.

ஐயா தயவிலே சின்னதா ஒரு வீடு கூட கட்டி விட்டேன். மகள்களை எல்லாம்
கட்டிக் கொடுத்துட்டேன். சாகிற வரைக்கும் இப்படியே ஐயா கூட இருந்துடுவேன். எனக்கு எதுக்கு பங்கெல்லாம்?” என்றார் பாண்டியன் – pongal parisu sirukathai.

“உங்க வயசான காலத்திலே உட்கார்ந்து சாப்பிட ஓய்வு ஊதியம் இது. யாரையும் நம்பி நீங்க இருக்கவேண்டாம் பாருங்க அதுக்குதான்” என்றான் கார்த்திக். கண்களில் கண்ணீர் பொங்க கார்த்திக்கின் கைகளை பிடித்துக்கொண்டார் பாண்டியன். “என்ன சொல்றது தம்பி? என்னையும் என் சம்சாரத்தையும் வயசான காலத்துல உட்கார்ந்து சாப்பிட சொல்றீங்க”. “இன்னொரு விஷயம். நம்ம பண்ணையில் வேலை செய்யறாங்களே நாலு பேரு அவங்க ஒவ்வொருத்தர் பெயரிலேயும் ஒரு ஏக்கர் நிலத்தை பத்திரம் பண்ணிடலாம். அதையும் இந்த பொங்கல் முடிஞ்ச கையோடயே செஞ்சிரலாம். பத்திரம் நம் அப்பா கையிலேயே இருக்கட்டும்.

அவங்க நாலு பேரும் அதன் விளைச்சலை மட்டும் அனுபவிக்கட்டும். பத்திரத்தை கொடுத்தா, எங்கேயாவது அடகு வச்சிடுவாங்க” என்றான் கார்த்திக். “எவ்வளவு பெரிய மனசு தம்பி உங்களுக்கு” என்றார் பாண்டியன். “ஐயா, நீங்க எல்லாரும் உழைக்கிற உழைப்புதான் எங்களுக்கு சோறு போடுது. அதற்கான நன்றிக்கடன்தான் இந்த பொங்கல் பரிசு என்று வைத்துக்கொள்ளுங்களேன்” என்றான் கார்த்திக்.

உழவர்களும் உழவு தொழிலும் இல்லையென்றால் இன்று உலகமே நின்று போய்விடும். உணவு உண்ணும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்தால் உழவர்களின் வாழ்க்கை தரம் மாறும். கிராமங்கள் எல்லாம் உயர்வடையும்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்”

– அனுமாலா

You may also like...

9 Responses

  1. SIVARAMAKRISHNAN says:

    கதை சிறப்பு…வாழ்த்துகள்..

  2. S. V. Rangarajan says:

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.வித்தியாசமான முறை யில் வடிவமைக்கப்பட்ட கதை

  3. NithyaLakshmi says:

    அருமை.. உழவுத் தொழிலின் சிறப்பை அனைவரும் அறிய வேண்டும்..

  4. N. shanmugapriya says:

    அருமை…. ஆனால் நிஜத்தில் யாரும் இது மாதிரி யாரும் யாருக்கும் உதவுவது இல்லை என்பது தான் நிதர்சனம்….கதை சூப்பர்…

  5. Priyaprabhu says:

    கதை நன்றாக இருந்தது.. நல்ல கருத்து.. வாழ்த்துகள் 💐💐

  6. Jayanthi Sridhar says:

    நல்ல அருமையான கதை. உழைப்பின் மதிப்பை உணர்ந்து பங்குதாரர் ஆக்கும் உன்னதமான மனது…

  7. surendran sambandam says:

    பொங்கல் பரிசு உண்மை யில் எங்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசு

  8. ராதிகா says:

    கார்த்திக்கின் நல்ல மனமும்,எதிர்கால நோக்கும்
    இருந்தால் ஊர் உயர நாடுயரும்!

  9. N.shanmugapriya says:

    என்ன ஒரு அருமையான கதை…. வாழ்த்துக்கள்..