ஒரு தேவதை வந்துவிட்டாள்
கவிஞர், கதாசிரியர் தி.வள்ளி அவர்களின் மனதை வருடும் கதை மற்றும் கதைக்களம் “ஒரு தேவதை வந்துவிட்டாள்” – tamil short stories
பூஜையை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்த ராஜலட்சுமி, கணவன் சுந்தரராஜனைப் பார்த்து “என்னங்க! நம்ம பவித்ரா கல்யாணம் முடிவானதும் தான் மனசு நிம்மதியாச்சு” என்றாள்.
“உண்மையிலேயே பெரிய பாரம் இறங்கிய மாதிரிதான் இருக்கு” என்றார் சுந்தரராஜன்.
“அப்பா!மாப்பிள்ளை விஜய் ஸ்மார்ட்டாக இருக்கிறார். மல்டி நேஷனல் கம்பெனியில் நல்ல வேலை. பவி அதிர்ஷ்டசாலிதான்” என்றான் ராஜியின் செல்ல மகன் ஆகாஷ்.
“விஜய் தங்கை ரித்திகா கூட நல்ல கலகலப்பாக பழகுறா” என்று பவியின் அண்ணி அபிராமியும் தன் பங்குக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்த, வீடே கலகலப்பானது.
“ஆகாஷ்! கல்யாணத்தை சிறப்பாக நடத்திடணும். ஒரு குறையும் வைக்கக் கூடாது. மடமடவென வேலைகளைப் பார்க்க வேண்டும். முதல்ல கல்யாண மண்டபம் முடிவு பண்ண வேண்டும் அப்புறம்தான் மத்த வேலையெல்லாம்”
“பட்ஜெட் போட்டுக்குவோம் அப்பா. நான் ஆபீஸ்ல லோன் போடுகிறேன்” என்றான் ஆகாஷ். – tamil short stories
” மாமா நானும் ஆபீஸ்ல லோன் போடுறேன்” என்றாள் அபி.
“அபி! தேவைப்பட்டா பார்த்துக்கலாம்மா. இப்ப நீ லோன் போட வேண்டாம்” என்றார் சுந்தரராஜன்.
பவித்ராவும், அபிராமியும் கடைக்குப் போய் வாங்க வேண்டியவையெல்லாம் வாங்கி வந்தார்கள். அபிராமியும் ஆபீஸுக்கு லீவு போட்டு அவ்வப்போது அத்தைக்கு உதவியாக எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
கல்யாண பயமா
இரவு அண்ணியின் ரூமுக்குள் நுழைந்தாள் பவி. எல்லா வேலையும் முடித்தபிறகு திருமண அழைப்பிதழ்களில் அட்ரஸ் எழுதிக்கொண்டிருந்த அபிராமியை பார்த்து கண் கலங்கினாள் பவி.
“அசடு! எதுக்கு கண் கலங்குற? கல்யாண பயமா?” என்றாள் கேலியாக.
“இல்ல அண்ணி! நீங்க தான் என் மேல் எவ்வளவு அன்பா இருக்கீங்க? கலையரசி யாவது உங்க கூடப் பிறந்த தங்கை. நான் உங்களுக்கு நாத்தனார். ஆனா வித்தியாசம் இல்லாம எப்படி செய்றீங்க? என்றாள்
“பவி! எனக்கு நீயும் ஒண்ணுதான்… கலையும் ஒண்ணுதான்… கலை என் கூட பிறந்தவ. நீ ஆகாஷ் கூட பிறந்தவ. என்ன வித்தியாசம் சொல்லு?” என்றாள்.
“இருந்தாலும் அண்ணி! உங்க மனசு யாருக்கும் வராது!” என்று சொல்லி அவளை கட்டிக் கொண்டாள்.
கல்யாணம் ஜாம் ஜாமென முடிந்தது .மறுநாள் மறுவீடு… மாப்பிள்ளை வீட்டிற்கு எல்லோரும் கிளம்பினார். மணமக்களை விஜய்யின் தங்கை ரித்திகா ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
2000 ரூபாய் நோட்டு
“அண்ணா! ஆரத்தி தட்டில் பெரிய நோட்டை தான் போடணும்!” என்றாள். கேலியாக. நூறு ரூபாய் நோட்டை விஜய் எடுக்க… 500 ரூபாய் போட்டால் தான் உள்ளே விடுவேன்..” என்று ரித்திகா முரண்டு பண்ணினாள். என் அன்பு தங்கச்சிக்கு 2000 ரூபாய் நோட்டு… என்று ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை போட… சூழ்நிலையை கலகலப்பாக மாறிப்போனது.
பவியை உள்ளே அழைத்து விஜய்யின் அம்மா விளக்கேற்ற சொன்னார். பால் காய்ச்சி, பூஜை பண்ண விருந்து முடிந்ததும் எல்லோரும் ஓய்வாக அமைத்தனர். “பவி! நீ மாடியில் போய் உன் அறையில் ஓய்வு எடு!” என்று மாமியார் சொல்ல, காலையில் கட்டிய பட்டு புடவை கசகசக்க, சேலையை மாற்றி வருகிறேன்!” என்று சொல்லி கிளம்பினாள் பவி. மகளுடன் கூடவே படியேறினாள் ராஜி.
ரூமுக்குள் நுழைந்து தாள் போட்டவள்,” பவி! உன் மாமியார் நல்லவங்களா தான் தெரியிறாங்க. நாத்தனார் ஒருத்தி இருக்காளே.. அவ அம்மா கிட்ட ஏதாவது ஓதாம இருக்கணும். முதலிலேயே கரெக்டா இரு. ஆரத்தி தட்டுக்கே 500 ரூபா கேட்கறா மாப்பிள்ளையும் தாராளமா 2000 ரூபா நோட்ட போடுறாரு… அண்ணன் கிட்ட என்ன புடுங்க முடியுமோ அதை புடுங்கிடணும்ன்னு பார்ப்பா. ரொம்ப இடம் கொடுக்காதே.
மாமியார் கிட்டயும் பார்த்து நடந்துக்கோ…
என்னாலே இவ்வளவு தான் செய்ய முடியும்ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிடு! உன்ன புழிஞ்சு எடுத்திடப் போறாங்க… மாப்பிள்ளையை கைக்குள்ள போட்டுக்கோ.அவர் உன்னை கேட்டு தான் எதையும் செய்ற மாதிரி பாத்துக்கோ. மாப்பிள்ளை குடும்பத்துக்கு ரொம்ப செலவழிக்காமல் பார்த்துக்கோ.” – tamil short stories
“அம்மா நிறுத்துறியா உன் அபத்தமான அட்வைஸை!” கத்தினாள் பவி.
“நான் என்னடி புதுசா சொல்லிட்டேன்? கல்யாணமாகும் பொண்ணுக்கு அவங்க அம்மா புகுந்த வீட்ல எப்படி இருக்கணும்ன்னு சொல்லுறதைத்தான் சொல்றேன்.”
“போதும்மா உன் அட்வைஸ்! அபி அண்ணி கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வந்தாங்களே… அப்ப அவங்க அம்மா இப்படித்தான் அட்வைஸ் பண்ணிணாங்களா? அவங்க சொல்லி… அதை அண்ணி கேட்டிருந்தா உனக்கு ஒரு நல்ல மருமகள்.. எனக்கு ஒரு நல்ல அண்ணி கிடைச்சிருப்பாங்களா? அண்ணி என்ன கூட பிறந்த தங்கச்சியா நெனச்சுதான் பார்த்து பார்த்து செய்றாங்க!
புகுந்த வீட்டு உறவுகளை எதிரியா பார்க்கிறாங்க
நானும் அப்படித்தான் இருப்பேன்! இந்த குடும்பத்துக்கு ஒரு நல்ல மருமகளாக என் கடமையை செய்வேன். ரித்திகாவுக்கு ஒரு நல்ல அண்ணியா இருப்பேன். உன்னை போல அம்மாக்களோட போதனையால்தான் கல்யாணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டோட ஒட்ட முடியாமல் தவிக்கிறாங்க. புகுந்த வீட்டு உறவுகளை எதிரியா பார்க்கிறாங்க. தயவு செய்து நீயும் அந்த தப்பை செய்யாத! நான் நல்லபடியா நடந்து உனக்கும் அப்பாவுக்கும் நல்ல பேர் வாங்கி கொடுக்கணும்ன்னு நினை!” என்றாள் உறுதியாக.
தற்செயலாக மாடிக்கு வந்த ரித்திகாவின் காதில் இந்த வார்த்தைகள் விழ, கண்கள் கலங்கியது.’அண்ணி நானும் உங்களைப் போலவே இருப்பேன். உங்களோடு பாசத்தோடு பழகுவேன். எல்லாவற்றையும் விட, நான் கல்யாணமாகி புகுந்த வீடு போகும் போது உங்கள் வார்த்தைகள் கண்டிப்பாக என் காதில் ஒலிக்கும். இந்த வீட்டை ஆள ‘ஒரு தேவதை வந்து விட்டாள்’ என்று நினைத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ரித்திகா நிறைந்த மனதுடன்.
– தி.வள்ளி, திருநெல்வேலி
கதை நன்றாக இருக்கிறது
மிகவும் அருமையான கதை
களைகட்டட்டும் கதைகளம் சிறப்பாக.. வாழ்த்துகள் அம்மா
சிறப்பான கதை. வாழ்த்துகள்.
மிக்க நன்றி …ஊக்கம் தரும் வார்த்தைகள்.நன்றிகள் பல சகோதர..சகோதரிகளே