தாயார் சன்னதி – நூல் விமர்சனம்
கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு கட்டுரை. சுகாவின் நூலை வாசிக்க தூண்டும் புத்தக விமர்சனத்தை வாசிக்க மறவாதீர் – thaayaar sannathi puthaga vimarsanam
லாக்டவுண் நேரத்தில் இரண்டாவது முறையாக நான் படித்த புத்தகம் சுகாவின் தாயார் சன்னதி..எங்கள் நெல்லைச் சீமையின் பெருமை பேசும் புத்தகம். இப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியுள்ள வண்ணதாசன் அவர்கள் “அவர் யாரைப் பற்றி குறிப்பிடும்போதும் தாமிரபரணி ஆற்றின் ஈரம் சொட்டுகிறது ..” என்கிறார். “கடந்த 8 வருடங்களாக என்னுடன் இருந்தும் எனக்கு தெரியாமல் போன பிரத்தியோகமான சுகாவின் ஆற்றல் இது” என்று சிலாகிக்கிறார் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா.
கமலஹாசன் பெருமையாக கூறுவார்
கதையில் சுகாவின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு சிறுகதை போல உயிர்ப்புடன் இருக்கிறது. அவருடைய அனுபவங்களுக்கு கூடுதலாக சுருதி சேர்ப்பது வள்ளிநாயகம் அவர்களின் கருத்தோவியங்கள் .
சுகாவைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது ..இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யன். அவருடைய பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம் ஜொலிக்காமல் இருக்க முடியுமா? 20 ஆண்டுகள் திரைப்படத்துறையில் அனுபவம் வாய்ந்தவர். பாபநாசம் படத்தில் நீங்கள் கேட்கும் அழகு நெல்லைத்தமிழ் சுகாவின் சொல்வண்ணமே. கமலஹாசன் மிகப் பெருமையாக இதைக் கூறுவார்.
புத்தகத்திற்குள் போவோம்.. ஒவ்வொரு அத்தியாயமும் நெல்லை மக்களோடும், மண்ணோடும், அவருக்கான அனுபவத்தை சுவைபட கூறுகிறது. அவரது நண்பர்கள் ஒவ்வொருவரையும் பற்றி சுவைப்பட குறிப்பிடுகிறார். அதிலும் குஞ்சு என்ற குஞ்சுமணியை படிப்பவர்கள் மறக்கவே முடியாது .தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிப்பதை விவரிக்கும் போது நாமே குளிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. விஞ்சு விலாஸ் போல அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஒவ்வொரு கடையையும் மறக்காமல் குறிப்பிட்டு படிப்போரை நெகிழ வைக்கிறார் – thaayaar sannathi puthaga vimarsanam.
நண்பனுடன் திருச்செந்தூருக்கு சைக்கிளில் சென்று வந்த அனுபவம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தேரோட்டம் மற்றும் அதைச் சார்ந்த அவருடைய அனுபவங்கள் மிகவும் சுவையானவை. அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையாய் திகழ்கிறது.
அரசு பொருட்காட்சி
திருநெல்வேலியை விட்டு வேலை நிமித்தம் வெளியே வந்தாலும் ஊரை மறக்க முடியாமல் தவிர்ப்பவர் பலர் என்று கூறும் ஆசிரியர்…எழுத்தாளர் வண்ணநிலவனை அதற்கு உதாரணமாகக் காட்டுகிறார், சென்னையில் வசிப்பது ஒரு பெரிய வாளை கையில் வைத்துக்கொண்டு சண்டை போடுவது போல இருக்கிறது என்பது இவர் எண்ணம் .
உயிர்ப்புடன் நடமாடுகின்றனர்
திருநெல்வேலிகாரர்கள் சுகவாசிகள்… தாமிரபரணி தண்ணீரும், குறுக்குத்துறை காற்றும் ,நெல்லையப்பர் கோவிலும், இருட்டுக்கடை அல்வாவும் லேசில் அவர்களை அந்த ஊரை விட்டு எங்கும் நகர விடாது என்று அங்கலாய்க்கிறார்
வருடா வருடம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆனி மாதம் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி (இன்றும் நடக்கிறது) பற்றி அவர் விவரிக்கும் விதம் மிகவும் அருமை அதிலும் அவர் பெரியப்பாவுடன் ஜெயண்ட் வீலில் சுற்றி அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆங்காங்கே கதைப் போக்கில் சில கெட்ட வார்த்தைகளும் உண்டு . நெல்லையின் அவர் நடமாடிய தெருக்களும், இடங்களும், அவர் சந்தித்த மனிதர்களும், உயிர்ப்புடன் நடமாடுகின்றனர் அவர் வார்த்தையின் வண்ணத்தால்.
நெல்லை மக்களை மிகவும் கவர்ந்த ஒரு புத்தகம் என்றாலும், இதர பகுதியில் உள்ள மக்களும் ரசித்து படிக்க… இப்புத்தகத்தின் பதிப்புரை மூன்றையும் தாண்டி உள்ளது.மிக எதார்த்தமாக எல்லோரையும் கவரும் வண்ணம் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், கொஞ்சும் நெல்லை தமிழின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவசியம் அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்பது என் அவா..
– தி.வள்ளி, திருநெல்வேலி
அருமை… அருமை…
புத்தகமும்.. அதன் விமர்சனமும்..
நெல்லை புகழ் சொல்லும் நூல்… விமர்சனம் அருமை