ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam6
பாடல் – 26
“வை தோரைக் கூடவை யாதே – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய் யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கவலை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே”
விளக்கம்
மனிதா! நீ ஆருயிர் அனைத்திடத்திலும் அன்பும் இரக்கமும் கொள்க!
உன்னை பழித்தும் இழித்தும் வருந்தும் படியாக பேசியவரை, நீ திரும்ப அவரைப்போய் பண்பற்றுப் பேசுதல் கூடாது. இந்த மண்ணுலகமே பொய் பேசிப் பிழைத்தாலும், அதைப் பார்த்து நீயும் பொய் பேசுதல் அறம் ஆகாது! பிற உயிர்களிடம் நீ கொடுமைகள் செய்து துன்புறுத்தி பழியை ஈட்டக் கூடாது. பறவைகளைக் கண்டபோது பார்த்து அன்பு செய்ய வேண்டுமேயன்றி, அவற்றைக் கல்லால் எறித்து துயரம் தரக் கூடாது.
பாடல் – 27
“சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்கும்
தீங்கான சண்டையைச் சிறக்க தூண்டாதே
தவநிலையை விட்டுத் தாண்டாதே – நல்ல
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே”
விளக்கம்
மனிதா! நீ சிவச் செம்பொருளான அருட் பேரொளியே முழு முதற் கடவுளென்று வணங்கி வாழ்க! யாருக்கும் கேடு நேரிடும்படியான கலகத்தைத் தூண்டி தீவினை செய்யாதே. தவ ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தவறி விடாமல், அதையே நம்பி ஒழுகுக! அறிவு நெறியென்றும், பொது நெறியென்றும், ஒளி நெறியென்றும் போற்றப்படும் நன்மைதரும் சன்மார்க்கத்தை தழுவிப் போற்றுக. வேறு எந்த நூல் நெறியையும் விரும்பிக் கற்று வீண் போகாதே!
பாடல் – 28
“பாம்பினைப் பற்றியாட்டாதே – உந்தன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட்டாதே
வேம்பினை உலகில்ஊட்டாதே – உன்தன்
வீறாப்பு தன்னை விளங்கநாட்டாதே”
விளக்கம்
மனிதா! நீ நச்சுப் பாம்பினைப் பிடித்து விளையாடி, அதனால் அடிபட்டு சாகாதே! உனக்குரிய பத்தினியான கற்புடைய மனைவியையும் பிறரையும் குறைத்தும் பழித்தும் பேசாதே; வேம்பின் காய் போல கசப்பான செய்திகளை உலக மக்களிடம் சொல்லியூட்டாதே; உனது போலித்தனமான வாய் பேச்சால் வீறாப்பைக் காட்டி வாழ்விலே நல்லோரால் பழிக்கப்படாதே.
பாடல் – 29
“போற்றும் சடங்கைநண் ணாதே – உன்னை
புகழ்ந்து பலரில் புகலஒண் ணாதே;
சாற்றுமுன் வாழ்வையென் ணாதே – பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே”
விளக்கம்
பகுத்தறியும் பிறவி பெற்ற மனிதா! கடவுளின் பேரால் நிகழ்த்தப்படும் வேள்வி முதலிய சடங்கைச் செய்யாதே; செய்வோரின் இடங்களுக்கு செல்லாதே! பலருக்கு முன்னே உன்னை யாரும் புகழ்ந்து பேச இடம் தராதே! அடக்கமாகவே இரு! வெளியில் சொல்லுதற்கு முன்னே, கற்பனையான வாழ்வைப் பற்றிப் பெரிய அளவில் மனக்கோட்டைக் கட்டாதே. பிற அன்பர்கள் உன்னைக் காணும் நிலையில் நீ மிகுதியும் பணிந்து, அவர்களையும், அப்படியே பணியும்படி செய்து விடாதே!
பாடல் – 30
“கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி
காட்டி மயங்கியே கள்குடி யாதே
அஞ்ச உயிர்மடி யாதே – புத்தி
அற்றஅஞ் ஞானத்தின் நூல்படி யாதே”
விளக்கம்
உயர்ந்த ஒழுக்க பிறவியான மனிதா! நீ அறிவை மயக்கும் கஞ்சாவின் புகையைப் பிடிக்காதே; மதுவைக் குடித்து அதனால் வெறி பிடித்து மயங்கி, பிறர் அஞ்சும்படி அலையாதே; பிற உயிர்கள் அஞ்சித் துயரப்படும்படி துன்பத் தராதே; அறிவில்லாத இருளில் சேர்க்கும் நல்லறிவில்லாத நூல்களை (புத்தகங்களை) படிக்காதே; பாழ்பட்டு விடாதே ; அற நெஞ்சுடன் வாழ்க!
– கோமகன், சென்னை