நிழல் அல்ல நிஜம் – புத்தக விமர்சனம்
இந்தப் புத்தகத்தை தி.வள்ளி அவர்கள் எழுதி இந்த ஊரடங்கு காலத்தில் வெளியிட்டு இருக்கார்கள். இது ஒரு நோஷன்பிரஸ் வெளியீடு, அமேசானிலும் கிண்டில் வடிவத்திலும் கிடைக்கிறது – nizhal alla nijam puthaga vimarsanam.
இந்தப் புத்தகத்தினுடைய பிளஸ்.. இதனுடைய அட்டைப்படம். உள்ளே உள்ள கதைகளின் வரிசைக்கேற்ப கோர்வையாக, படத்தை, அந்தந்த கதைக்கேற்ப, அட்டையில் டிஸ்பிளே பண்ணியிருக்காங்க.
கதைக்குள்ள போறதுக்கு முன்னால, அவங்க இந்த கதைக்கு ஒரு அழகான முன்னுரை கொடுத்திருக்காங்க. இவை யதார்த்த வாழ்வியல் சிறுகதைகள்…. அதாவது யதார்த்த வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த கதாபாத்திரங்களை.. சம்பவங்களை.. சிறுகதையாக்கியிருக்காங்க. ஒவ்வொரு கதையும், வித்தியாசமான நடையில், வித்தியாசமான கதைகளாக இருக்கிறது. உதாரணமாக அசுரவதம்… கிராமத்து நடையில் எழுதியிருக்கறாங்க… இன்னும் சில கதைகள் ரொம்ப புரோபஷனலாயிருக்கு.
மரகத மாற்றம்
முதல் கதை ‘மரகத மாற்றம்’ இந்தக் கதையில விவாகரத்து பண்ண நினைக்கிற தம்பதி… அது அவங்க குழந்தையை எப்படி பாதிக்கும் என்பதை ரொம்ப அழகாக சொல்லி இருக்காங்க. குழந்தையுடைய கண்ணோட்டத்தில் கதையை நகர்த்தியிருக்கறாங்க.
‘அசுரவதம்’… இந்தக்கதையை அவங்க அழகான கிராமத்து நடையில கொண்டு போயிருக்காங்க. ஒரு பாசமான கிராமத்து ஜோடியை சுற்றி நடக்கிற கதை.
அடுத்தது ‘கோல்டன் அவர்ஸ்’. ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு முதல் ஒரு மணி நேரம் எவ்வளவு முக்கியம்…அந்த ஒரு மணி நேரத்தில நடக்கிறதை ரொம்ப யதார்த்தமாக கொடுத்திருக்காங்க.
ஒரு சில கதைகள் நம்மை ரொம்பவே பாதிக்கும்.. அதுல ஒன்னு ‘பொய்முகம்’ ஒரு வயதான பாட்டியை பாத்துக்க நியமிக்கப்பட்ட பெண்…. அந்த பாட்டி பேசறதே திரும்பத் திரும்ப பேசுகிற சுபாவம் உடையவர் அந்த பெண்ணோட வீட்லயும் அதே மாதிரி அவளுடைய தாய் நடக்க முடியாத நிலைமை.வேலைக்கு போகும் அந்த பெண் நோயாளியிடம் காட்டும் பரிவை, தன் தாயிடம் காட்ட முடியாத யதார்த்தமான அவலம்…
இதுதான் பொய்முகம் நாயகி. தினசரி வாழ்க்கையில ஆபீஸ்ல சிரிச்சு பேசற நாம அதேபோல வீட்ல இருக்கிற வயசானவங்க கிட்ட பேச முடியாது.. அதற்கான பொறுமை நம்மிடம் இல்லை… என்பதை அப்பட்டமாக காட்டுறாங்க. மிருதுவான வார்த்தைகளால் அவை இருந்தாலும் அது கூறும் உண்மை கன்னத்தில் அறைவது போல இருக்கிறது.
புரிந்துகொள் கண்மணி
அடுத்த கதை ‘புரிந்துகொள் கண்மணி’ அலுவலக ஆண் பெண் நட்பை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆண் பெண் சகஜமாக பழகும் இந்த காலகட்டத்திலும், சந்தேகம் என்கிற காட்டுத்தீ மனசுக்குள் வந்துவிட்டால் என்னவாகும் என்பதை விளக்குகிறது இக்கதை. அடுத்த கதை ‘களபலி’ அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்ட சிப்பாயாக இருப்பது கடைநிலை தொண்டர்களே! அந்த குடும்பத்தின் நிலையை வெட்ட வெளிச்சமாகிறது கதை.
கொடிக்கு காய் பாரமா?
இந்தத் தொகுப்பில் என் மனசுக்கு மிகவும் நெருக்கமாக பட்டது ‘கொடிக்கு காய் பாரமா?’ என்ற கதை. ஒரு பெண்மணி 7 குழந்தைகளை பெற்றவர்.ஏழ்மை நிலையிலும், குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குகிறார். ஆனால் அந்த தாயை கவனிக்க வேண்டும் என்று வரும்போது 7 பேரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள்… அதை உணரும் அத்தாய் ஒரு சேவை இல்லத்தில் சேர்ந்திடுறாங்க… அத்தாய் எழுப்பும் வினா,” ஏழு குழந்தைகளை ஏழ்மையில் ஒரு தாயால் வளர்க்க முடியும் போது ,வசதியாய் வாழும் ஏழு பிள்ளைகளால் அந்த தாயை பராமரிக்க முடியாதா? “என்பது தான் இந்த கதை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது – nizhal alla nijam puthaga vimarsanam
அவளுக்கென்று ஒரு மனம்
பூக்கள் எல்லாமே அழகு, என்றாலும் சில பூக்கள் நமக்கு பிரியமானவை. அது போல எனக்குப் பிடித்த இரண்டு பூக்களில் ஒன்று… ‘அவளுக்கென்று ஒரு மனம்’ ஒரு தாய் தன் குழந்தைக்காக வாழ்ந்து, பிறகு அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி போன பிறகு தனக்கென்று ஓர் உலகத்தை ஒரு தேட ஆரம்பிக்கிறார். அதை புரிந்து கொள்ளாத மகள்.’ஒவ்வொரு பெண்ணிடமும் பல திறமைகள் ஒளிந்திருக்கிறது… அதை பிள்ளைகளுக்காக தியாகம் பண்ணுவது நியாயமில்லை…’ என்பதை தந்தை அழகாக மகளுக்கு எடுத்துரைக்கிறார்.
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் முக்கியமாக பட்ட ஒரு கதை. ‘தரையில் விழுந்த மீன்கள்’ ஒரு சிறுமிக்கு ஏற்படும் பாலியல் கொடுமை…. அதிலிருந்து அவள் தாய் அவளை எப்படி வெளியே கொணர்கிறாள்.. வழக்கமாக இது ஒரு நியூஸ் ஆகத் தான் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படும் ஆனால் இந்தக் கதையில் சிறுமியை அவள் தாய் அதிலிருந்து எப்படி வெளியே கொண்டு வந்து ஒரு நல்ல வாழ்க்கைக்கு தயார் படுத்துகிறார் என்பதை விவரிக்கிறது… கண்டிப்பாக குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து தாய்மார்களும் படிக்கவேண்டிய கதையாக நான் இதைப் பார்க்கிறேன்.
இதுபோல நாம் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை மிக யதார்த்தமாக படம் பிடித்து காட்டுறாங்க. எனக்கு மிகவும் பிடித்த இந்த புத்தகம், உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.. நன்றி!
வைஷாலி பழனிசாமி, பேசும் புத்தகம் (வலையொளி)
அருமையான விமர்சனம்
புத்தக அறிமுகம் சிறப்பு
விமர்சனம் மிக நன்று. அனைத்து கதைகளின் தொகுப்பு ஒரு பூங்கொத்து. வாழ்த்துகள்.
ஆசிரியர் திரு. வள்ளி அவர்களுக்கு பாராட்டுகள். புத்தகத்தின் அட்டைப்படம் மிக அருமை.
கதை மற்றும் அட்டைப்படம் தேர்வு அற்புதம்.. விமர்சனமும் அருமை