கவிதை தொகுப்பு – 32
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சென்னையை சேர்ந்த ஜீவி (லக்ஷ்மி) அவர்களை அறிமுகம் செய்கிறோம். மேலும் ஆண்டாள்பிரசன்னா மற்றும் கவி தேவிகா ஆகியோர் எழுதிய இரட்டை கவிதைகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 32.
நினைவு தாண்டல்
பறக்காத இறகுகளை
பாறையில் தேய்த்து
போகி கொண்டாடி
புயலில் வேகமெடுத்து
மேலேறுகிறது
ஒரு வல்லூறு
பாறையிலிருந்து நழுவிய
சிறகுகள்
மெதுவாகப் பறந்து
கூட்டின் வெளி முள்ளில்
ஒட்டிக்கிடக்கிறது..
இன்னொரு காற்று
துரத்தும் வரைக்கும்.
– ஜீவி , சென்னை
சுயமிழந்த பாவைகள்
யாசகம் கேட்கவில்லை……
உரிமைகளை பறிக்காமல்….
உதாசீன படுத்தாமல்……
உள்ளன்போடு உறுதுணையாக……
ஊக்கம்தரும் தோழனாக…..
உணர்வோடு உயிராக……..
பிரியாமல் இணைந்திருக்கும்
வரம் கேட்கிறோம்……..
இப்படிக்கு
உணர்வுள்ள ஊமைகள்..
– கவி தேவிகா, தென்காசி
மார்கழிக் கோலம்
மணக்கோலம் கண்ட
மற்றும் … – kavithai thoguppu 32
காணத்தவமிருக்கும் மங்கையருமே…
வரைந்து மகிழந்திடுவரே..
மாக்கோலம்
பூக்கோலம்
பல வண்ணகோலம்
என பலவிதங்களிலே …
பார்ப்போர் விழிஉயர்த்திடும் வகைதனிலே தான் …
மார்கழி முன் பனிக்காலம்தனிலே!
கன்னியர் தம் கன்னி கழிந்திடவே காத்திருப்பர் …
மகர சங்கராந்தி எனும்திருநாள் வரும்
வேளைதனின் வரவுநோக்கியே..
தைபிறந்தால் வழிபிறக்கும் என்பதாலேயே!
மாதங்களில் நான் மார்கழி என
உரைத்திட்டானே மாதவனுமே!
பாவையவள் நோம்பிருந்து அடைந்தனளே
அம் .. மாதவனையே..
அதனாலே!
மங்கையராய் பிறப்பெடுக்க
மா -தவம்
செய்த நாமுமே
மார்கழி (மா.. க் ) கோலமிட்டே
மகிழ்ந்திருப்போம் வாரீரே!
– ஆண்டாள்பிரசன்னா, கோவை
நீங்கா நினைவுகள்
நியாயமற்று
நகரமாட்டேன் என்கிறது…..
நாட்களும் நிமிடங்களும்
நித்திலமேயுந்தன் நினைவுகளால்…….
இப்படிக்கு
இரவும் பகலும்…..
– கவி தேவிகா, தென்காசி
மழைக்கென்ன கதவா இருக்கிறது?
நகரும் கூட்டினை யார் திறந்ததோ
தலைகீழாய் விழும் பறவைகளைத்
தெறிக்க விடுகிறது நிலம்
நீந்தும் சிறகுகளுக்கு நதியை
அடையாளம் தெரிகிறது
நதி அறியாதவர்களுக்கு
சிறகுகளே வழிகாட்டும்
போதும் நீங்கள் தாழ்வாரங்களில்
பாத்திரங்களை நிரப்பியது
நுழைந்து செல்லுங்கள்
மழைக்கென்ன கதவா இருக்கிறது?
– ஜீவி , சென்னை
மண்புழு
மண்ணில் ஊர்ந்திடும் சிறு புழு நானே…
உரைத்திடுவேன் சற்றே செவிமடுப்பீரே..
அற்பப் பிறவி இவளென்றே
அலட்சியம் காட்டிடல் வேண்டாமே!
உழைத்து சலித்தே
ஓய்வெடுப்பான் உழவனும் தானே!
ஓயாமல் ஒழியாமல் மண்ணைக்குடைந்தே
உழுதிடுவேன் நானே!
எம்மில் ஏழாயிரம் வகைகள் என
அறிந்திட்டால் வியப்பால் வளைந்திடும் …
உம் புருவமும் தான் ..
எமைப்போலே!
சிவப்பு, இளஞ்சிவப்பு, சாம்பல் வெள்ளை,
கருப்பு என எண்ணிடலங்கா வண்ணங்களில்
நான் எழுந்து நெளிவதைக் கண்டீரோ?
முள்ளந்தண்டுலி வகையாமே ..
முறையாய் மண்ணை உமிழ்வோமே ..
வெட்டு ஒன்று துண்டு இரண்டு ஆகி
வேதனையுற்ற நேரத்திலும்
உயிர் பயம் கொண்டு சுருளாமல் உயிர்த்தெழுவோம் நாமே!
ஒளி நீங்கி இருள் பரவிட வெளிவந்தே
இணைந்து மகிழ்ந்தே
இனப்பெருக்கம் செய்தே பல்கிப்பெருகிடுவோம் யாமே!
பார்க்கும் திறன் அற்ற யாமே…
மோப்பத்திறன் மிகுதியால்
மாற்றுத்திறனாளிதான் ஆனோமே!
தொடுஉணர்ச்சி யால் பாதை தெளிந்தே
பகையும் உணர்ந்திடலானோமே!
தொட்டு த்தொட்டு உறவாடி ௯ட்டு குடும்பமாய் வாழ்ந்தே
கூடி மகிந்திருப்போம் அறிவீரோ?
மானிடரும் விலங்குகளும் வெளியேற்றும்
கழிவுகளை மகிழ்ந்தே உண்டு உரமாக்கி
மானிடர் வாழ்ந்திட உதவிடும்
மரபினைத் தொழிலாய்க் கொண்டோமே!
மண்ணில் பதினோரு வித சத்துக்கள்
மகிழ்வுடன் நிறைத்தே உய்ந்தோமே! அதுவே
இயற்கை உரமெனக் கொண்டாடும் பயிரின்
இனிய உணவாய் ஆனதுவே! – kavithai thoguppu 32
எம்மகத்துவம் அறியா மட மாந்தருமே
ஏதும் பலன் அற்ற நவீன பயிர்முறையிலே
ஏதுமறியா எமைக் கொன்று
எறிந்திடத் துடித்துத் துவண்டோமே!
பண்ணைமுறையில் சிலர் எம்மை பரிவுடன்
வளர்த்து மீட்டனரே அதனால் சற்றே
புத்துயிர் பெற்றே மகிழ்ந்தோமே!!
பாங்காய் இயற்கை விவசாயம் பல்கிப் பெருகி
பார் செழிக்க வாழ்வீரே!
மண்புழுவென எம்மை ஒதுக்காதீர்- உம்மை மன்றாடிக் கேட்டு விடைபெறுகிறேன்..
உலக விவசாயி தினம் தனிலே உமக்கு
உற்ற துணையுமாய் இருப்பவள் நானே!
இப்படிக்கு,
உழவனின் உற்ற தோழி!
மண்புழு.. மண் (ங்) காத்தாள்
– ஆண்டாள் பிரசன்னா, கோவை
இரட்டை கவிதைகள் நன்றாக இருக்கிறது
கவிதைகள் அனைத்தும் அருமை… மிக அருமை …யதார்த்தம்
கவிதைகள் நன்று.. வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் கவிஞர் பெரு மக்களே. அனைவரின் கவிதைகளும் மிக அருமை