என் இனிய ஹைக்கூ – புத்தகம் ஓர் பார்வை

ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை கவிதைகளை எழுதி அதைத் தொகுத்து நமக்கான வாசிப்பு இன்பத்தை இத்தொகுப்பின் மூலம் அளித்துள்ளார் மு.முருகேஷ் அவர்கள் – en iniya haikoo puthaga vimarsanam.

en iniya haikoo

இந்நூலின் முத்தாய்ப்பாக மூன்று கடிதங்கள் முன்னுரையாகவே இடம்பெற்றுள்ளன. பொன்னீலன் ஐயாவின் கடிதம்,
சின்னப்பபாரதி அவர்களின் கடிதம், கல்யாண்ஜி அவர்களின் கடிதம் வரிசையாக இடம்பெற்றுள்ளது புத்தகத்திற்கான பலம்.

முற்போக்கு சிந்தனைகள், அன்றாடம் தான் பார்க்கும் காட்சிகள், இயல்பான நிகழ்வுகள், கேள்வி கேட்கும் தொனி, என ஹைக்கூக்களை அழகுப் பூக்களாய் புத்தகம் முழுவதும் நமக்குத்தூவி மணம் வீசியிருக்கிறார் கவிஞர்.

நான் படித்து ரசித்த
சில ஹைக்கூக்களை இங்கே நீங்களும் ரசித்து மகிழுங்கள்.

“வெட்கப்பட்டன சுவர்கள்
முதுகில்
தேர்தல் வாக்குறுதிகள்”

ஆம் எல்லாம் சூழலுக்கும் பொருந்தும் வரிகள். நான் மிகவும் ரசித்த வரிகளும் இதுவே.

“சாலையில் புகையும் சிகரெட்
கருணையோடு அணைத்தது
மழைத்தூறல்”

எல்லாம் சரிதான்…
இன்றோ சிகிரெட்டை அணைக்கும் மழைத்தூறலைத்தான்
நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் கவிஞரே..

“காக்கை உட்கார
பழம் விழுந்தது
கீழே பசித்துக் கிடந்தவன்”

ஆம் பசியாற்றிய காக்கைகளும்
இப்போது பசித்து கிடந்துவனுக்கு அருகில்..
தானும் பசியோடே…

“பிறை தெரியாத பக்ரீத்
ஆயுள் அதிகமானது
ஆடுகளுக்கு”

ஆடுகளின் ஆயுள் கூடினாலும்
நமக்கோ அதன் மீதான ஆசைகள் குறையவில்லையே!

“வெட்டப்பட்டன மரங்கள்
வந்தமருங்கள் குருவிகளே…
காத்திருக்கும் ஆண்டெனாக்கள்”

கவிஞரே இன்றும் வெட்டப்படுகின்றன மரங்கள்.
மிச்சமிருக்கும் குருவிகள் மட்டுமே காத்திருக்கின்றன நவீன
ஆன்டெனாக்களுக்காக..

“வர்ணம் பூசும்
அழகான கவிதைகள்
அடுப்புகள்”

ஆம் அடுப்பங்கரையே அடுப்பு பூசிய எழில் வண்ணங்களில்…

‘குருடன் விபத்தானான்
வேடிக்கை பார்த்தவர்கள்
குருடானார்கள்”

ஆம் இன்றும் கண்ணிருந்தும் குருடர்களாய் பலர்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள
முத்திரை ஹைக்கூக்கள்…

“வீடு கட்டலாமோ
யோசித்தான்
ரேஷன் அரிசியில் கற்கள்”

“சுவாசிப்பதே இல்லை
பிளாஸ்டிக் பூக்கள்
புகை படர்ந்த காற்று”

“காதோடு பேசவில்லை
வண்டின் வெளி நடப்பில்
அழும் பூக்கள்”

“அடுப்பெரிக்க
சுள்ளி பொறுக்குவாள்
விறகு வெட்டியின் மனைவி”

“இடைத்தேர்தலுக்கு
தயாராகும்
வர்ணமிழந்த சுவர்”

மேற்கண்ட ஐந்து ஹைக்கூக்களும் சிறப்பு வாய்ந்த கவிதைகளாய் முத்திரைக்கவிதைகளாய் நான் பார்க்கிறேன் – en iniya haikoo puthaga vimarsanam.

அற்புதமான எழுத்தாற்றலை கவிஞர் முருகேஷ் அவர்களின் மூன்றே வரிகளில் என்னால் பார்க்க முடிந்தது. மேலும்
இத்தொகுப்பில் ஆங்காங்கே காதல் ஹைக்கூக்களும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

வாசகனைக் கவரும் நறுக்குகளாய் கவிஞர் தூவி உள்ள ஒவ்வொரு ஹைக்கூக்களும் இத்தொகுப்பில் மூலம் என் மனதில் இடம்பிடித்து விட்டது.
உங்கள் மனதில் இடம் பெற வேண்டாமா…

என் இனிய ஹைக்கூ…
அன்று மட்டுமல்ல…
இன்றும் இனிமை…
என்றும் பெருமை!

என்சிபிஎச் வெளியீடு: முதல் பதிப்பு 2007, பக்கங்கள் 158, விலை 75, நூல் தேவைக்கு என் சி பி ஹெச்… 044-26251968

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

You may also like...

2 Responses

 1. Jothi bai.S.P. says:

  ஹைக்கூ கவிதை சித்திரை நிலவாய்
  முத்திரை பதிக்கிறது
  சக்திவேலாயுதம் அவர்களின்
  உயிர்ப்பான விமர்சனம்
  உன்னதம் சேர்க்கும் கவிதைக்கு!

 2. தி.வள்ளி says:

  கவிஞரின் நூல் விமர்சனம் அருமை ..சாரலாய் கவிதை தூரல்கள் ..அனுபவித்து மகிழ்ந்தோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *