கனவு பூக்கள் – மனதைத்தொடும் சிறுமியின் கதை
எல்லா விதைகளும் முளைத்து விடுவதில்லை, மலர நினைக்கும் மொட்டுகள் எல்லாம் பூத்து விடுவதுமில்லை. மலர்ந்திட இயலா ஏக்கம் கொண்ட கனவுப் பூக்கள் இவ்வுலகில் எத்தனை எத்தனையோ?? யாரறிவார்??? [கவிஞர் கவி தேவிகா அவர்களின் மனதைத்தொடும் சிறுமியின் கதை] – kanavu pookkal sirukathai.
நான்கு வழி சாலையில் எதையும் கண்டுகொள்ளாமல் பச்சை வண்ண சமிக்ஞையை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் .ஆனால் சிவப்பு வண்ண சமிக்ஞைக்காக இமைக்காமல் பூத்திருக்கிறது இங்கே ஒர் ஏக்கப் பூ…
வண்டிகள் நின்று கொண்டிருக்கும் நிமிடங்கள் மட்டுமே இவள் தன் பூக்களை விற்பதற்கான வாய்ப்பு. வண்டிகளின் அருகில் ஓடி சென்று, கதவுகளைத்தட்டி , கூவி கூவி பூ விற்கிறாள். “கரு கரு”விழியுடன் , குட்டை பாவாடை சட்டை , இரட்டை ஜடை துறு துறு வென கண்ணை கவர்ந்தாள் அந்த பத்து வயது சிறுமி .
கடைசி முழம்
மாலை மங்கும் நேரம் சாலையைக் கடக்க வேண்டி நானும் அந்த நான்கு வழிச்சாலையில் பச்சைச் சமிக்ஞைக்காக காத்திருந்தேன். என் அருகில் ஓடிவந்த அச்சிறுமி ,”அக்கா பூ வாங்கிக்கோங்க” என்றதும், “வேண்டாம் ” என மறுத்தேன்.
மறுபடியும் “இதுதான் கடைசி முழம் . வாங்கிட்டா நான் வீட்டுக்கு சீக்கிரமா போவேன்” என்றாள் – kanavu pookkal sirukathai.
சில்லரை இல்லை என்று மறுத்தேன் .இருப்பதைக் கொடுங்க போதும் என்றாள் விடாப்பிடியாய். முழம் எவ்வளவு ???
பத்து ரூவா தான் அக்கா…
கைப்பையில் துலாவி இரண்டு ரூபாகுறைவாக இருக்கிறது என்று அவளிடம் நீட்டினேன். பரவாயில்லை இருப்பதை கொடுங்கள் என்று வாங்கி விட்டு என் மறுமொழிக்கு காத்திராமல் ஓடிச் சென்று மறைந்து விட்டாள். சாலையை கடந்த என்னால் ஏனோ அச்சிறுமியை கடந்து சென்றிட முடியவில்லை மனம் அவளை எண்ணிக் கொண்டிருந்தது…..
பிஞ்சு புன்னகை
பிறிதொரு நாளில் அதே நான்கு வழிச்சாலையில் என் கண்கள் அவளைத் தேடின . அச் சிறு(மி) பூ பூக்களை விற்பதில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். பச்சை வண்ண சமிக்ஞை விழுந்ததும் வண்டிகள் நகர அவள் நடைப்பாதை ஓரமாய் நின்று கொண்டாள்.
ஒரு நொடி அவளிடம் பேச ஆசை பிறந்தது ஏனோ?? அவளை நோக்கி நடந்தேன்.முன் பற்கள் தெரிய என்னைப்பார்த்து சிரித்தாள்…. கபடமற்ற அந்த பிஞ்சு புன்னகைக்கு கோடிகள் கொடுக்கலாம்…. என்அதிர்ஷ்டம் நானும் அவளை போன்ற தெருக்கோடி மலர் என்பதே…
பூ வேணுமா என்றாள்.
இதுதான் சமயம் என தலையை அசைத்துக்கொண்டே … பாப்பா உன் பெயர் என்ன??
என்றதும் , வசந்தா என்றாள்.
மனதுக்குள் உச்சரித்தேன்.. வசந்தா….. ஆம். என்னை போல் பெயரளவில் மட்டும் தான் வசந்தம். வாழ்விலோ..??? அவள் கொடுத்த பூவை வாங்கியதும், “படிக்க பள்ளிக்குச் செல்லாமல் பூ விற்கிறாயே ஏன்???.”
“நான் சின்னப்புள்ளையா இருக்கும் போதே அப்பா செத்துபோச்சு. அம்மா ரெண்டு வீட்டில பாத்திரம் தேய்ச்சு என்னை வளத்தாங்க .போன மாசம் அம்மாவுக்கு உடம்புக்கு முடியல அதான் நான் ஸ்கூல் போகாம பூ விக்கிறேன்.” கண் கலங்கியவாறு சொன்னாள் ..
மறு வார்த்தை பேச நா எழவில்லை. அவளே தொடர்ந்தாள்..
அக்கா, “கொஞ்ச நாளைக்கு தான் அம்மாவுக்கு உடம்பு சரியானதும் நான் மறுபடியும் பள்ளிக்கூடம் போவேன்.எனக்கு நிறைய படிச்சி பெரிய ஆளா ஆகி நிறைய காசு சேர்த்து இந்த மாதிரி சிவப்பு கலர் பெரிய கார் வாங்கி அம்மாவைக் கூட்டிக்கிட்டு ஊரை சுத்தணும் ரொம்ப ஆச”,.. சொல்லும் அந்த சிறுமியின் கனவுகள் ஏக்கமாக, காட்சிகளின் வடிவாக கண்களில் ஓடியபோது ..
“அவ்வளவுதானா உன்னாசை. இது போதுமா???? “.
“இல்ல என்ன மாதிரி நிறைய புள்ளைங்க பூ, பேனா னுவிக்கிறாங்க.. சின்ன சின்ன கடையில வேலை பாக்குறாங்க அவங்கள எல்லாம் படிக்க வைக்க ஏதாச்சும் செய்யனும். நான் நிச்சயமாக செய்வேன்”, என்றாள். இம்முறை எனது கண்கள் கலங்கின…. அதற்குள் சமிக்ஞைகள் விழ ஆரம்பிக்க, எனக்கு அவள் விடை கொடுத்து சென்றாள் – kanavu pookkal sirukathai.
20 வருடத்திற்கு முன் என்னையே திரும்ப பார்த்ததாக மனம் கலங்கியது. தாய் தந்தையை இழந்து ஏழையாக பிறந்ததால் நானுற்ற துயரங்கள், எதிர்கொண்ட போராட்டங்கள், எத்தனை எத்தனை ..
இன்னும் முடிந்துவிடவில்லை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். என் போராட்டத்திற்கு பின்னணியில் பெரிதாக காரணங்கள் ஒன்றுமே இல்லை. சாதாரண வாழ்வுக்கும், எல்லா மனிதர்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே எனது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன .
விடைகாணவியலா வினாக்கள்
இங்கே ஏழைகள் வாழ தகுதியற்றவர்களா ???..வாழ்க்கை. நாம் வாழும் இந்த பிரபஞ்சம் அத்தனை சுலபமாக வாழ்வை வாழ்வதற்கு வழி வகுப்பதே இல்லை. புன்னகை பூக்கும் பூமியில் போராட்டங்களை எதிர்கொண்டே நித்தமும் வாழவேண்டி இருக்கிறது. சிலருக்கு வாழ்வதில் துன்பம், ஒரு சிலருக்கு வாழ்க்கையில் துன்பம் ஆனால் என்னைப் போன்ற பலருக்கும் அடிப்படை வாழ்வு அமைவதே பெருந்துன்பம். எங்களை போன்ற ஏக்க பூக்களின் கனவுகள் ஏராளம்….
விடைகாணவியலா வினாக்கள் தாராளம் ….. முடிவில்லா பயணத்தின் தொடரும் ஏக்கமாக மலர்ந்து கொண்டே யிருக்கிறது கனவு பூக்கள்…
– கவி தேவிகா.
மனதை வருத்தும் சிறுகதை
கதையின் தலைப்பு மிக அருமை. இத்தகைய கனவு பூக்களை அங்கங்கே சந்திக்க தான் செய்கிறோம். புகைவண்டி நிலையத்தில்.. சிக்னல் அருகே.. என்று அவர்களுடைய வாழ்க்கைக்கு பின்னணி ஒரு நிமிஷம் நம் மனதை வருத்த படுத்தினாலும் அதை கடந்து செல்கிறோம்..அவர்கள் மனதில் உள்ள ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் மிக அருமை பாராட்டுக்கள் சகோதரி …
மனதை வருடியது கனவு பூக்களின் மணம். ஆசிரியருக்கு பாராட்க்கள்.