பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவன் பழம் – ஆன்மிக விளக்கம்

இந்திரன்பழம், பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவன் பழம் பற்றி அருமையான ஆன்மிக விளக்கம் (காரைக்கால் அம்மையாரை அம்மை என்றழைத்த சிவன்) – karaikkal ammaiyar lord shiva

karaikkal ammaiyar lord shiva

பிரம்மா – இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை. விஷ்ணு – அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர்.

ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.

சிவன் – இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை. சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள். ஏனெனில், இவர் தொப்புள் கொடி உறவில் பிறக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காக தொப்புள் இல்லாமலே சிவன் சிலையை வடிப்பார்கள் விஷ்ணு எடுத்தது”அவதாரம்” (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுத்தது”அவஸரம்” (பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்) – karaikkal ammaiyar lord shiva.

சிவன் “அம்மே” என்று அழைத்தது

சிவன் தாமே முன் வந்து “அம்மே” என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை மட்டுமே! இந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு வந்துள்ளது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர். அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள்.

அவள்தான் அனசூயை. அனசூயை – மஹா தபஸ்வினி. அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி. அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள்.

அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் ஏற்கனவே வரம் பெற்றிருந்தார்கள். அந்த வரத்தை மெய்ப்பிப்பதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் அத்ரி அனசூயை தம்பதியரிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள். அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.

அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள். அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர்.

தமது கணவர்களைத் தேடி

அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை – குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர். நெடுநாட்களாக – பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை. பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.

வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர். இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னை அநசூயையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள்.

குழந்தை வடிவில் இருந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும், தங்களைத் தாய் அநசூயையிடமிருந்து இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணி, மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன்

ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று. பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் – பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.

விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம். சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்.

பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.

சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன்பாக, தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான். இந்திரனைக் காணாமல் நெடுநேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான்.

நேந்திரன் பழம்

தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான். இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு தான் இந்திரன் இல்லை (ந: இந்திரன்) என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.

முப்பெருந்தேவியரும் அநசூயையிடம் அத்ரியின் ஆசிரமத்தில் குழந்தைகளாக இருந்த தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அநசூயைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது. அநசூயை நெஞ்சம் கனக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள்.
அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.

தத்தாத்ரேயர்

மஹாவிஷ்ணுவிடம் அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், விஷ்ணு அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை மும்மூர்த்திகளும் உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர். அவரே தத்தாத்ரேயர். அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி – அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார்.

அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார். தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார். உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.

ஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு. ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர்தான். தத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.

தத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார்.

பரசுராம கல்பம்

அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது. தத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர். இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸ்தோத்திரங்களாக தொகுத்தார். அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.

You may also like...

5 Responses

 1. Rajakumari says:

  விளக்கம் நன்றாக விளங்குகிறது நன்றி

 2. Kavi devika says:

  ஆன்மீக விளக்கம் அருமை.

 3. தி.வள்ளி says:

  அருமையான பதிவு. இதுவரை அறியாத நிறைய ஆன்மீக தகவல்கள்…மும்மூர்த்திகளின் தாய்ப்பாசம்… பழங்களின் பெயர் காரணங்கள்… நிறைய விஷயம் தெரிந்து கொண்டோம்..பதிவிற்கு நன்றி

 4. Kasthuri says:

  மும்மூர்த்திகள் , பரசுராமர், தத்ரேயர் போன்றோர் பற்றியும் அறிய தகவல்களையும் தெரிந்துகொண்டோம்

 5. நிர்மலா says:

  அருமையான ஆன்மீக தகவலுக்கு நன்றி.